June 30, 2026
  • June 30, 2026
Breaking News
June 30, 2026

காட்டாளன் திரைப்பட விமர்சனம்

By 0 9 Views

சமூக.விரோதச். செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட பழங்குடியின மக்களைக் காப்பாற்றப் போராடும் நாயகனின் கதை.

யானைகளின் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் வேலையைச் செய்து வருகிறார் சுனில். அதில் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அந்த வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியின மக்களையும் தன் அடிமைகளாக வைத்து தந்தக் கடத்தல் வேலையைச் செய்து வருகிறார்.

ஆனால், அந்தக் கடத்தல் வேலையைத் தன் வசப்படுத்த நினைக்கும் அரசியல் செல்வாக்குள்ள கபீர் துகான் சிங், ஒலியின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களைப் பிடிக்கிறார்.

போலீஸ் வசமிருக்கும் தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களம் இறக்கி இழந்த தந்தங்களை மீட்கிறார். அத்துடன் ஆண்டனி வர்க்கீசின் உதவியுடன் மீண்டும் தந்தங்களை கடத்துகிறார்.

ஒரு கட்டத்தில் கிராமவாசி ஒருவருக்கான நியாயத்தை ஆண்டனி வர்கீஸ் கேட்க, அவருக்கு எதிராக சுனில் செயல்பட, பதிலுக்கு ஆண்டனி வர்கீஸ் பழங்குடியின மக்களை சுனிலின் பிடியில் இருந்து மீட்க முடிவெடுக்க, அதன் முடிவு என்னவென்று சொல்வதே ‘காட்டாளன்’.

நாயகன் ஆண்டனி வர்கீஸ் பாதி படத்தில் தான் வருகிறார் என்றாலும் நடிப்பில் தேறி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருப்பவர், பேச்சை குறித்து பெர்பார்மன்சால் பலம் சேர்த்திருக்கிறார்.

வில்லன் சுனில், முறைகேடான  முரட்டுத்தனத்தால் மிரட்டுகிறார். அதற்காக நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் பலாத்காரத்தில் ஈடுபடுவது குமட்டுகிறது. மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ஆங்கில பட நடிகர்கள் அட்டகாசமாக இருக்கிறார்..

முக்கால்வாசி படத்தில் அறிமுகமாக துஷாரா விஜயன், தன் இருப்பை நியாயப்படுத்தும் விதத்தில் பங்களித்திருக்கிறார்.

இவர்களுடன் பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் இருட்டும் காடுகளும் நம்மை மேலும் பயமுறுத்தி இருக்கின்றன. ஆனால் அத்தனை இருட்டிலும் பிரம்மாண்டத்தை உணர வைத்திருப்பது சிறப்பு.

பெரும்பாலும் படத்தை காப்பாற்றி இருப்பவர் ரவி பஸ்ரூர்தான். இப்படி ஒரு முரட்டு படத்துக்கு அவரது இசை வலு சேர்க்கிறது 

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை பெரிதாக ஈர்க்கவில்லை. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒருவித சலிப்பு ஏற்படுகிறது.

அத்துடன் இலங்கையில் இல்லாத யானைகளா… அங்கு இல்லாத தந்தங்களா..? எதற்காக அவர்கள் இங்கிருந்து தந்தங்களை பெரிய விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுக்க இயக்குநர் பவுல் ஜார்ஜ் முயற்சித்து இருக்கிறார். அதற்காகவே இன்றைய ட்ரெண்டின் படி கடைசி காட்சியில் திடீரென்று லோகேஷ் கனகராஜை அறிமுகப்படுத்தி அடுத்த பாகத்துக்கான லீடை கொடுத்திருக்கிறார்.

படம் முழுதும் எந்த நேர்மையும் இல்லாமல் ஒரு கடத்தல் தொழிலையே சொல்லிக் கொண்டிருப்பதில் சுவாரசியம் குறைவாகவே இருக்கிறது. 

காட்டாளன் – கடத்தல்காரன் என்றே சொல்லலாம்..!

– வேணுஜி