ஃபிரிட்ஜ்குள் வைக்கப்பட்ட ஜெயிலர்2 கதையை வெளியே எடுத்து அடுப்பில் வைத்து நாலு கிளறு கிளறினால் சுவையான ஓம் கதை ரெடி..!
அதில் ரஜினி முன்னாள் ஜெயிலர். இதில் தனுஷ் இந்நாள் அண்டர் கவர் ஆபீஸர். சிலை கடத்தலின் தலை யார் அதில் சம்பந்தப்பட்ட மற்ற தலைகள் யார் என்று கண்டுபிடிக்க ரஜினி அந்தக் கூட்டத்துக்குள் நுழைய சாதாரண டிரைவர் ஆக பழக்கடை மூர்த்தியிடம் வேலைக்கு சேர்வார்.
இதில் சிலை கடத்தலுக்கு பதிலாக செம்மர கடத்தல். அதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க அருகில் இருக்கும் கடத்தல் புள்ளி மம்மூட்டியிடம் வேலைக்கு சேர்கிறார் தனுஷ்.
அதில் பழக்கடை மூர்த்திக்கு ரஜினி மீது சந்தேகமே வராததை போல் இதில் மம்மூட்டிக்கு தனுஷின் மேல் கொஞ்சம் கூட சந்தேகமே வராமல் தன்னுடைய எல்லா தில்லு முல்லு வேலைகளையும் அவரிடம் ஒப்புவிக்கிறார். இதற்கும் அதில் போலவே இதிலும், கூட இருக்கும் ஒரு கேரக்டர் இவர்களைப் பற்றி எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
இதற்கு மேல் கதை என்ன பெரிய கதை..?
ஆனால் இதில் உள்ள ஒரே ஒரு உள்ளத்தை தொடும் ஏரியா, உண்மையில் ஆந்திர தமிழக எல்லையில் செம்மரம் வெட்ட போன தமிழர்களை குருவிகளை சுடுவது போல் ஆந்திர போலீஸ் கொன்று குவித்தது.
அதேபோல் ஜெயிலர் படத்தில் பழிக்கு பழி வாங்குவது அடிநாதமாக இருந்தது. இதில் அப்படி இல்லாமல் கடமை உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆபரேஷன் மோல் என்கிற போலீஸ் நடவடிக்கையின் முதல் எழுத்துக்கள்தான் ஓம். தனுஷின் இறை நம்பிக்கைக்கும் அது தோதாக வரவே அதுவே தலைப்பாகி இருக்கிறது.
தனுஷ் நடிப்பு பற்றித் தனியாக சொல்ல தேவையில்லை. இதில் காவல் அதிகாரியாக வருவதால் வழக்கத்தை விட உடலில் உறுதியை ஏற்றிக் கொண்டிருக்கிறார். என்கவுண்டர் நடக்கும் இடத்தில் தன் அப்பா சிக்கிக்கொண்டது தெரிய வரும்போது அவர் தவிக்கும் தவிப்பு அபாரம். அதேபோல் சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற தொழிலாளிகள் பற்றியும் தெரிந்து கொள்ளும்போது அவரது உணர்வின் வெளிப்பாடு அற்புதம்.
தளபதி படத்தில் இதைவிட வலுவான கேரக்டரை ஏற்று நடித்து விட்ட மம்மூட்டிக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கும் செம்மர கடத்தல்காரர் வேடம் சாதாரணமானதுதான். ஒரு கடத்துல்காரராக, அரசியல்வாதியாக இருந்தும் பச்சைக் குழந்தை போல் அவர் தனுஷை நம்பிக் கொண்டிருப்பதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. கொஞ்சம் காமெடியாக இருந்தால் பழக்கடை மூர்த்தி ஆகியிருப்பார் மம்மூட்டி.
தனுசை போலவே தான் ஏற்றுக் கண்ட பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் சாய் பல்லவி ஐபிஎஸ் அதிகாரியாகவே தெரிகிறார். கடமைக்காக தனது அப்பா கணவன் எல்லோரையும் இழந்துவிட்ட அவரது முடிவும் பரிதாபகரமானது.
தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீலீலா பெரிதாக ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. அதிலும் அவர் பேசும் தமிழ் எந்த ஊரிலும் பேசப்படுவதாக இல்லை.
நஸ்ருதீன் ஷா போன்ற முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கும் போது அதன் பாத்திர வடிவமைப்பு குறை இன்றி இருக்க வேண்டும்.
இந்தப் படத்தைப் பொறுத்த அளவில் அவரும் மம்மூட்டியும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தனுஷின் அப்பாவாக வரும் இந்திரன்ஸ் ஒரே ஒரு காட்சியில் நம் இதயத்தைப் பிழிந்து விட்டுச் செல்கிறார்.
படத்தில் பாராட்டத்தக்க விஷயமாக இருப்பது ஆந்திர தமிழக எல்லையோர கிராமங்களும் அவற்றின் பூகோள அமைப்பிலான காட்சிப்படுத்துதலும்தான். தமிழர்கள் திருப்பதிக்கு போய்க்கொண்டிருப்பதும் அங்கே இருந்து தெலுங்கர்கள் பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருப்பதும் கண்முன் நாம் கண்டு கொண்டிருக்கும் நிஜமான உண்மை. இதற்கு தன் ஒளிப்பதிவு மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார் கே.எழில் அரசு.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே தான். ஆனால் அவரது பாடல்களையே திரும்பக் கேட்பது போன்றே இருக்கிறது.
உண்மை கதைகளை அடிப்படையாக வைத்து உள்ளத்தை தொடும் வித்தை தெரிந்த ராஜ்குமார் பெரியசாமிக்கு இந்தப் படத்தில் என்ன விதமான நெருக்கடி இருந்தது என்று தெரியவில்லை. உண்மைக்கு நெருக்கமான காட்சிகள் அனைத்தும் அற்புதமாகவும் கமர்சியலுக்காக திணிக்கப்பட்ட ஆக்சன் விஷயங்கள் எல்லாம் நாலாந்தர சினிமாவாகவும் இருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
அதிலும் பாக்கெட்டில் ஒரு செல்போனை ஆன் செய்து வைத்துக் கொண்டு தனுஷ் போகிற இடங்களில் எல்லாம் சதிகாரர்கள் வாக்குமூலம் போல் எல்லா உண்மைகளையும் உளறிக்கொண்டு இருப்பது அபத்தமான கற்பனை. அப்படி உளறுவதில் மம்மூட்டிதான் டாப்.
அதனால் அமரனாகவும் இல்லாமல், புஷ்பாவாகவும் இல்லாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிக்கிறது படம்.
ஓம் – ஒரு தடவை பார்க்கலாம்..!
– வேணுஜி