படத்தின் யுஎஸ்பி இளையராஜா. இந்தப்படத்துக்கு ஏன் இளையராஜா என்பது படம் தொடங்கியவுடன் புரிந்து விடுகிறது. அது, 80 களில் தொடங்கி 90களில் தொடரும் கதை என்பது.
அது ஏன் அப்போது நடக்கிறது என்பதற்கும் படத்தில் விஷயம் இருக்கிறது.
அத்துடன் இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கனவுப்படைப்பு என்று முன்னமே அறிந்து வைத்திருந்ததும், படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருந்தது.
வழக்கமாக ஆரம்பிக்கிறது படம். சின்ன வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வருகிறார்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த். ஆளுக்கு ஒரு காதலில்லாத காதல், அதனால் மோதல் என்று பிடிப்பில்லாமல்… ஆனால், பரபரவென்று போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை, சனந்தின் அண்ணன் சௌந்தரராஜா கேரளாவிலிருந்து டோரதி என்ற மலையாளப் பெண்ணான கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொண்டு வருவதில் இருந்து தடம் புறள்கிறது.
அண்ணியிடம் சனந்த் அளவுக்கு மீறிப் பழகுவதில் ஆணாதிக்கம் மற்றும் கௌரவ வீம்பு கொண்டு வாழும் சனந்த்தின் அப்பா முத்துக்குமாருக்கு கோபத்தை வரவழைக்க… அது ஒரு கொடூரமான கட்டத்துக்கு அவர்களைக் கொண்டு செல்கிறது.
அதன் விளைவாக நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். இந்நிலையில் கீர்த்திசுரேஷின் இழப்பிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் சனந்த்தை கொலை செய்ய அவரது தந்தையிடம் இருந்தே ரிஷிகாந்துக்கு அழைப்பு வர, அவரும் அதை ஒத்துக் கொள்கிறார்.
அது ஏன்..? அந்தக் கொலை நடந்ததா? இதன் முடிவு என்ன ஆனது என்பது யாரும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
அந்த கிளைமாக்ஸ் மூலம் புதிய விவாதத்தை சமூகத்தில் கிளப்பி விட்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இரண்டு நாயகர்கள் என்றாலும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவருக்கும் சரி சமமான பங்கு இருக்கிறது படத்தில். இருவரும் அதைப் புரிந்து கொண்டு தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருந்தாலும் சனந்த் ஒரு படி முந்துவது அவரது பாத்திரப் படைப்பால் எனலாம்.
இவர்கள் இருவருக்குமே இது ஒரு முக்கியப்படம். இந்த இடத்திலிருந்து இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும்.
படத்தின் தலைப்பை ஏற்கும் பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் வருவது குறைவான காட்சிகளில்தான். என்றாலும் அவர்தான் கதையின் மையப்புள்ளி.
சனந்த்தின் அப்பாவாக வரும் முத்துக்குமாருக்கு இது ஒரு லைஃப் டைம் கேரக்டர். வழக்கமாகவே தன் குணச்சித்திர நடிப்பால் கவரும் அவர், இதில் பல படிகள் மேலே போய் வயதான பாத்திரத்தில் ஆச்சரியப் படுத்தியிருக்கிறார்.
அவர் அவ்வப்போது அடிக்கும் விசில், கலவரப் படுத்துகிறது.
இவர்களுடன் ராமச்சந்திரன் துரைராஜ், செளந்தராஜன், ஜீவா சுப்பிர்மணியன், கெஜராஜ், ராம்ஸ் உள்ளிட்டவர்கள் திரைக்கதையைக் கடத்த சிறப்பாக உதவியிருக்கிறார்கள்.
கண்ணில் தெரியாத கதாநாயகர்கள் இருவர். ஒருவர் இசை ஞானி. கல்யாணவிருந்து, மற்றும் முத்துமணி பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டது மட்டுமல்லாமல் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். மட்டுமல்லாமல் எந்த இடத்தில் எப்படி இசைக்க வேண்டும் என்பதை அவரிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ளலாம்.
இன்னொரு நாயகர் ஒளிப்பதிவாளர் எஸ்.திரு. படத்தின் உணர்வு நிலைகளை காட்சிகள் மற்றும் நிறத்தில் கொண்டு வந்திருப்பதில் சர்வதேசத் தரம் காட்டியிருக்கிறார் அவர்.
கார்த்திக் சுப்புராஜுடன் ஸ்கிரிப்டில் கை கொடுத்திருக்கும் எழுத்தாளர் சரவணன் சந்திரனுக்குப் பாராட்டுகள். அதில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை அவர்களாக சொன்னாளன்றி வெளியில் தெரியாது.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், நான் லீனியரில் காட்சிகளைத் தொகுத்திருப்பது வெகுஜன ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதிலும் கீர்த்தி சுரேஷின் முடிவு பற்றி முழுதாக மறைத்தது ஏன் என்று தெரியவில்லை. அதைப் பார்வையாளர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி யூகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அதைத் தொங்கலில் விட்டவர் எடுத்துக்கொண்ட கதை முடிந்த பின்னரும் அதை இழுத்து விவாதத்தைக் கிளப்பும் விதமாக முடித்திருப்பதும் வலிந்து திணித்ததாக இருக்கிறது.
ஏகப்பட்ட கொலைகளை ஆதிக்கத் திமிரில் செய்து விட்டு சுகமாக வாழும் முத்துக்குமார் குடும்பத்தைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது. அது என்ன மாதிரியான குடும்பம்..? என்ன மாதிரியான ஊர்..? உவ்வே..!
டோரதி – ஒத்துக்கொள்பவர்களுக்கு புரட்சி… அல்லாதவர்களுக்கு மருட்சி..!
– வேணுஜி