November 26, 2022
 • November 26, 2022
Breaking News
 • Home
 • சிறப்புக் கட்டுரை
 • உலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்
August 6, 2020

உலகைக் காப்பாற்றும் 50 பேர்களில் ஒருவர் – இந்த இந்தியரைத் தெரிந்து கொள்ளுங்கள்

By 0 582 Views

இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ என்று போற்றப்படும் ராஜேந்திர சிங் (Rajendra Singh) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 6). 💦

சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ள அவரைப் பற்றிய சில குறிப்புகள்…

 • உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். ஆன்மிகம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பள்ளியில் இவரது ஆங்கில ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்.
 •  
 • காந்தி அமைதி அறக்கட்டளை உறுப்பினரான ரமேஷ் சர்மாவின் சமூக சேவைகளுக்கு உதவியாக இருந்தார். பள்ளிக்கல்வி முடிந்ததும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாரதிய ரிஷிகுல் ஆயுர்வேதிக் மஹாவித்யாலயாவில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம் பெற்றார்.
 •  
 • அலகாபாத் பல்கலைக்கழகத்தில், முதுகலை இந்தி இலக்கியம் பயின்றபோது லஞ்சம், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக அநீதிகளுக்கு எதிராக நடந்த பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கேற்றார். ஜெயபிரகாஷ் நாராயணின் ‘சாத்ரா யுவ சங்கர்ஷ் வாஹினி’ அமைப்பில் சேர்ந்து அதன் தலைவராக செயல்பட்டார்.
 •  
 • படித்து முடித்தவுடன், முதியோர் கல்வித் திட்டப் பொறுப்பாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே தருண் பாரத் சங் என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, அதன் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
 •  
 • அரசு வேலையை 1984-ல் ராஜினாமா செய்தார். தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்றார். தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பேருந்தில் ஏறி கடைசி நிறுத்தத்துக்கு டிக்கெட் எடுத்தார். அந்த பேருந்து ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்றது. அங்கு ஆயுர்வேத மருத்துவ சேவையாற்றினார். கல்வியும் கற்பித்தார்.
 •  
 • அந்த ஊருக்குப் படிப்பு, மருத்துவத்தைவிட தண்ணீர்தான் முக்கியம் என்பதை உணர்ந்தார். ஊர்க் குளத்தை தன்னந்தனியாக தூர்வாரினார். ஏளனம், கேலிப்பேச்சுகளைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கணக்கில் பாடுபட்டு குளத்தின் பரப்பளவை அதிகரித்தார். பிறகு பெய்த திடீர் மழையால் குளம் நிரம்பியது.
 •  
 • பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த இளைஞர்கள் சொந்த ஊர் திரும்பி, இவரோடு கைகோர்த்தனர். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன. கிராமம் கிராமமாக பாத யாத்திரை சென்று, மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 •  
 • ராஜஸ்தானில் 7 நதிகளை மீட்டெடுத்தார். மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியுள்ளார். 1,200 கிராமங்களைத் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளார். இவரது வழிகாட்டுதலால் பல மாநிலங்களில் தண்ணீர்ப் புரட்சி உருவானது.
 •  
 • ராமன் மகசேசே விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, நீர் மேலாண்மைக்கான நோபல் என குறிப்பிடப்படும் ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு உள்ளிட்ட பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தற்போது தேசிய கங்கைப் படுகை ஆணையத்தின் உறுப்பினராக செயல்படுகிறார்.
 •  
 • ‘உலகைக் காப்பாற்றும் 50 பேரில் ஒருவர்’ என ‘தி கார்டியன்’ பத்திரிகை இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. இயற்கையைப் பாதுகாப்பது, அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்வதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ள ராஜேந்திரசிங் இன்று 61 வயதை நிறைவு செய்கிறார்.