August 25, 2026
  • August 25, 2026
Breaking News
June 30, 2026

சிங் கீதம் திரைப்பட விமர்சனம்

By 0 163 Views

39 வருடங்களுக்கு முன் ஒரு உலக முயற்சியாக உலக நாயகன் கமலவை வைத்து வசனமே இல்லாமல்… ஆனால் பேசும் படம் என்று ஒரு வித்தியாசமான படத்தை எடுத்து பேச வைத்த இயக்குனர் சங்கீதம் சீனிவாசராவ் இத்தனை வருடங்கள் கழித்து, என்பது கடந்த தன் வயதில் இன்னும் ஒரு புதிய முயற்சியாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். 

அதில் வசனமே இல்லாமல் இருந்தது போல் இந்த படத்தில் வசனங்கள் எல்லாமே பாடலாக இருக்கின்றன. இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள எவ்வளவு தைரியம் வேண்டும் பாருங்கள்.

படத்தின் கதை இதுதான்.

குறுக்கு வழியில் உயர நினைக்கும் நாயகன் அயான், மோசடி குற்றத்தில் ஈடுபட்டு போபால் சிறையில் சில வருடங்கள் கழிந்த பின்பு விடுதலை ஆகிறார். வெளியே வந்ததும் அவருக்கு அதிர்ஷ்ட காற்று அடிக்க, அவரது அப்பாவின் சொத்து பத்திரம் ஒன்று கிடைக்கிறது.

அதை விற்க போனால் அந்த இடமே பாலைவனமாக கிடக்கிறது. அங்கே அங்கே தங்கம் கிடைக்கும் என்ற ஆவலில் சுரங்கம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எனவே, கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, தனது நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து ஓடிவிட திட்டம் போடுகிறார். ஆனால், அவரது திட்டம் நிறைவேறாதபடியும், அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும் அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதன் மூலம் அந்த ஊரில் உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட பாடலாக பாடும் விநோதமான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மக்கள் மட்டும் அல்ல, அந்த ஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில் வெளிப்படுத்துகிறது. மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட பாடலாக பாடுவதை, குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருத, அந்த சாபத்தில் இருந்து விடுபட்டார்களா?, பணத்தோடு ஓடிவிட நினைத்த நாயகன் அயானின் திட்டம் நிறைவேறியதா ? என்பதை வித்தியாசமான முயற்சியோடு சொல்வதே ‘சிங் கீதம்’.

’பேசும் படம்’ மூலம் உரையாடல்களே இல்லாத ஒரு படத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், உரையாடல்கள் அனைத்தும் பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்? என்ற மற்றொரு புதிய மற்றும் வித்தியாசமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி என்றாலும், அதை சரியான முறையில் திரையில் கொண்டு வருவதற்கு எத்தகைய கடுமையான பணிகளை கடந்திருப்பார்கள், என்பதை ஒவ்வொரு பிரேமிலும் பார்க்க முடிகிறது. வித்தியாசமான ஃபேண்டஸி பாணியில் திரைக்கதையை கையாண்டிருந்தாலும், மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கை அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அதே இயற்கையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், என்ற மெசஜை திரை மொழியில் அழகியலோடு சொல்லி பார்வையாளர்களை யோசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அயான், கலகலப்பான கதாபாத்திரத்தில் ஜாலியாக வலம் வந்தாலும், அம்மா செண்டிமெண்ட் மற்றும் தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மரங்களையும், இயற்கையையும் காப்பதற்கு போராடும் கெளரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஹல்யா பம்ரூ துறுதுறு நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.

தங்க சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபூடி, தனது அளவான நடிப்பு மற்றும் அழகான எக்ஸ்பிரஷன் மூலம் கவர்கிறார்.

சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என அனைவரும் தங்களது திரை இருப்பு மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அங்கூர்.சி உண்மை எது, செயற்கை எது என்று கண்டறிய முடியாதபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். அதிலும், வறண்ட நிலப்பரப்பில் பயணிக்கும் கதையையும், அந்த மண்ணின் மைந்தர்களையும் காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

பாடல் வரிகளுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள் மத்தியில் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை பாடல்களாக ஒலிக்கச் செய்திருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தனது சிறப்பான பணி மூலம் ஒட்டுமொத்த படத்தையும் கொண்டாட வைத்திருக்கிறார். பேசும் வார்த்தைகளுடன், தனிப்பாடல்களையும் சிறப்பான முறையில் கொடுத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணி இசை மூலமாகவும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

வித்தியாசமான முயற்சியை தந்து இந்த வயதிலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் சிங்கீதம் சீனிவாசராவ்.

படத்தை விட்டு வெளியே வரும்போது நாம் எல்லா விஷயங்களையும் கொஞ்ச நேரம் பாடலாகவே பாடிக் கொண்டிருக்கிறோம். அதுவே இந்த படத்தின் வெற்றி.