தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் உரிமை போலீசுக்கு இருக்கிறது. ஆனால் அந்த போலீசே தவறு செய்தால் அவர்களை யார் தட்டிக்கேட்பது..?
அப்படித் தட்டிக் கேட்ட சாமானியன் நாயகன் லோகேஷ் கனகராஜ் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறார். அது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது.
ஆனது ஆயிற்று, போலீஸ் துரத்தும் குற்றவாளியாக மாறிய பின் வேறு என்ன செய்வது என்று தனக்கு நியாயமானவை என்று எதெல்லாம் தோன்றுகிறதோ அதற்காக எந்த எல்லைக்கும் சென்று அதைச் செய்து வருகிறார் லோகேஷ். அதில் பல வன்முறைச் செயல்கள் அடக்கம்.
இந்நிலையில் சஞ்சனா ஏ.கேவை சந்தித்து வாழ்க்கையில் வசந்தம் ஏற்பட்டது போல் உணர்ந்து அவரை காதலிக்கிறார். ஆனால் அந்தக் காதலும் ஈசலின் வாழ்வு போல் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சஞ்சனா இறக்க… முடிவடைகிறது.
கண்ணெதிரே சஞ்சனாவைப் பறிகொடுத்த லோகியும் அவரது கூட்டாளிகளும் போலீசால் தொடர்ந்து துரத்தப்பட அவர்களை இவர்களும் வஞ்சம் தீர்க்கக் காத்திருக்க, சஞ்சனாவின் இழப்பால் புண்பட்டு இருந்த லொகேஷன் மனதுக்கு பாலியல் தொழிலாளி வாமிகா கபியுடன் ஆன தொடர்பு மருந்தாக அமைகிறது.
தன்னை ஒரு நரக சூழலில் இருந்து காப்பாற்றும் லோகியுடனேயே சுற்றி அலையும் வாமிகாவால் தலைமறைவாகச் சென்று திருந்தி வாழ நினைக்கிறார் லோகி.
அவரது எண்ணம் ஈடேறியதா, வாமிகாவும் அவரும் ஒன்றிணைந்து வாழ முடிந்ததா, கொடுங்கரத்துடன் தொடரும் போலீசின் கையில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்பதுதான் மீதிக் கதை.
தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கனமான வேடம். படம் முழுவதும் சுட்டுத் தள்ளினாலும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.
எவ்வளவு அடி வாங்கினாலும் அடுத்த காட்சியிலேயே அவர் பிரஷ்ஷாக வந்து விடுவது கதாநாயகர்களுக்கு உரிய சினிமா வரம்.
நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபிக்கு அதிகபட்சமான மேக்கப் போடப்பட்டிருந்தாலும் அதுவே அவரது கதாபாத்திரத்தை நியாயப்படுத்துகிறது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா, யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று உயிரை விட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
தலைவாசல் விஜய் முடிவு எதிர்பார்த்ததுதான். ஆனால் லோகியின் தந்தையாக வரும் கஸ்தூரி ராஜாவின் முடிவு எதிர்பாராதது.
இவர்களுடன் நடித்திருக்கும் கிரிஷ் டய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட நடிகர்கள் நமக்கு அதிகமாக அறிமுகமாகாமல் இருந்தாலும் அந்தந்தப் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.
படத்தில் கண்ணுக்கு தெரியாத கதாநாயகன் ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜிதான். படம் பரபரவென்று இறக்கைகட்டி பறப்பதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அந்தப் பயணத்தில் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னாவும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்.
அனிருத்தின் இசை திரைக்கதைக்கு பொருத்தம் இல்லாமல் பயணித்தாலும் படம் முடிந்தும் பல மணி நேரங்களுக்கு அந்த இசை மனதிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ரத்தம் தெறிக்காமல் படம் எடுக்கத் தெரியாத அருண் மாதேஸ்வரனின் படம் இது என்று நாம் தெரிந்தே போய் இருப்பதால் படத்தில் தெறிக்கும் வன்முறை குறித்து நாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கதை, லாஜிக், நீதி இவற்றையெல்லாம் மறந்துவிட்டு (இந்த gen z யுகத்தில் அதெல்லாம் யார் சார் கேட்டா..?) படத்தைப் பார்த்தால் ஒரு நேர்த்தியான ஆக்சன் படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.
அதெல்லாம் சரி, டிசி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா. நாயகன் தேவதாஸ் பெயர் மற்றும் நாயகி சந்திராவின் பெயரின் முதல் எழுத்துக்கள்தான் அவை.
டிசி – இனி நாயகனாக லோகேஷ் கனகராஜ் ஆகப் போகிறார் பிசி..!
– வேணுஜி