May 18, 2024
  • May 18, 2024
Breaking News
September 19, 2020

தமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் மறைந்த தினம் இன்று

By 0 990 Views

தமிழ் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் கே. பி. சுந்தராம்பாள், மறைந்த நாள் இன்று (செப்-19/1980)

இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன் தாராவை பெண் சூப்பர் ஸ்டார் என்கிறோம். ஆனால், இந்த சாதனையை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே செய்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள் என்பது இன்றைய தலைமுறையினருக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கலாம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தன் சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியவர் கே பி சுந்தராம்பாள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்ச ரூபாய் மதிப்பு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இத்தனைக்கும் கவர்ச்சியை காட்டி அந்த இடத்தை அவர் பிடிக்கவில்லை. மாறாக தன் கணீர் என்ற வெண்கலக் குரலால் பாடி அசத்தி சூப்பர் ஸ்டார் ஆனவர் கே.பி.எஸ்.

அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளமே ஒரு லட்சம் எனில் அவரது படங்கள் எவ்வளவு வசூலித்து இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.

ஆனால், அவரது வாழ்க்கை எவ்வளவு கண்ணீரும், கவலைகளும் நிறைந்தது என்பதை இங்கே கொடுத்திருக்கிறோம் – படித்து நெகிழுங்கள்.

நாடகம், இசை, திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி.சுந்தராம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கரூரை அடுத்த கொடுமுடியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார்.

இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை. குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது.

வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.

இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுந்தராம்பாளே கூறியதாவது இது:_ “வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா.

நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார். பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம்.

அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, “நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!” என்றார்.

அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். “என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்” என்று தன் வீட்டுக்கு அழைத்தார்.

அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார். அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. “மாமா” என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார்.

இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகு நேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன்.
விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார்.

“நடு ராத்திரியில் பாடியது யார்?” என்றார் இன்ஸ்பெக்டர். “நான்தான்” என்றேன். அவர் நம்பவில்லை. எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன்.

அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு. காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக.” இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டுள்ளார்.

கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரரான கே. பி. சுந்தராம்பாள் பாடி நடித்த பாடலை கீழே பாருங்கள்…