கல்வி கற்கவே ஏழை மாணவர்கள் திண்டாடும் இந்நாளில் அப்படி உழைத்துப் படித்தும் தேர்ச்சி அடைய முடியாத சூழலை உருவாக்குகிறார்கள் கல்வி மாஃபியாக்கள்.
ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்குக் காரணமாக கல்வித்துறையில் என்ன விதமான ஊழல் நடைபெற சாத்தியம் இருக்கிறது என்பதையும் ஒரு திரில்லராக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஏ. சற்குணம்.
கிராமத்தில் மீன்பிடித்து விற்று தன் மகளையும், மகனையும் வளர்க்கும் பெண்மணி அகாலமாக இறந்து போகிறார்.
அவர்களில் நரேன் மணி நல்ல படிப்பாளியாக இருந்து ஐஏஎஸ் தேர்வுக்குத் தன்னை தயார் படுத்தி வருகிறார். இந்நிலையில் அம்மா இறந்து போகவும் வேறு வழியின்றி அவரும் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு சகோதரியுடன் சேர்ந்து அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இன்னொரு பக்கம் ஒரு மலை கிராமத்துக்கு டிஎஸ்பியாக பொறுப்பேற்க வரும் அதிதி பாலனை அவருக்குத் தெரியாமல் அதே காரில் பயணம் செய்யும் துஷாரா விஜயன் தாக்கிக் கடத்துகிறார்.
அதிதி பாலனை விலங்கில் பூட்டி வைத்துவிட்டு அவர் ஏற்க வேண்டிய டிஎஸ்பி பொறுப்பை அவரது ஆவணங்களை பயன்படுத்தி துஷாரா விஜயன் ஏற்றுக்கொள்கிறார்.
துஷாரா விஜயன் அந்தப் பொறுப்பை ஏற்க பின்னணியில் இருந்து அப்பாஸ் உதவுகிறார். நால்வர் கூட்டணியாக செயல்படும் இவர்களின் நோக்கம் என்ன என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் குரூப் தேர்வுகள் அந்த மலை கிராமத்தில் நடக்கவிருக்க, அது தொடர்பாகத்தான் இந்த கடத்தல் மற்றும் ஆள் மாறாட்ட நாடகங்கள் நடக்கின்றன என்பது நமக்குப் புலனாகிறது.
ஆரம்பத்தில் அதிதி பாலனைக் கடத்தி அவர் குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டி வழிக்குக் கொண்டு வரும்போது துஷாரா விஜயனை பார்ப்பதற்கு பயங்கர வில்லி போல் தோன்றுகிறது.
குடும்பத்தைப் பிரிந்து வந்து, தனிமையில் அடைபட்டுக் கிடக்கும் அதித்தி பலனைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபமே மிஞ்சுகிறது.
ஆனால் கதை நகர்த்தலில் நாம் எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து சுவாரஸ்யப்படுத்தி விடுகிறார் இயக்குனர் சற்குணம்.
ஏழு எபிசோடுகள் கடந்தது தெரியவில்லை – ஒரு இரண்டரை மணி நேரப் படம் மட்டுமே கடந்த அனுபவத்தில் படு விறுவிறுப்பாக காட்சிகளை அடுக்கி இருக்கிறார் அவர்.
எஸ் பி அலுவலகத்தில் வந்து டிஎஸ்பியாக சார்ஜ் எடுக்கும் துஷாரா, தன்னை அதித்தி பலனாக காட்டிக் கொள்ளும் காட்சிகள் படு திரில்லானவை.
ஒரு டிஎஸ்பியாக ஆள் மாறாட்டம் செய்வது அத்தனை எளிதானதா என்ன..? அதிலும் அதிதி பலனை ஏற்கனவே பார்த்து பழக்கம் உள்ள இரண்டு காவல் அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் பணிபுரிய அவர்களை துஷாரா சமாளிக்கும் விதம் அலாதியானது.
அதேபோல் சொல்லாமல் கொள்ளாமல் அதிதி பாலனைப் பார்க்க அவரது அம்மாவும் குழந்தையும் அலுவலகத்துக்கு வந்துவிட, அவர்களை துஷாரா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதில் நம் நாடித் துடிப்பு எகிறி விடுகிறது.
