கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து கமல் கதாநாயகனாக நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கி இருக்க, உதயநிதி விழாவில் கலந்து கொண்டார்.
ரஜினி, சூர்யா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த சிம்பு பேசியது,
“கமல் 50 நடந்த போது நான் மேடையில் ஏறி பேச முடியவில்லை என வருத்தமா இருந்துச்சு. அது இப்போது நிறைவேறி இருக்கு. அப்பா எப்படி ஆப்-ஸ்கிரின்ல எப்படியோ அது மாதிரி கமல் சார் எனக்கு ஆன்-ஸ்கீரின் குரு. விஸ்வரூபம் படம் பிரச்னையின் போது, எதுக்குமே எழுந்து ஓட மாட்டேன் ஆனால் அன்னிக்கு கமல் சார் கூடவே இருந்தேன். இந்த படம் ட்ரைலர் சூப்பரா இருந்தது. ஒவ்வொருமுறை கமல் சார் படம் வரும் போது என்னை கூப்பிடுவாரு, ஒரு தடவை ‘படம் நல்லா இருக்கு,ஆனா ஓடுமான்னு தெரியல’ எனச் சொன்னேன். இன்னொரு தடவ ‘எனக்கு படம் பிடிக்கல. ஆனால் சூப்பர் ஹிட் ஆகும்னு’ சொன்னேன். கமல் சார் சிரிச்சாரு.
இந்த படத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்னு சொல்றேன். லோகேஷ் உடன் நிறைய பேசி இருக்கேன். பழகி இருக்கேன். நிறைய பேசணும் வெளிய சொல்லணும் என இருக்க காலத்துல தன்னுடைய படம் பேசணும்னு வேலை பார்க்கிற ஒருத்தர், லோகேஷ் கனகராஜ். இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் வச்சுட்டு படம் பண்றது சாதாரண விஷயம் கிடையாது.”
அப்புறம் இந்த விஜய் சேதுபதி தன்னை எப்போதும் நார்மலா வச்சுட்டு மத்தவங்க கிட்ட இருந்து கத்துக்க முயற்சி செய்பவர். அவர் கூட செக்க சிவந்த வானம் படத்துல நடிச்சு இருக்கேன். மலையாளத்துக்கு பஹத் எப்படியோ அப்படி தமிழுக்கு விஜய் சேதுபதி. பஹத் பாசில் எனக்கு ரொம்ப பிடிக்கும். பர்பார்மன்ஸ் செய்கிற மூன்று பேர் இந்தப் படத்தில் இருக்காங்க. அனிருத்தின் உழைப்பு எனக்கு தெரியும். அனிருத்தின் உழைப்பு தான் ஹிட் ஆகுறதுக்கு காரணம். படம் வெற்றியடைய வாழ்த்துகள்” .
விஜய் சேதுபதி பேசியது,
“கமல் 60 பங்ஷன் அப்போ, கமல் சார் முன்னாடி அவர்கூட நடிக்கணும் கேட்டேன். இப்போ அது நடந்துருச்சு, அடுத்து ஒரு வேண்டுகோள் சார் … உங்க டைரக்சன்ல நடிக்கணும்னு ஆசை சார்.
13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில”
இயக்குநர் பா.இரஞ்சித் பேசியது
“லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க. அப்படி எதுவும் கிடையாது. ‘விக்ரம்’ அது எல்லாத்தையும் உடைச்சு பெரிய வெற்றிபெறும்னு நம்புறேன். லோகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்களை நம்பி நிறைய பேர் காத்திருக்கோம்.”
அப்புறம் அந்த பழைய விக்ரம் அருமையான படம். மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. விருமாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்” என அதிகாரபூர்வமாக விக்ரம் விழா மேடையில் அறிவித்துள்ளார் பா.இரஞ்சித்.
உதயநிதி ஸ்டாலின் பேசியது
“கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போல தான் இந்த படத்தில் கடைசியில் இணைந்தேன். நிறைய பேர் என்னிடம் கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கி விட்டீர்களா என்று கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும் தான் தெரியும்.
