July 3, 2026
  • July 3, 2026
Breaking News
July 3, 2026

கட்டா குஸ்தி 2 திரைப்பட விமர்சனம் (4.3/5)

By 0 9 Views

முதல் பாகம் வெற்றியடைந்த பெரும்பாலான படங்களின் இரண்டாவது பாகம் பெரிய வெற்றி பெறாமல்தான் இருந்திருக்கின்றன. பாகுபலி போன்ற சில படங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. 

இந்த வரிசையில் இணைந்து கொள்கிறது இந்தப் படமும். அதுவும் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து இந்த இரண்டாவது பாகமும் தொடங்குகிறது.

நாயகன் விஷ்ணு விஷால் – நாயகி ஐஸ்வர்யா லஷ்மிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க, ‘குழந்தையை வைத்துக்கொண்டு இனிமேல் எங்கே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது..?’ என்ற மனநிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி.

ஆனால் அவருக்கு ஊக்கமும் உற்சாகம் தந்து “உன்னால் சாதிக்க முடியும்…!” என்பதுடன் நிற்காமல் குடும்பத்தையும் குழந்தையையும் தானே பார்த்துக் கொண்டு ஒரு ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ ஆக இருக்கிறார் விஷ்ணு விஷால்.

இதனால் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் வெல்லும் ஐஸ்வர்யா லஷ்மி தேசிய போட்டிக்குத் தயாராகிறார். இந்த நிலையில் அவரது வளர்ச்சி பொறுக்காத பயிற்சியாளர் தரும் அழுத்தம் ஒரு புறமும், குழந்தை பள்ளியில் சரியாக படிக்கவில்லை என்கிற தகவல் இன்னொரு புறமும் ஐஸ்வர்யா லஷ்மியைத் தாக்குகிறது. 

கணவன் குழந்தை மீது காட்டும் செல்லத் தால்தான் குழந்தை கெட்டுப் போகிறது என்று நம்புபவர் தன்னுடைய பொறுப்பிலேயே குழந்தையை கண்டிப்புடன் வளர்ப்பதுடன் தன்னைப் போலவே ஒரு வீராங்கனை ஆக்க குஸ்திக்கான பயிற்சிகளிலும் ஈடுபட வைக்கிறார். 

இந்த பிரச்சனைகள் எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பல பூசல்களை உருவாக்கி ஐஸ்வர்யா லஷ்மியை ஒரு கட்டத்தில் விவாகரத்துக்குப் போகும் அளவுக்குக் கொண்டு செல்கிறது.

ஆனால் அதில் எல்லாம் விருப்பம் காட்டாமல் ஐஸ்வர்யா லஷ்மியுடன் இணைந்து வாழ விரும்பும் விஷ்ணு விஷாலின் முயற்சிகள் பலித்ததா… இருவரும் இணைந்து வாழ நேர்ந்ததா.? என்பதுதான் இந்த இரண்டாவது பகுதியின் கதை.

ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதற்கான அழுத்தமான திரைக்கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் கையாண்டால் ஒரு படம் வெற்றி பெறும் என்கிற இலக்கணப்படி முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் கவனமாக உழைத்து இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷாலையும் சொல்லி ஆக வேண்டும். நேற்று முளைத்த ஹீரோக்கள் எல்லாமே ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்க மல்லுக்கட்டிக் கொண்டிருக்க, பெண்களின் மனதில் இடம் பிடிக்கும் ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டு அதை திறம்படவும் நடித்திருக்கிறார் அவர். 

ஆனாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கட்டாகுஸ்தி என்று எல்லா ஐட்டங்களிலும் கொஞ்சமும் குறை வைக்காமல் நடித்து குடும்ப ஆடியன்ஸை அப்படியே அலாக்காகத் தூக்கி விடுகிறார் விஷ்ணு.

எல்லா காலங்களிலும் கமர்சியல் படங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறைவாகவே இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம் தந்திருந்த இயக்குனர் இந்த படத்திலும் அதற்கு எள்ளளவும் குறைவில்லாத பலம் வாய்ந்த பாத்திரத்தை தந்திருக்கிறார். 

அதைப் புரிந்து கொண்டு ஒரு மல்யுத்த வீராங்கனைக்குரிய உடற்கட்டையும் பேணி அதற்கான பயிற்சிகளையும் எடுத்து அதகளப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா லஷ்மி.

கடைசியில் கணவனுடனேயே குஸ்தி இட நேரும் சூழலில் அவர் மீதுள்ள கோபத்தில் அவரைத் தூக்கி அடிக்கும் சீற்றத்திலும் ஐஸ்வர்யா ஜொலிக்கிறார். 

சம்பவக்காரி பாடலிலும் மிகப்பெரிய சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

அவர் இருவருக்கும் மகளாக வரும் குழந்தை நட்சத்திரம் சாரா, கொள்ளையழகு. மட்டுமல்லாமல் விஷ்ணுவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடிப்பில் செம டஃப் கொடுத்திருக்கிறார்.

முதல் பாகத்தை போலவே கருணாசுக்கு இதிலும் அழுத்தமான பாத்திரம். அதில் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தது போலவே இந்த படத்திலும் அவர் படும் பாட்டை நினைத்து நாம் வெளியே வந்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த கும்மாங்குத்து டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோக்‌ஷா, படத்தை சுவாரசியம் குன்றாமல் நகர்த்த உதவியிருக்கிறார்.

இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், லிஸி ஆண்டனி, கஜராஜ், ஸ்ரீஜா ரவி, கருணாகரன் ஆகியோர் தங்கள் பங்கினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி ஆனதுமே திரைக்கதை பற்றிக் கொள்கிறது. யோகி பாபுவும் அப்படியே.

இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை படமாக்குவது மிகுந்த சிரமமான விஷயம். ஆனால், ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் அதை திறமையாக கையாண்டு இருப்பதுடன் வண்ணமயமான காட்சிகளையும் நமது கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார். 

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட் அடித்து இருக்கும் நிலையில் பின்னணி இசையும் திரைக்கதையின் வேகம் குன்றாமல் உதவி பயணித்திருக்கிறது.

அதற்கு ஈடு கொடுத்து விறுவிறுப்பாக படத்தை தொகுத்திருக்கிறார் பரத் விக்ரமன்.

கணவன் மனைவிக்கு இடையே எல்லா குடும்பங்களிலும் பிரச்சனைகள் இருப்பதுடன் அதை பேலன்ஸ் செய்து வாழ்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். அத்துடன் இப்படி இந்த பிரச்சினைகளை மையமாக வைத்து ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் இத்தனை சுவாரசியத்துடன் படத்தை தந்து குடும்பங்களை தியேட்டருக்கு வரவழைத்திருக்கும் செல்லா அய்யாவு செம் கிரேட்..

கட்டா குஸ்தி 2 – தரமான சம்பவம்..!

– வேணுஜி