January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கவினுக்கு 20 ரூபாய் பிச்சை போட்ட இளம்பெண் – பிளடி பெக்கர் விளைவு
October 18, 2024

கவினுக்கு 20 ரூபாய் பிச்சை போட்ட இளம்பெண் – பிளடி பெக்கர் விளைவு

By 0 113 Views

நெல்சன் திலீப்குமாரை ஒரு முன்னணி இயக்குனராக மட்டும்தான் நமக்குத் தெரியும் அல்லவா..?  ஆனால் அவர் இப்போது கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘பிளடி பெக்கர்’ (Bloody Begger) என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். 

Filament Pictures சார்பாக நெல்சன் திலிப் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

ஜென் மார்டின் இசையமைக்க, சுஜிதா சாரங்  ஒளிப்பதிவு செய்யும் படத்தின் படத்தொகுப்பை ஆர்.நிர்மல் கவனிக்கிறார்.

எதிர்வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பிளடி பெக்கர் உருவான விதம் பற்றியும் படம் பற்றியும் பேசினார் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார்.

“படத்தின் நாயகன் ஒரு பிச்சைக்காரன்தான். எந்த ஆசையும் இல்லாத ஒரு நபராக எந்தக் கவலையும் இன்றி, அனைவரையும் நக்கல் செய்துக் கொண்டு, திமிராக சுற்றி வருபவருக்கு திடீரென்று ஒரு ஆசை வருகிறது, அதை நோக்கி பயணப்படும் போது எதிர் வரும் விளைவுகள்தான் கதை.

நாயகன் கவின் இதில் பிச்சைக்காரராக வருவதால், ‘ப்ளடி பெக்கர்’ என்று தலைப்பு வைத்தோம். இந்த வார்த்தை சவுண்டாக நன்றாக இருப்பதாலும், மக்களிடம் எளிதில் சென்றடையும் என்பதாலும் தேர்ந்தெடுத்தோம்..!”

“படம் முழுதும் கவின் பிச்சைக்காரராக வருகிறாரா..?”

“இல்லை. ஆரம்பத்தில் பிச்சைக்காரராக இருப்பார். திடீரென்று அவருக்கு ஒரு ஆசை வரும், அதை நோக்கி செல்லும் போது ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் மூலம் அவர் கதாபாத்திரம் மாற்றமடையும், அதுதான் திரைக்கதை..!”

“இந்தப் படத்தின் தயாரிப்பாளராக நெல்சினை எப்படி பிடித்தீர்கள்..?”

“நான் வேட்டை மன்னன் படத்தின் போது அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றினேன், அந்த படம் கைவிட்ட பிறகு தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

பிறகு நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை ஆரம்பித்த உடன் அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவ்வப்போது நெல்சனிடம் ஆலோசனைகள் கேட்பேன், அப்படிதான் இந்த ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவர் நன்றாக இருக்கிறது, இதை சரியான தயாரிப்பாளர் மூலம் செய்தால் பெரிதாக வரும் என்று நம்பி ஒரு கட்டத்தில் அவரே இந்த படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார்..!”

“நக்கலடிக்கும் பிச்சைக்காரர் என்றாலே, ‘இரத்தக்கண்ணீர்’தான் நினைவுக்கு வரும். அதன் பாதிப்புதான் இந்தப்படமா?”

“இந்த லைனை யாரிடம் சொன்னாலும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், அந்தப் படத்தின் பாதிப்பு துளி கூட இதில் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால், ‘இரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தின் தொடர்பு இந்தப் படத்தில் இருக்கும்.

பொதுவாக பிச்சைக்காரர்கள் பற்றிய விமர்சனமாக படம் இருக்காது. உண்மையாக கஷ்ட்டப்படுகிறவர்கள் பற்றி தவறாக எதுவும் சொல்லிவிட கூடாது, என்பதில் மிக கவனமுடன் இருக்கிறோம். ஒரு கர்ஷியலான படம், அதன் கதாபாத்திரத்தையும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் நம்பகத்தன்மையோடு எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி தான் சொல்லியிருக்கிறேன்..!”

“ஒரு பிச்சைக்காரன் வேடத்துக்கு கவினை நடிக்க வைக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தீர்களா?”

“திரைக்கதை முடித்தவுடன், இப்படி ஒரு வேடத்தில் யோசித்து பார்க்காத ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அது புதிதாக இருக்கும், என்று தோன்றியது. அப்போதுதான் கவினிடம் இந்த கதையை சொன்ன போது, அவரே இதில் நடிக்க விரும்பினார்.

அவர் ஸ்டார் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான் இந்த படத்தை தொடங்கினோம், அப்போது அவர் இருந்த தோற்றத்தின் மீதே தாடி, மீசை போன்றவற்றை இணைத்து எங்கள் படத்திற்கான தோற்றத்தை மாற்றி விட்டோம். 

ஒரு சோதனை ஓட்டமாக பிச்சைக்காரர் கெட்டப் போட்ட பிறகு “இப்படியே வெளியே செல்ல முடியுமா? என்று அவரிடம் கேட்டதற்கு, ஓகே என்று சொல்லி, தெருவில் நடந்து சென்றார். அப்போது ஒரு இளம்பெண் அவரை  பிச்சைக்காரர் என்றே நினைத்து 20 ரூபாய் பிச்சை போட்டார். அப்போதே இந்த கெட்டப் வெற்றியடைந்தது புரிந்தது!”

“படத்தின் கதாநாயகி பற்றி சொல்லுங்கள்..!”

படத்தில் கவினுக்கு ஜோடி யாரும் கிடையாது. ஆனால், முதன்மையான பெண் வேடம் ஒன்று இருக்கும். அதை வேண்டுமானால் கதாநாயகி என்று சொல்லலாம். அதில் அக்‌ஷயா ஹரிஹரன் நடித்திருக்கிறார்.

அவர் படத்தில் என்னவாக வருகிறார் என்பதை இப்போது சொல்ல முடியாது..!”

“படத்தின் தலைப்பை சென்சார் ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா..?”

“படத்துக்கு பொருந்தி வருவதால் ஒத்துக் கொள்வார்கள் என்று தான் நினைக்கிறேன் ஆனால் அப்படி மாற்ற சொன்னால் அதற்கான தலைப்புகளும் என்னிடம் இருக்கின்றன..!”

ஆக, தலைப்பின் முடிவு சென்சார் கையில்..!