அது போகட்டும் அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரீங்க கமல் சார். ஆனா ஒரு ரெக்வஸ்ட், வருசத்துக்கு ஒரு படமாச்சு பண்ணுங்க சார் . ரெட் ஜெயன்ட்ல பல சின்ன படங்கள் தயாரிக்கும் போது பெரிய பலமா கமல் சார் இருப்பாரு. நானும் அவரோட பெரிய ரசிகன்.. இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு ”
அனிருத் பேசியது,
“’விக்ரம்’ படம் எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம். “நான் 11 வருடங்களாக இசையமைத்து வருகிறேன். ‘இந்தியன்2’ படத்தில் கிடைத்த வாய்ப்பும் முழுமை பெறாமல் போன வருத்தத்தில் இருந்த போது தான், லோகேஷ் இந்த வாய்ப்பு கொடுத்தார். ‘பத்தல பத்தல’ பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் அனுப்பி விட்டார். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கின் வரிகளை பார்த்து இதில் பிழை இருக்கிறது என சொல்லி அவரே சரி செய்து உடனே பாடினார். ‘மாஸ்டர்’ 50% லோகேஷ் படம். ஆனால், ‘விக்ரம்’ படம் முழுக்க முழுக்க கமல் சாரின் ரசிகனாக லோகேஷின் சம்பவம். எந்தவொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு படத்தின் வெற்றி குறித்து பேச மாட்டேன். ஆனால், இந்த படம் நிஜமாகவே உலகம் முழுக்க வெற்றி பெறும்”
லோகேஷ் பேசியது,
“கமல் சார் வீட்டில் என்னுடைய ஆரம்ப காலத்தில் நின்று கைக்காட்டுவார் என்று எதிர்பார்த்து கடவுளை வேண்டி கொண்டேன். ஆனால், இப்போது ஆக்ஷன் கட்டே சொல்ல வைத்து விட்டார். அந்த ஆண்டவருக்கும் இந்த ஆண்டவருக்கும் நன்றி. அவரால் தான் நான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். எட்டு ஒன்பது வருடங்கள் சினிமாவில் என் உழைப்பு தான் அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போய் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு தேவைப்பட்ட காட்சி ஒன்றுக்கு 26 புஷ் அப்கள் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். படம் வெளியானதும் மேக்கிங் வீடியோவாக முதலில் அதை தான் வெளியிடுவேன். இந்த வயதில் கொரோனாவுக்கு பிறகு கமல் சார் உழைப்பை பார்க்கும் போது நாம் பார்ப்பதெல்லாம் வேலையே இல்லை என்று தான் தோன்றுகிறது. படம் பார்த்து விட்டு கமல் பிடித்திருக்கிறது என சொன்னதும் எனக்கிருந்த ஒரு வருட அழுத்தம் குறைந்தது. இந்த படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதற்கு நன்றி. ஏன் அந்த நன்றி என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும்”
கமல்ஹாசன் பேசியது,
“உயிரே உறவே வணக்கம்”.. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய படத்தின் விழா நடக்கிறது .தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை. நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி கேவி அழுதார். ‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார். என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது. நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் வெளியில் எல்லாம் சென்று நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரிதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.
நான் poltical cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது
இதுக்கிடையிலே எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்த போது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்த போது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.
இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய் தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார். இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு தான் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். ஏன் நானும் ரஜினியும் திரையில் இருந்தாலும் நண்பர்களாக இல்லையா. இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது
என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும்.
விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்தது போல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ அது போல விஜய்சேதுபதி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் ‘பத்தல பத்தல’ வெற்றி எனக்கே இப்படி கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே பாடி இருக்கிறேன்.
இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்து கொடுத்த சூர்யாவுக்கு நன்றி”
நிகழ்ச்சியின் இடையிலேயே உதயநிதி விடை பெற்று செல்ல அதைப் பற்றி பேசிய கமல் உதயநிதி நடித்திருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் திரையிடல் நடப்பதாகவும் அதற்கு மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்ததாகவும் அதனால் அவர் கிளம்பிச் சென்றதாகவும் கூறினார்.