September 22, 2026
  • September 22, 2026
Breaking News
September 20, 2026

சண்டக்காரி திரைப்பட விமர்சனம்

By 0 14 Views

ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்க, அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் விமல்.

அவருக்கு ஒரு கனவு இருக்கிறது. அதன் காரணமாக அப்படி ஸ்ரேயா இழுத்த இழுப்புக்கு ஆடுகிறார் அவர். 

ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் குடியுரிமை சிக்கலுக்குள்ளாக, திருமணம் புரிந்தால் அதை சரிக்கட்டலாம் என்கிற அளவில் விமலுடன் ஒரு போலிக் கல்யாணம் புரிய முடிவெடுக்கிறார்.

அதன் சம்மதத்துக்காக தஞ்சாவூர் கிராமத்திலிருக்கும் விமலின் வீட்டுக்கு இருவரும் வருகிறார்கள். ஆனால்… அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் சினிமா ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை.

விமலின் நடிப்பு பற்றி ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். அது லண்டனுக்குப் போனால் மட்டும் மாறிவிடுமா என்ன..? அவரது ஆங்கிலத்துக்கு சோதனை வைக்காமல் அங்கே இருக்கும் அனைவரும் தமிழ் பேசிக் கொண்டிருந்ததால் தப்பித்தார்.

சண்டக்காரி கேரக்டருக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருக்கிறார். படத்தின் யுஎஸ்பி அவர்தான் என்பதால் அவருக்கு முழுப்படத்திலும் வரும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அவரை எல்லோரும் ஆணவம் பிடித்தவர் என்று சொன்னாலும் அவரிடம் வேலை பார்க்கும் அத்தனை பேர்களும் முட்டாள்களாக இருக்க அவர் அப்படி கோபப்படுவதில் தப்பில்லை என்பத தோன்றுகிறது

விமலின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, அம்மாவாக நடித்திருக்கும் உமா பத்மநாபன், பாட்டியாக வரும் கே.ஆர்.விஜயா, ஸ்ரேயாவின் அம்மாவாக வரும் ரேகா, தோழியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, இன்னொரு உதவியாளராக இருக்கும் சத்யன், வில்லன் தேவ் கில், கிரேன் மனோகர் உள்ளிட்ட மற்ற முகம் தெரிந்தவர்கள் படத்தின் ஓடிடி விற்பனைக்கு உதவி புரிவார்கள்.

உள்நாடு வெளிநாடு என்று டபுள் ஷிப்ட் பார்த்து தன் பெயரை காப்பாற்றிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள் ஓகே. ஆனால் அவரது வழக்கமான குத்து மிஸ்ஸிங். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கமர்சியல் படங்களை இயக்குவதில் கில்லாடி என்று இருக்க, இந்தப் படத்தையும் அப்படித்தான் எதிர்பார்க்கிறோம். கைக்கு அடக்கமான பட்ஜெட்டையும் காஸ்ட் அண்ட் க்ரூவையும் வைத்துக்கொண்டு குடும்பங்கள் கண்டு களிக்க ஒரு கலகலப்பான கமர்சியல் படமாக இதை கொடுத்திருக்கிறார்.

கதையைப் பொறுத்த அளவில் கமல் தயாரித்த ‘நள தமயந்தி’ படம் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை.

அங்கங்கே இடரும் லாஜிக்குகளை தள்ளி வைத்துவிட்டு படத்துக்கு போனால் ஏமாற்றாது.

சண்டக்காரி – சமாளித்த கேடி ..!

– வேணுஜி