‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மாதிரி ‘போற போக்குல ரெண்டு காதலு’க்கு ஆளாகிறார் நாயகன் சனத்.
ஜெய்ப்பூரில் தொடங்குகிறது கதை. அங்கே தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றுகிறார் நாயகன் சனத். அவர் மீது ஐடி துறையில் பணியாற்றும் இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், “நோ.!” சொல்கிறார் சனத்.
அதற்கு அவர் சொல்லும் காரணம் அவரது முதல் காதலின் பிரிவு. அது ஏற்படுத்திய வலியை மீண்டும் தன்னால் அனுபவிக்க முடியாது என்று இமயாவின் காதலை மறுக்கிறார் அவர்.
ஆனால் முதல் காதல் தோற்றால் இரண்டாவது காதல் மேலும் வலுப்படுவதுதானே சினிமா வழக்கம்..? அந்த வழக்கப்படியே இமயா தன் காதலை இன்னும் வலுவாக ஏற்படுத்திக் கொள்கிறார்.
கடைசியில் ஜெயித்தது இமயாதான். செகண்ட் இன்னிங்ஸ் காதல் மூலம் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெரும் சனத்துக்கு அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. விபத்து ஒன்றின் மூலம் கடந்த ஆறு வருட நினைவுகளை இழந்து விடுகிறார் அவர்.
அதாவது தன்னுடைய முதல் காதலி மடோனா செபாஸ்டியன் பிரிந்து சென்றதையும் அதன் பிறகு இமயா மீது அவர் காதல் வயப்பட்டதையும் வசதியாக மறந்து விடுகிறார். இப்போது அவரது நினைவில் மடோனாவே காதலியாக நிலை பெற… அவர் பிரிந்தது தெரியாமல் மீண்டும் அவரை காதலிக்கப் போகிறார்.
மீண்டும் பழைய நினைவுகள் திரும்பி தன்னை நாடி வருவார் என்று நம்பிய இமயாவின் காதல் வென்றதா அல்லது மடோனாவை தேடிச்சென்ற சனத்தின் காதல் மீண்டும் உயிர் பெற்றதா என்பதுதான் இந்த படத்தின் கதை.
சனத் போன்றவர்களுக்கு மடோனா போல் ஒரு காதலி கிடைத்தால் விட்டுவிடுவார்களா என்ன..? அதை மெய்ப்பிக்கும் அளவில் அமைந்திருக்கிறது மடோனாவை உருகி உருகி காதலிக்கும் சனத்தின் காதல்.
முதல் காதல் பிரிந்த வலியையும் வேதனையும் கூட நடிப்பில் சரியான அளவில் கொடுத்திருப்பவர் மீண்டும் பெறும் இமயாவின் காதலில் இழந்த மகிழ்ச்சியை பெறுவதையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வளவு இயல்பாக நடிக்கத் தெரிந்த சனத்தை அதிக படங்களில் ஏன் பார்க்க முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி.
மடோனா செபாஸ்டியனின் காதல் சொல்லும் நேர்மை நம்மை சிலிர்க்க வைக்கிறது. கைவிட்ட காதல் மீண்டும் வந்து சேரும்போது தன் தடுமாற்றத்தை சரியாக உணர்த்தி இருக்கிறார்.
அந்தப் பக்கம் அனுபவ நடிகை மடோனா என்றால் இந்தப் பக்கம் அறிமுக நடிகை இமயா. ஆனால் அப்படியெல்லாம் நான் ஒன்றும் நடிக்க தெரியாதவள் அல்ல என்கிற அளவில் மடோனாவுக்கு இணையாகவே நடித்திருக்கிறார் இமயா.
குணச்சித்திர நடிப்பில் நாயகனின் நண்பராக வரும் வாட்ஸ்-அப் மணியும் அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதாவும் மிளிர்கிறார்கள்.
காதல் கதை என்றால் ஊட்டி இல்லாமலா..? எங்கு வைத்தாலும் கேமரா கோணம் அசத்துவிடும் என்கிற நிலையில் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி குளுகுளு ஊட்டியை மட்டுமின்றி திகுதிகு ஜெய்ப்பூரையும் அழகியலோடு காட்சிப்படுத்தி இரக்கிறார்
ராஜேஷ் முருகேசனின் இசையில் அமைந்த பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி கச்சிதமாக ஒலித்து இருக்கிறது.
வழக்கமாக இதுபோன்ற முக்கோண காதல் கதைகள் இரண்டு வகை. ஒன்று காதல்களை சீரியஸாக சொல்வது. இன்னொன்று அதன் பிரிவினை கூட சிரிக்கும்படி சொல்வது.
இதில் இரண்டாவது வழியை பின்பற்றி இருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார். ஒரு செட் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
நினைவுகள் இருப்பவர்களின் காதல் கதை வேறு மாதிரியானது ஆனால் நினைவிழந்த ஒரு நாயகனின் காதல் கதையை இப்படி சொன்னால் எடுபடும் என்று இயக்குனர் நினைத்திருப்பது வித்தியாசமான கற்பனை.
இன்றைக்கு இருக்கும் இளைஞர்களின் மனநிலையை வைத்து பசிக்கு பழைய சோறு என்ற அளவில் ஒரு சீரியசான படத்தை கொடுக்காமல், சீசனிங் மசாலா சேர்த்து ருசிக்கும் பாப்கார்ன் ஆக இந்தப் படத்தை கொடுத்திருக்கும் இயக்குனரின் முயற்சி வீண் போகவில்லை.
இரண்டு காதல்களுமே வலிமையுடன் இருக்க எந்த காதலுடன் படம் முடிய போகிறது என்கிற சஸ்பென்ஸ் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
‘ஹார்ட்டின்’ – ஒரு ஹார்ட்… இரண்டு அம்புகள்..!
வேணுஜி