January 14, 2025
  • January 14, 2025
Breaking News
September 12, 2020

போனாளே பொன்னுத்தாயி 10 வருடம் முன்பு இதே நாளில் மறைந்த ஸ்வர்ணலதா

By 0 807 Views

தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது.

ஆனால் ஸ்வர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.

ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்கிரதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் ஆகிவிடும் என்று பல பேரும் பேசத் தொடங்கினார்கள். ரிலீஸாகும் அத்தனை படத்திலும் ஒரு பாடலாவது ஸ்வர்ணலதா பாட்டு இடம் பிடிப்பதும் மாதத்துக்கு இரண்டு பாட்டாவது மெகா ஹிட்டாகிவிடுவதும் வாடிக்கை.

உச்ச ஸ்தாயியில் இவர் குரல் போகும் போதெல்லாம் கலங்கடித்துவிடுவார். ‘அலைபாயுதே’வில், ‘எவனோ ஒருவன்’ பாடலலைக் கேட்கும் போது, அலைகளென கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.பி.சுசீலா, எஸ்.ஜானகி, சித்ராவுக்கு என ரசிகர்கூட்டம் இருப்பது போல், ஸ்வர்ணலதாவுக்கு ஒரு ரசிகர்கூட்டம் சேர்ந்தது.

எப்படி, சுசீலாவின் குரலையும் ஜானகியின் பாடலையும் சித்ராவின் ஸ்டைலையும் ஒருசேர ரசித்தார்களோ… அதேபோல், ஸ்வர்ணலதாவின் குரலையும் பிரமித்து ரசித்தார்கள்.

‘ராக்கம்மா கையைத் தட்டு’ என்ற பாடலைப் பாடாதவர்களே இல்லை. ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடலையும் ‘மலைக்கோயில் வாசலில்’ பாடலையும் கேட்டுச் சொக்கித்தான் போனார்கள் ரசிகர்கள். ’வள்ளி’ படத்தின் ‘என்னுள்ளே…’ பாடல், நம்முள்ளே என்னென்ன மாயங்களோ செய்யும் ஜாலக் குழைசலில் கரைந்தேவிடுவோம்.

பாடப்பாட, ரசிகர்கள் சேர்ந்தார்கள். பாடப்பாட, விருதுகளும் சேர்ந்தன. ‘கருத்தம்மா’வின் ‘போறாளே பொன்னுத்தாயி’ பாடலுக்கு மாநில, தேசிய விருதுகள், வீடு தேடி வந்தன.

இப்படி எல்லா வகையான பாடல்களையும் பாடும் அற்புத திறமையை கொண்டிருந்த ஸ்வர்ணலதாவுக்கு கூச்ச சுபாவம் அதிகம். கேமரா முன்பு வருவதற்கும், தொலைக்காட்சியில் தோன்றுவதற்கும் தயக்கம் காட்டினார்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஸ்வர்ணலதா சகோதரர்களுடனும், உறவினர்களுடனே வசித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.

அத்துடன் சுவாசப் பிரச்சனையும் மூச்சுவிடுவதில் சிரமமும் அவரை நெடு நாட்களாக வாட்டியது. மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தாலும், என்ன நோய் என்று மருத்துவர்களால் சரியாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியவில்லை.

இசை உலகையே மயக்கிய குரலழகி ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்குத் தள்ளபட்டார். அவருக்கு வந்திருப்பது Idiopathic Pulmonnary Fibrosis எனும் வினோத நோய் என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

நுரையீரலுக்கு செல்லும் காற்றைத் தடுத்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தும் நோய் அது. வீடும் மருத்துவமனையுமே கதி என்று தன்னுடைய இறுதிக் காலங்களை கழித்த ஸ்வர்ணலதா 2010 ஆம் ஆண்டு இதே நாள் 37 வயதில் காற்றில் கரைந்ததார்.

ஆனால், காற்று உள்ளளவும் அவர் பாட்டு அங்கே நிறைந்திருக்கும்..!