மதுமிதா இயக்கி, அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம் இது. தந்தையின் தவறான வளர்ப்புக்குள்ளான பிள்ளைகளின் தடுமாற்ற வாழ்வைச் சொல்லும் கதைக்களத்தை கொண்டுள்ளது.
அப்படி தந்தையால் ஒன்றுக்கும் உதவாத மகனாக கருதப்படும் அர்ஜுன் தாஸ் கேரளா-தமிழ்நாடு எல்லையில் ஒரு உதவி ஆய்வாளராக பணி ஏற்கிறார், அவர் கண்ணெதிரே நடக்கும் ஒரு கார் விபத்திற்குப் பிறகு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட, ‘ஜான் டோ’ எனக் குறிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சிறுவனின் மரணத்தை விசாரிக்கிறார்.
ஒரு தனிப்பட்ட சம்பவமாகத் தொடங்குவது, அப்பகுதி முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் தொடர் கொலைகளை வெளிக்கொண்டு வருகிறது.
ஆனால் இவை எல்லாமே தன்னுடைய அப்பாவின் சாபத்தை மாற்றி தானும் சாதித்தேன் என்பதை நிரூபிக்க அர்ஜுன் தாஸ் தன்முனைப்பில் போராடி இந்த உண்மைகளை கண்டுபிடிப்பதாக அமைகிறது.
அதில் அர்ஜுன் தாஸ் தனது தனிமனித தவிப்பையும், சமூக கோபத்தையும் அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். தன்னை உதாசீனப்படுத்தும் ஒவ்வொருவரிலும் தன்னுடைய அப்பா வெளிப்படுவதை பார்த்து மனம் வெதும்புவது ஒரு குழந்தையின் அழுகையைப் போலவே வெளிப்படுகிறது.
அதனாலேயே சிறுவர்கள் கொலை செய்யப்படும் நிகழ்வில் தனி கவனம் செலுத்தி அதன் ஆணிவேரை ஆராய புறப்படுவது நியாயமாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் தன் சிறுவயது மகன் காணாமல் போன துக்கத்தில் தன் பதின்வயது மகளுடன் அலையும் பாத்திரத்தில் வரும் சிருஷ்டி அற்புதமாக நடித்துப் பாராட்டு பெறுகிறார்.
தன் அப்பா செய்த தவறுக்கு சமூகத்தால் பாதிக்கப்பட்டு சுயத்தை இழந்து நிற்கும் சிருஷ்டியின் மகளான ஜாரா வினித்தின் பாத்திரமும் அதன் மீதான அவரது நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது.
அந்தக் குட்டி பையனும் நடிப்பென்றே தெரியாத வேடத்தில் பாராட்டு பெறுகிறான்.
ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸ் மீது வெறுப்பு காட்டினாலும் போகப் போக அவரது திறமை மீது நம்பிக்கை வைத்ததுடன் அவரை ஸ்பான்சாரும் செய்யும் சஞ்சனா நடராஜன் அந்த பாத்திரத்திற்கு என்று வடிவமைக்கப்பட்டவர் போல் இருக்கிறார். காவல்துறையில் ஏதாவது கௌரவ பதவி கொடுக்கும் அளவுக்கு அவரும் காக்கிச்சட்டையும் நச்சென்று பொருந்தி இருக்கிறார்கள்.
அனுபமா குமாரின் பாத்திரம் நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. அவரது கணவராக வரும் ஜெயபிரகாசும் இதுவரை ஏற்காத பாத்திரத்தில் வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர் ப்ரீதா ஜெயராமன் உருவாக்கியுள்ள உணர்ச்சிப்பூர்வமான சூழல் படத்தின் பலத்தில் பாதி.
இசை பழைய பாடல்களை நினைவூட்டினாலும் உணர்ச்சி மயமாக ஒலிக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் மதுமிதா முன் பாதிக் கதையை அற்புதமாக கையாண்டு இருக்கிறார். இரண்டாம் பாதியை எப்படித்தான் நகர்த்தப் போகிறார் என்கிற விறுவிறுப்புடன் படம் நகர கிளைமாக்ஸ் ஒரு உணர்ச்சிமயமான கட்டத்துக்கு வந்து முடிகிறது. அதில் தப்பில்லை – ஆனால் அதற்கு கூறும் லாஜிக்குகளும் அந்தத் தொடர் கொலைகளும் ஏற்புடையவை அல்ல.
ஜான் டோ – அப்பாக்கள் ஜாக்கிரதை..!
– வேணுஜி