அதிதி பலன் நடிப்பில் எந்த குறையும் இல்லை. எந்தப் பாத்திரமானாலும் அதில் தன்னை சரியாக பொருத்திக் கொள்பவர் இதில் டிஎஸ்பியாக வருவது மிக பொருத்தமாக இருக்கிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு அவர் மேல் நமக்கு பரிதாபம் ஏற்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பிற்பகுதியில் அவர் மீது கோபம் ஏற்படுவது அந்தப் பாத்திரத்தின் வெற்றி.
அதேபோல் துஷாராவின் நடிப்பும் அமர்க்களம். ஆரம்பத்தில் முரட்டு வில்லியாக தோன்றினாலும் அவரது கண்ணீர் மல்கும் பிளாஷ்பேக் தெரிய வரும்போது அவர் செய்வது தவறுதான் என்றாலும் அதில் அவர் வென்று விட வேண்டும் என்று துடிக்கிறோம்.
துஷாராவுக்கும் அப்பாசுக்குமான தொடர்பு நெகிழ்ச்சியானது. நடிப்புக்கு ரீ என்ட்ரி ஆகி இருக்கும் அப்பாஸ், இதில் பொருத்தமான வேடம் ஏற்று அசத்தியிருக்கிறார்.
மேற்படி கலைஞர்கள் நமக்கு அறிமுகமானவர்கள் ஆக இருக்க, ஓகே பாத்திரத்தில் வரும் நரேன் மணி தன்னுடைய நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி நம்மை மிரள வைத்து இருக்கிறார்.
துஷாராவின் தேவையும், நரேன் மணியின் தேவையும் வேறாக இருந்தாலும் இருவரும் ஒரே படகில் பயணித்த கல்வி மறுக்கப்பட்டவர்கள் என்று தெரியும்போது, அவர்களது கோபம் நியாயமானதாகவே தோன்றுகிறது.
வளர்ந்த நரேன் மணியின் அக்காவாக வரும் வசுந்தரா, சில காட்சிகளே வந்தாலும் தன் அசாத்தியமான நடிப்பில் பரிமளிக்கிறார்.
அழகான மலை வாசஸ்தலத்தைப் பிடித்து விட்டதால் படத்தின் களம் அத்தனை வளமையாகவும், அழகானதாகவும் இருக்கிறது.
இப்படி ஒரு லொகேஷன் கிடைத்து விட்ட்டதால் ஒளிப்பதிவாளர் அருண் அமரேந்திரன் தன் மொத்த வித்தையையும் கொட்டி நம் கண்ணில் வண்ணங்களை விரித்து இருக்கிறார்.
முதன்முறையாக சாம் சிஎஸ்சின் இசை உறுத்தாமல் நம்மை கதையுடன் ஒன்ற வைத்துப் பயணித்திருக்கிறது. அதுவும் அந்த தீம் மியூசிக் வேற லெவல்.
ரிச்சர்ட் கெவின். ஏ.வின் படத்தொகுப்பம் அபாரம்.
நமக்கு நன்றாகத் தெரிந்த ஊர்களையே கொஞ்சம் கொஞ்சம் பெயரை மாற்றி எடுத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்தந்த ஊர்களின் பெயரைச் சொல்வதால் என்ன பிரச்சனை வந்துவிடும் என்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக புஷ்கர் – காயத்ரி இருக்க, வால்வாட்சர் பிலிம்ஸ்- க்காக இந்தத் தொடரை தயாரித்திருக்கிறார்கள் கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, மற்றும் எஸ் நந்தகுமார்.
குரூப் தேர்வில் எல்லாம் ஊழல் செய்து விட முடியுமா என்கிற கேள்விக்கு ஏன் முடியாது என்கிற விதத்தில் துல்லியமான களப்பணி செய்து அதை நியாயப்படுத்தி இருக்கும் திறமை அசாத்தியமானது.
கடைசியில் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதாக தோன்றினாலும் இந்த சீரிஸ் இத்துடன் முடியவில்லை என்று நம்மை இன்னும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர்.
ஆக EXAM சீசன் 2 வுக்கு இப்போதே தயாராகலாம்..!
– வேணுஜி