August 15, 2026
  • August 15, 2026
Breaking News
August 15, 2026

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

By 0 10 Views

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத்.

அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது.

உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

சொந்த.வாழ்வில் அம்மாவுக்கு அப்பாவால் நேர்ந்த இழப்பின் காரணமாக கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் கோடீஸ்வரத் தொழிலதிபர் சூர்யாவை ஒரு வாரிசு வேண்டும்.என்பதற்காக அவரது அம்மா ராதிகா அவரைக் கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்.

அதற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா அங்கே ஒரு வாடகை தாய் மூலம் குழந்தையை பெற வைத்து அதை அம்மாவிடம் கொண்டு வந்து கொடுக்கிறார். அதிர்ச்சி அடைந்தாலும் மகனின் பிடிவாதம் தெரிந்து அந்த குழந்தையை வளர்க்க ஆரம்பிக்கிறார் ராதிகா.

ஆனால் அந்தக் குழந்தைக்கு எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை செய்ய வேண்டி இருக்க, அதை தானம் செய்ய குழந்தையின் அம்மா வந்தால்தான் ஒரே வழி என்று ஆகிறது. அதற்காக அந்த பெண்ணை தேடிப் பிடிக்கும்போது அது 20 வயதேயான நாயகி மம்தாபைஜு என்று தெரிகிறது.

பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து போன நிலையில் தனியாகவே வளர்ந்து வரும் மம்தா, தனது மருத்துவ படிப்புக்கான செலவுக்காக இப்படி வாடகைத் தாயாக இருக்க ஒத்துக் கண்டதும் தெரிய வருகிறது.

மம்தாவை சூர்யா வீட்டுக்குக் கூட்டி வர ராதிகாவுக்கும் அவருக்குமான புரிதலும், சூர்யாவின் நல்ல மனதின் மேல் மம்தாவுக்கு காதலும் ஏற்பட முடிவு என்ன என்பதுதான் கதை. 

42 வயதாகியும் சூர்யா கல்யாணமே வேண்டாம் என்று இருப்பதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் உடல் இச்சைகளுக்கு அவர் என்ன செய்கிறார்? என்ற கேள்விக்கு மாதத்தில் மூன்று நாட்கள் வெளிநாடு போய் சல்லாபித்து வருகிறார் என்கிற விஷயம் சொல்லப்படுகிறது. 

வழக்கமாக ஒரு ஹீரோவை இப்படி எல்லாம் காட்டுவதற்கு இயக்குனரும் சரி அந்த ஹீரோவும் சரி ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அதையெல்லாம் ஏன் மறைக்க வேண்டும் என்கிற ரீதியில் இந்த ஜென் z யுக இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பதுதான் பெரிய விஷயம்.

அவர் ஆண்மைக் குறைபாடு உள்ளவர் அல்ல அதே நேரத்தில் தன்னில் பாதி வயதுடைய ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை என்கிற ஹீரோயிஸம்  சினிமாவுக்கு புதிதாகவே இருக்கிறது.

அதை மனமுவந்து ஏற்று நடித்திருக்கும் சூர்யாவை பாராட்டலாம்.

இது போன்ற கதைகளில் ஒரு கட்டத்தில் அம்மா இறந்து போவார் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அந்த அதிர்ச்சியையும் இழப்பையும் கட்டுப்படுத்திக் கொண்டு இறுதிச் சடங்குகள் முடிந்தபின் தனிமையில் உடைந்து அழும் சூர்யாவின் நடிப்பு எக்ஸலண்ட்.

சூர்யாவுக்கு ஈடாக படத்தில் நம்மை ஒன்றச் செய்து விட்டவர்களில் மமிதா பைஜுவும், ராதிகாவும் முக்கியமானவர்கள்.

நிறைய அம்மா கேரக்டர்களை ராதிகா ஏற்று நடித்திருந்தாலும் இதில் இயல்பாக அதை நடித்து கடந்திருக்கிறார். என்னதான் வக்கீலும் டாக்டரும் அவர் எடுத்து வளர்த்த குழந்தைகள் என்றாலும் அவர்கள் செய்யும் தவறுக்காக அவர்களை செருப்பால் அடிப்பதெல்லாம் கொஞ்சம் அதிகபட்சமான சிந்தனை.

படத்தின் லைன் நமக்கு கிட்டத்தட்ட ஏற்கனவே தெரிந்தது போல் இருந்தாலும் மமிதா பைஜுவின் சுட்டித் தனமான நடிப்பு நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.

எத்தனை வருடங்கள் கழிந்தாலும் இன்னும் தனது அழகை இழந்து விடாமல் இருக்கிறார் ரவீனா டாண்டன் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. 

காமெடிக்கு என்று வரும் சுனில் ரெட்டி கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார். சூர்யாவிடம் அடி வாங்குவதற்கு என்று கடைசி கடைசியாக மைம்கோபி வந்திருக்கிறார்.

எந்த மொழியில் வெளியானாலும் இந்திய மனங்களையும், மரபுகளையும் முன்வைக்கும் படம் என்பதுடன் உலக மனங்களை ஒன்று இணைக்கும் திரைக்கதையை வெகுகாலம் கழித்து இதில் பார்க்கிறோம்.

முன்பாதி அற்புதமாக கடந்து விடுகிறது. அதிலேயே கிளைமாக்ஸ் இதுதான் என்று தெரிந்துவிட அதை எப்படி ட்ரீட் செய்யப் போகிறார்கள் என்பதையும் அதை தாண்டிய வேறு ஏதும் கிளைமாக்ஸ் இருக்குமா என்கிற பதட்டத்தையும் நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

ஆனால் பின்பாதியில் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருக்கிறார் அவர் என்று சொல்லலாம். அதிலும் நாம் எதிர்பார்த்த கிளைமாக்ஸ் இறுதியில் வந்துவிட அதை இவ்வளவு சுற்றி வளைத்து சொல்லி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. 

ஒரு கோடீஸ்வரனின் கதை என்பதால் படம் முழுவதும் எங்கும் வறுமை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வளமையை தன் ஒளிப்பதிவால் நியாயப்படுத்தி இருக்கிறார் நிமிஷ் ரவி. 

ஜிவி பிரகாஷின் இதயத்தை தொடும் பின்னணி இசை இந்த படத்துக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறது. ஆனால் பாடல்களிலும் அதே அளவு கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்த விஸ்வநாத்தை இளைஞர்களுடன் இணைந்து குடும்பங்கள் ரசிக்கலாம் என்பது உண்மை..!

– வேணுஜி