‘சர்கார்’ கதை விவகாரம் ஒரு வழியாக கோர்ட் மூலம் தீர்க்கப்பட்ட நிலையில் ஒருபுறம் ஏ.ஆர்.முருகதாஸ் ‘வதந்திகளை நிறுத்துங்கள்…’ என ட்விட்டரில் கூறிக்கொண்டிருக்கிறார்.
(அப்படியானால் வதந்தி பரப்பக் காரணமே அவர்தானே..? கே.பாக்யராஜ் கூறிய அறிவுரையின் பேரில் கோர்ட்டுக்கு வெளியிலேயே சுமுகமாக இப்போது முடித்த பிரச்சினையை அப்போதே முடித்திருந்தால் ஏன் வதந்தி பரவப் போகிறது..? இப்போதும் கோர்ட் தலையிட்டதால்தானே அவர் சமரசத்துக்கு வந்திருக்கிறார்..?)
இன்னொரு பக்கம் கே.பாக்யராஜின் பேட்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் எவ்வளவு புண்பட்டிருப்பார் என்பதும் அதைக் கேட்டால் புரிகிறது. ஒரு உதவி இயக்குநருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பெருமையை வாங்கித் தருவதற்காக அவர் பட்ட கஷ்டத்தையும் சிரித்துக் கொண்டே கூறினார்.
“என்னை விஜய்க்கு எதிரானவர் போல் பேசினார்கள். என் மகனே விஜய்யின் ரசிகனாக இருக்க நான் ஏன் விஜய் படத்துக்கு எதிராக இருக்கப் போகிறேன்..? அதற்காக அவனையும் திட்டித் தீர்த்தார்கள்.
ஆனாலும், இந்தப் பிரச்சினை பெரிதான நிலையில் நானே விஜய்க்கு போன் போட்டு நிலைமையை விளக்கினேன். ஏனென்றால் என் மகன் சாந்தனுவின் திருமணத்துக்கு நாங்கள் அழைத்து வந்து தாலி எடுத்துக் கொடுத்தவர் விஜய்.
அப்போது அவர், “ஏ.ஆர்.முருகதாஸும் கோர்ட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டதால, உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க…” என்றார். “எனக்காக இதைச் செய்யுங்க…” என்று கேட்காமல் இப்படி அவர் நியாயமாகப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது..!” என்றார் கே.பாக்யராஜ்.
மேன்மக்கள் மேன்மக்களே..!