தனுஷுக்கு எப்போதுமே கிராமியப் பின்னணியைக் கொண்ட படங்கள் ரசிக்கும்படியாக அமையும் – இதுவும் அந்த வகைப் படம்தான்.
வங்கியில் பெற்ற கடனுக்காக இறந்துபோன தந்தையின் பெற்ற கடனை அடைக்கப் போராடும் மகனின் கதை.
அந்தக் கடனை அவர் எப்படி அடைக்கிறார் என்பதை வழக்கமான ஹீரோயிசத்திலிருந்து மாறுபட்டு money heisting formula வில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.
தந்தையுடனான உறவு, காதல் மனைவியின் மேலான நேசம், திட்டமிட்ட திருட்டு, திட்டமிடாத ஆக்ஷன் என்று கரசாமி வேடத்தில் அமளி துமளிப் படுத்தி இருக்கிறார் தனுஷ்.
அப்பா மகன் உறவுக் கதைகள் இவருடைய தனித்தன்மை என்றால் இதில் வேறு மாதிரியான பரிமாணத்தில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார் அவர்.
இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் முதன்மையானது என்கிற அளவில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் கே. எஸ்.ரவிக்குமார்.
அவர்தானா அது என்று நாம் நெடுநேரம் யோசித்துதான் அவரை அடையாளம் காண முடிகிறது அத்தனை அற்புதமான ஒப்பனை… மற்றும் உடல் மொழி..!
மகனுக்கு மூட்டை தூக்க அவர் கற்றுக்கொடுப்பது அனுபவ நேர்த்தியின் அடையாளம்.
அதேபோல் தோற்றத்தில் அடையாளம் காணமுடியாமல் நடிப்பில் அடையாளம் தெரிந்த இன்னொருவர் எம். எஸ்.பாஸ்கர்.
விரும்பி ஏற்றுக் கொண்ட வழக்கில் வெறுப்பு மேலிடும் காவல் அதிகாரியாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு கடைசியில் எடுக்கும் முடிவு எதிர்பாராதது.
அதேபோல் எதிர்பாராமல் வில்லன் ஆகும் ஜெயராம் வேடமும் வித்தியாசமானது.
நாயகி மமிதா பைஜூவை இன்னும் அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம். “என்னைப்பத்தி யோசிக்கவே இல்லையா..?” என்று பைஜு தனுஷிடம் கேட்பது, இயக்குநரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
நகைச்சுவையையும், குணச் சித்திர நடிப்பையும் ஒருசேரத் தருவதில் கருணாஸ் தனித்துவமானவர். இதிலும் மிளிர்ந்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷின் இசை படத்தின் ஜீவன் ஆகி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தன் தனித்துவமான நிறத்தில் கவர்கிறார்.
அமைதியாக ஆரம்பித்து, பரபரப்புடன் இடைவேளை விட்டு, நாடித்துடிப்பு எகிற முடியும் திரைக்கதையில் இரண்டாவது படத்திலும் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.
அந்த ‘தேவர் மகன்’ ஷூட்டிங் எபிசோடும், லாங் ஷாட்டில் கமலும் (?) செம லந்து..!
ஏழைகளை வஞ்சிக்கும் தனியார் வங்கிகளின் தோலை உரித்திருக்கிறார் இயக்குநர்.
கர – பர…பர..!
– வேணுஜி