September 10, 2026
  • September 10, 2026
Breaking News
August 8, 2026

வதந்தி சீசன் 2 – வெப் தொடர் விமர்சனம்

By 0 115 Views

வழக்கமாக தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாக கொண்டு வரும் கதை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது சசிகுமாரை தான். அதிலும் பல்லாண்டு பிடித்த ஒரு அடாவடி கேரக்டரில் தான் அவர் நினைவுக்கு வருவார். 

அதை மாற்றி அவரை மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளராக காண்பிக்க நினைத்ததற்கு இந்த தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசை பாராட்டியாக வேண்டும்.

அப்படி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, அது அரசு நிகழ்ச்சிக்கான முன்னெடுப்பு என்பதால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்துகின்றன. 

அதன் விளைவாக அதை கண்டுபிடிக்கும் பொறுப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் சசிகுமாரிடம் வழங்கப்படுகிறது.

சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கும் சசிகுமார், மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறார். அத்துடன் இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்களாக இருப்பதுடன் அவர்கள் கொலை செய்யப்பட்டதையும் கண்டுபிடிக்க, அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

வழக்கு முடிந்து விட்டதாக ஊர் நம்பினாலும் சசிகுமாரின் போலீஸ் மூளை அதை ஏற்க மறுக்கிறது. இதன் பின்னணியில் உண்மை குற்றவாளி வேறு யாரோ இருப்பதாக அவரது உள்ளுணர்வு சொல்ல, அது தொடர்பாக மேலும் அந்த வழக்குக்குள் பயணிக்கும் அவர் நினைத்தது சரிதானா அப்படியெனில் கைது செய்யப்பட்டவர் யார், அவர் ஏன் கள்ள மௌனம் சாதிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கும் இந்தத் தொடர் விளக்கம் அளிக்கிறது.

வழக்கமான இது போன்ற கிரைம் திரில்லர்கள் ட்ரீட்மென்ட் அமைக்கப்படும்போது  பார்வையாளர்களாகிய நாம் எந்த கோணத்தில் சிந்திப்போமா அதற்கு நேர் எதிர் கோணத்தில் நின்று சிந்தித்து நமது யூகங்களை உடைத்து நொறுக்குவதுதான் சிறந்த திரைக்கதையாக இருக்கும்.

அந்த வகையிலேயே பரபரப்பான திருப்பங்களுடன் ஆண்ட்ரூ லூயிஸ் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

அத்துடன் கொலை அதற்கான பின்னணி விசாரணை என்று கதை நகர்ந்து கொண்டிருக்காமல் அவற்றைக் கடந்த இளசுகளின் காதல், இல்லற உறவு, தமிழ் இளைஞர்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுடன் ஒரு சர்வதேச விஷயத்தையும் தொட்டு இதன் திரைக்கதையை திறம்பட எழுதி இருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்.

இப்போது கதையின் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமாருக்கு வருவோம். மூசா ராசா என்ற உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், வீணான மிடுக்கையெல்லாம் தனது உடல் மொழியில் காட்டாமல் இயல்பான ஒரு காவல் அதிகாரியாக நடித்திருப்பதை பாராட்டலாம்.

அவரது ட்ரேட் மார்க் ஆன திரைப்படக் கதாபாத்திரங்களின் நடிப்பு போலவே இந்தத் தொடருக்காக பயன்படுத்தி இருக்கும் இயல்பான உடல் மொழியை ரசிக்க முடிகிறது.

அவரை அடுத்து எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகாவைச் சொல்ல வேண்டும். அவரது காக்கி நிற சீருடை எத்தனை அழகாக அவருக்குப் பொருந்தி இருக்கிறதோ அதேபோன்று அந்த கதாபாத்திரமும் சிறப்பாக பொருந்தி இருக்கிறது.

முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் நடிகர் யஷ்வந்த், மதுரை மாவட்ட இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார். மாடு பிடிப்பதில் தொடங்கி, காதல் காளையாக உலா வருவது வரை பாத்திரம் தப்பாமல் நடிப்பைக் கொட்டி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் திடீரென்று காணாமல் போன டாடா அபர்ணா தாஸ், அந்தப் படத்தில் நடிப்பை கொட்டி நடித்திருந்தாலும், இதில் சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் பெரும்பாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார்.

இந்த தொடரின் முதல் சீசனில் இதே ராமர் கதாபாத்திரதில் நடித்திருந்த விவேக் பிரசன்னா இதிலும் அதே பாத்திரத்திலேயே வருவது ரசிக்க வைக்கிறது.

யஷ்வந்தின் காதலியாக நடித்திருக்கும் ரேவதியின் நடிப்பும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமியின் பங்களிப்பு இந்த பிரேம் திரில்லர் தொடருக்கான நியாயத்தை வழங்கி இருக்கிறது.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, தொடரி தொகுத்திருக்கும் விதமும் திரைக்கதையை செதுக்க உதவுகிறது

இசையமைப்பாளர் சைமன் கே.கிங்கின் இசை இந்தத் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் தீம் இசை ஒன்றை உருவாக்கி இசைத்திருப்பது கதையின் உணர்வுக்குள் நாம் கலப்பதை எளிதாக்கி இருக்கிறது.

வழக்கமாக இது போன்ற இணைய தொடர்களின் சுவாரசியமே அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முதல் அத்தியாயத்தின் முடிவில் சஸ்பெண்ட் சாக வைப்பதுதான்.

அதை உத்தி இதில் பயன்பட்டிருந்தாலும் சீசன் ஒன்றில் கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதாக திரைக்கதை நகர்ந்தது போல் அல்லாமல் இதில் கொலையாளி யார் என்பதை சொல்லிவிட்டு, அந்தக் கொலையாளியை நிரபராதியாக முயற்சிக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசப்படுகிறது.

இணைய தொடர்களுக்கு சினிமாவைப் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் அவர்கள் இஷ்டத்துக்கு வசனங்களையும் சென்சருக்கு பயப்படாத காட்சிகளையும் வைப்பது வழக்கமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு கொலை கதையாக இருந்தாலும் அதையும் குடும்பத்தோடு பார்க்கும் விதமாக நயம் பட சொல்லியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸை பாராட்டியாக வேண்டும்.

தொடரை தயாரித்திருக்கும் ‘வால்வாச்சர் பிலிம்ஸ்’ புஷ்கர் காயத்ரியையும் பாராட்டிதான் ஆக வேண்டும்.

வதந்தி 2 – மூன்றாவது சீசனும் தாராளமாக தயாரிக்கலாம்..!