September 30, 2026
  • September 30, 2026
Breaking News
September 30, 2026

கிட்டி திரைப்பட விமர்சனம்

By 0 10 Views

மர்டர் மிஸ்டரி கதைகளில் கொஞ்சம் புதுவிதமான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ். படத்தொடக்கமே இரண்டு கொலைகளில் தொடங்குகிறது.

ரவுடி ஒருவரும் இளம்பெண் ஒருத்தியும் அடுத்தடுத்து கொல்லப்பட, அந்தக் கொலைகளை செய்தவன் நான்தான் என்று நாயகன் அசோக் போலீசில் சரணடைகிறார். 

அவரை போலீஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்த, குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்து கோர்ட்டில் சமர்ப்பிக்க சொல்கிறார் நீதிபதி. 

அதற்காக களம் இறங்கும் காவல் அதிகாரி யுவனுக்கு அடுத்தடுத்து விசாரணையில் ஏற்படும் திருப்பங்கள் மிகப்பெரிய தலைவலியை தருகின்றன.

தான் இரண்டு கொலைகளை செய்ததற்கான காரணங்களை அசோக் சொல்ல அவை திரையில் விரிகின்றன. ஆனால் அதில் சில நெருடல்கள் எழ, அசோக்குடன் அவரது அறையில் தங்கி இருக்கும் நண்பன் அர்ஜுனா துரைசாமியின் பக்கம் போலீசின் கவனம் திரும்புகிறது.

அவர் சொல்லும் அடிப்படையில் அசோக் ஒரு மன நோயாளி என்பதும் மருத்துவர் அரவிந்தராஜிடம் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதும் தெரிய வர மீண்டும் அசோக்தான் குற்றவாளி என்று ஆகிறது. 

மேலும் தொடரும் போலீஸ் விசாரணையில் இன்னும் சில சிக்கல்கள் எழ, அதன் அடிப்படையில் உண்மை குற்றவாளி யார் என்று யுவன் கண்டுபிடிப்பதுதான் கதை.

துடிப்பான நாயகனான அசோக்குக்கு இதில் வித்தியாசமான வேடம். உருகி உருகி வட இந்திய பெண்ணான சங்கவியை காதலிப்பதும் அவள் இவரை வெறுத்து போக “இந்தி தெரியாது போடி..!” என்று அவர் கத்துவதும் ரசிக்க வைக்கிறது. 

அத்துடன் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிப்பதிலும் ஸ்கோர் செய்கிறார் அசோக். அதிலும் கேட்ட கதைகளை தன்னுடன் சம்பந்தப்படுத்தி அவர் கதை புனைவது இதுவரை நாம் பார்த்திராத பாத்திரப்படைப்பு. 

அத்துடன் காதல் காட்சிகளிலும் அவரது ஃபேவரிட் ஆன நடனத்திலும் தன் இருப்பை உறுதி செய்கிறார் அவர்.

இரண்டாவது நாயகனாகவும் காவல் அதிகாரியாகவும் வரும் யுவன், இளமையான காவல் அதிகாரி வேடத்தில் நச்சென்று பொருந்தி இருக்கிறார். தடுமாறாத அவரது நடிப்பு நல்ல எதிர்காலத்தை அவருக்கு பெற்று தரும்.

பெரிய பட்ஜெட் படங்களை போன்று சங்கவி, நிஷா , சிமு அத்வானி என்று மூன்று நாயகியர் வருவது படத்துக்கு பலமாக இருக்கிறது. 

அவர்களில் கடைசியில் வரும் சிமு அத்வானி அதிகமாகக் கவர்கிறார்.

அசோக்கின் நண்பனாக வரும் அர்ஜுனா துரைசாமியின் நடிப்பும் நன்று. ஆரம்பத்தில் அப்பாவித்தனமாக வந்து அடுத்தடுத்து ஆபத்தாக தெரிகிறார் அவர்.

மருத்துவர் வேடத்தில் வரும் அரவிந்தராஜ் தனது அனுபவ நடிப்பால் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். ஒரு துணை பாத்திரமே நடித்திருக்க வேண்டிய மருத்துவர் வேடத்தில் அவர் ஏன் வருகிறார் என்ற கேள்விக்கு கடைசியில் விடை தெரிகிறது

நீதிபதி வேடத்தில் வரும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது ட்ரேட் மார்க் நடிப்பில் பங்களித்திருக்கிறார். அவரது பேரன் படத்தில் இடம்பெறும் “மாறா மாறா…” பாடலை பாடியிருப்பதும் அவருக்கு புகழ் சேர்க்கிறது.

இசையமைப்பாளர் காதரின் இசையில் பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன. பின்னணி இசையும் ஓகே. 

ஒளிப்பதிவாளர் வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கேற்றபடி பயணித்திருக்கிறது.

கதை, திரைக்கதை ,வசனம், எழுதி திரைப்படத்தை இயக்கியுள்ள நெடுமாறன் மோகன்தாஸ், சிறிய பட்ஜெட் படத்தை பெரிய படம் அளவுக்கு டிரீட்மெண்டில் சுவை சேர்த்து கொண்டு சென்று இருக்கிறார்.

நடிகர்களிடம் வேலை வாங்குவதில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் படத்தின் நேர்த்தி கூடியிருக்கும். 

ஆனாலும் எங்கும் தொய்வில்லாமல் பயணிக்கும் இந்தப் படம் பார்க்கத் தகுந்ததாகவே இருக்கிறது.

கிட்டி – சஸ்பென்சில் கெட்டி..!

– வேணுஜி