கணவனைக் காப்பாற்ற எமனுடனேயே போராடிய சாவித்திரியின் புராணக் கதை எல்லோருக்குமே தெரியும். அந்தத் தலைப்பை வைத்து விட்டதால் இதுவும் அப்படிக் கணவனைக் காப்பாற்ற களம் இறங்கிய ஒரு மனைவியின் போராட்டம் என்பது புரிகிறது.
ஆனால், இவ்வளவு திறந்து வைத்தா ஒரு கதையைச் சொல்லி இருப்பார்கள்..? என்ற நினைவுடனேயே படம் பார்க்கத் தொடங்குகிறோம்.
படத்தின் கதையைக் கேளுங்கள்…
ஒருபக்கம் சாருகேஷுடன் பிடிக்காத திருமணத்தை செய்து இன்னொருபக்கம் முன்னணி வழக்கறிஞராக இருக்கும் மிஷ்கினிடம் விரும்பி வந்து உதவியாளராகச் சேர்கிறார் கீர்த்தி சுரேஷ். அதற்குக் காரணம் அவரிடமிருந்து தொழிலைக் கற்றுக்கொண்டு உரியவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், சேர்ந்த சில நாள்களுக்குள்ளேயே மிஷ்கினுக்கு நீதியின் மேல் எந்த அக்கறையும் இல்லை, வெற்றிதான் முக்கியம் என்று செயல்படுவதை புரிந்து அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் வழக்கிலேயே அவருக்கு எதிராக வாதாடக் களத்தில் இறங்குகிறார் கீர்த்தி.
அதில் அவர் வெற்றி அடைய, மிஷ்கினின் கடும் கோபத்துக்கு ஆளாகிறார். இதற்கிடையில் பிடிக்காத கணவன் சாருகேஷ் பிரியத்துக்குள்ளாகி ஒரு குழந்தை பெற இருந்த வேளையில் உடல் பலவீனத்தால் அபார்ஷன் ஆவதுடன் இனி குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியையும் இழக்கிறார்.
இந்நிலையில் சாருகேஷ், கனடாவைச் சேர்ந்த மஞ்சு ஷில்பாநாத்தைக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட, இந்த வழக்கில் கீர்த்தியை பழிவாங்க, விரும்பி வந்து வழக்கை மேற்கொள்கிறார் மிஷ்கின். கணவனைக் காப்பாற்ற வாதாட கீர்த்தி களத்தில் இறங்க முடிவு யாரும் எதிர்பாராதது.
கீர்த்தியின் குழந்தைத்தனமான முகமும், முதிர்ச்சியான நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம் ஆகிறது. ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் போகப் போக கணவனின் குணம் புரிந்து ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது வெகுண்டு எழுந்து நீதிமன்றம் சென்றாலும் கீர்த்தியின் நடிப்பு அத்துடன் பூர்த்தியாகவில்லை. அதற்குப் பின்தான் இருக்கிறது ஆன்ட்டி கிளைமாக்ஸ்.
மிஷ்கினின் நடிப்பு மலைக்க வைக்கிறது. நீதிமன்றத்தில் உதவியாளர்களுடன் அவர் நடந்து வரும் தோரணை, வழக்காடும் பாவனை, நினைத்ததை சாதிக்கும் சாதனை என்று அவர் மட்டுமல்லாமல் அவர் வரும் காரும் கூட ஒரு வில்லன் போல மிரட்டுகிறது.
இந்த இரு பெரும் நடிப்பு இயந்திரங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறார் சாருகேஷ். மிஷ்கின் கீர்த்தி இருவரின் ஈகோ பிரச்சனையில் இவர் சிக்கிக் கொண்டு விட்டாரோ என்று நமக்கு முதலில் பதைபதைப்பு ஏற்பட்டாலும் போகப்போக அவருடைய குணம் புரியும் போது அந்த கேரக்டரும் நமக்கு புரிகிறது.
முதலில் மிஷ்கினின் உதவியாளராக இருந்து பின்னர் கீர்த்தியிடம் வந்து சேரும் பால சரவணன் இந்த படத்தில் எழுந்து நிற்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பானவை.
பிரிகிடாவுக்கு சிறிய பாத்திரம் என்றாலும் படத்தின் மையப் புள்ளியாக இருப்பதாலும் சிறந்த நடிப்பாலும் கவனம் பெறுகிறார்.
படமே முடியப்போகிறது என்று நினைக்கும் நேரத்தில் உள்ளே வரும் மஞ்சு ஷில்பாநாத் பாத்திரம் கதையையே திருப்பிப் போடுகிறது. அந்தக் கிறங்கடிக்கும் கண்களுக்கு மயங்காத ஆடவர் யார் இருக்கப் போகிறார்?
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு படத்தின் நேர்த்தியைக் கூட்டி இருக்கிறது. என்ன ஒன்று… படத்தின் பெரும் பகுதி நீதிமன்றம் மற்றும் வீடுகளுக்குள்ளேயே நடந்து முடிந்து விடுகிறது.
இசையில் ரொம்பவும் பக்குவப்பட்டு வருகிறார் சாம் சி.எஸ். முன்பு போல இசைக்கருவிகளை அடித்து நொறுக்காமல் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு இசையமைக்க கற்றுக் கொண்டு விட்டார்.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் எஸ்.விஜய், ஒரு கோர்ட் ரூம் டிராமாவை கிரைம் திரில்லராகவும் அற்புதமாகக் கொடுத்திருக்கிறார். படத்தின் உரையாடலுக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால் இன்டோர் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதால் ஓடிடியில் படம் பார்க்கும் அனுபவம் மட்டுமே கிடைக்கிறது.
சத்தியவான் சாவித்திரி – பற்ற வைக்கும் பட்டாசுத் திரி..!
– வேணுஜி