November 12, 2026
  • November 12, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • பிளாக் கோல்ட் (BLACK GOLD) திரைப்பட விமர்சனம்
November 12, 2026

பிளாக் கோல்ட் (BLACK GOLD) திரைப்பட விமர்சனம்

By 0 11 Views

உலக சந்தையில் குரூடு ஆயிலை ‘பிளாக் கோல்டு’ என்பார்கள் அதன் நிறத்தையும் மதிப்பையும் கருதி. நிலக்கரியையும் அப்படி அழைப்பதுண்டு. ஆனால், இந்தப்படத்தில் இயக்குனர் தீரன் அருண்குமார் சொல்லி இருப்பது மனிதனின் தலை முடியை.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஆனால், அதுதான் உண்மை. இந்த உண்மையை வைத்து ஒரு கிரைம் திரில்லரைத் தந்திருக்கிறார் அவர்.

அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வழக்கமுள்ள நடிகர் வெற்றி இந்தப்படத்தில் நடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சாதாரண லோடு டிரைவராக இருக்கும் லிவிங்ஸ்டனின் மகனாக இருக்கும் வெற்றி ஒரு பிரபல கார் விற்பனை நிலையத்தில் தலைமை மெக்கானிக்காக இருக்கிறார். அவரது தங்கை ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். 

இன்னொரு பக்கம் நேரடியாக அல்லது மறைமுகமாக பொருள்களைக் கைமாற்றிவிடும் தொழில் செய்யும் அரோல் டி சங்கர் முக்கிய புள்ளியாக இருக்கிறார். அவரிடம் கையாளாக இருந்து இப்போது தனியாக தொழில் செய்யும் ஏ வெங்கடேசுக்கும் அவருக்கும் தொழில் போட்டி இருந்து வருகிறது. 

ஏ வெங்கடேஷிடம் தான் லிவிங்ஸ்டன் டிரைவராக இருக்கிறார். அப்படி அவர் அனுப்பும் 5 கோடி மதிப்புள்ள தலை முடியுடன் அந்த வேன் காணாமல் போகிறது. லிவிங்ஸ்டன் அந்த பொருள்களோடு தலைமறை வாங்கி விட்டார் என்று நம்பும் வெங்கடேஷ் அவரை பிடிக்க போலீசின் உதவியை நாடுகிறார். 

ஆனால் தந்தையின் நல்ல உள்ளத்தை அறிந்த வெற்றி இதில் ஏதோ சூது இருப்பதாக நம்பி அப்பாவை கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். 

வெற்றியின் தேடலில் லிவிங்ஸ்டன் கிடைத்தாரா? அல்லது ஏ வெங்கடேசன் நம்பிக்கை படி அவர்தான் பிளாக் கோல்டைக் கடத்தினாரா..? என்பதற்கெல்லாம் மீதிப் படம் பதில் சொல்கிறது. 

ஆரம்பத்தில் இயல்பான இளைஞராக வரும் வெற்றி தான் காதலிக்கும் பிரியாலயாவின் அப்பா தன்னை அவமானப்படுத்தும் போது சுயமரியாதை மிக்க இளைஞராக வெளிப்படுகிறார். அதே நேரத்தில் அப்பாவைப் பற்றி தப்பாக பேசுவத அடிக்கப் பாய்வதில் சீற்றமுள்ள மகனாகவும், கடைசியில் வில்லன் கோஷ்டியை அடித்த புரட்டி எடுப்பதில் முழுமையான ஆக்சன் ஹீரோவாகவும் தெரிகிறார். 

பிரியாலயாவின் சிரிப்பில் கொஞ்சம் புன்னகை அரசி சினேகா எட்டிப் பார்க்கிறார். வீட்டில் தன் காதலை முறையாக தெரிவிக்காமல் திடீரென்று வெற்றியை அழைத்துக்கொண்டு போய் ஏன் அவமானப்படுகிறார் என்று தெரியவில்லை.

தன்னுடைய அனுபவ நடிப்பிலேயே தான் ஒரு அப்பாவியான நியாயஸ்தன் என்பதைப் புரிய வைத்து விடுகிறார் லிவிங்ஸ்டன்.

அலட்டி கொள்ளாத நைனாவாக வரும் அரோல் டி சங்கர் , அண்டர் பிளே செய்து கவனத்தைக் கவர்கிறார். ரொம்ப காலத்துக்கு முன்பே சினிமாவில் வழக்குழிந்து போன சுருள் பட்டாவை லாவகமாக சுழற்றி சபாஷ் சொல்ல வைக்கிறார்.

ஏ. வெங்கடேஷ் ஆர்ப்பாட்டம் செய்வதோடு சரி. 

வெற்றியின் அம்மாவாகவும் லிவிங்ஸ்டனின் மனைவியாகவும் வரும் துளசி, ஏ வெங்கடேஷிடம் “நீங்க இழந்ததெல்லாம் உங்களுக்கு கிடைச்சிருச்சு… ஆனா நாங்க இழந்தது கிடைக்கலையே..?!” என்று மருகும் போது உருக வைத்து விடுகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அபிராமி வெங்கடாச்சலம் புலனாய்வு செய்கிறாரே தவிர எதையும் கடைசிவரையில் கண்டுபிடிக்கவில்லை. 

தானா சேர்ந்த கூட்டமாக வரும் அந்த நால்வர் அணி வில்லன்கள் ரொம்பவே பயமுறுத்துகிறார்கள்.

சந்தோஷ்குமார் வீராசாமியின் ஒளிப்பதிவு படத்தின் நேர்த்தியை கூட்டி இருக்கிறது. முக்கியமாக இரவு காட்சிகளை அற்புதமாக ஒளி அமைத்து படமாக்கி இருக்கிறார்.

கவாஸ்கர் அவிநாஷின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. அதுவும் கடைசி கடைசி என்று கிளைமாக்ஸ் நெருங்கும் போது அடித்து நொறுக்கி இருக்கிறார். 

தலை முடிக்கு என்று இவ்வளவு பெரிய மார்க்கெட் இருப்பதை இந்த படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கும் இயக்குனர் தீரன் அருண்குமார் பாராட்டுக்குரியவர். ஆனால் ஆரம்பத்தில் தங்கத்தை சுற்றியே போய்க்கொண்டிருக்கும் கதை திடீரென்று தான் தலைமுடிக்கு மாறுகிறது. கதை தொடக்கத்திலிருந்து தலைமுடியை வைத்து கதை பின்னி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். 

பிளாக் கோல்ட் – தலையாய பிரச்சினை..!

– வேணுஜி