October 22, 2026
  • October 22, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஹைக்கூ திரைப்பட விமர்சனம்
October 23, 2026

ஹைக்கூ திரைப்பட விமர்சனம்

By 0 14 Views

மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லப்படும் ஒரு கவிதை வடிவம்தான் ஹைக்கூ. அப்படி ஒரு முக்கோண காதல் கதையை இந்தப் படத்தில் இளமை ததும்பச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னச்சாமி. 

கல்லூரி மாணவனாக வரும் நாயகன் ஏகன், உடன் இருக்கும் நண்பர்களின் குறும்புத்தனத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப் படுகிறார். வேறு கல்லூரியில் இடம் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது. 

அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது அது ஒரு பெண்கள் கல்லூரி என்று. அந்த வருடத்தில் இருந்து ஆண்களையும் சேர்க்கும் திட்டத்தில் கல்லூரி நிர்வாகம் அவர்களை வரவேற்க போய்ச் சேர்ந்த ஒரே ஆண் ஏகன் மட்டுமே. 

ஏகத்துக்கும் பெண்களாக இருக்க ஒரு பாத்ரூம் போகக்கூட திண்டாடும் நிலையில் இருக்கும் ஏகன் மீது அவர் வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி நெருங்கிப் பழகுகிறார். அந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மலர்கிறது. 

ஆனால் அந்த வயதுக்குரிய பிரச்சினைகள் , சாதிப்பிரச்சினை, வேலையின்ம போன்ற பல காரணங்களால் அந்தக் காதலில் விரிசல் விழுவது மட்டுமல்லாமல் ஸ்ரீதேவி இன்னொருவரை மணக்கிறார். 

அந்தப் பருவத்தை தாண்டி பணிபுரியும் பருவத்துக்கு போன ஏகனுக்கு அங்கு ஃபெமினா ஜார்ஜ் – உடன் இன்னொரு காதல் முளைக்க, ஆனால் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் ஃபெமினா இருக்க இந்தக் காதல் என்ன ஆனது என்பதுதான் கிளைமேக்ஸ். 

பெண்கள் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்த ஒரே ஆண் என்பது அட்டகாசமான கதைக்களம். அங்கே இருந்து கதை தொடங்குவது உற்சாகத்தைத் தருகிறது.

ஏகனுக்குப் பொருத்தமான வேடம். முடி திருத்துபவராக இருக்கும் தந்தையிடம் முரண்படும் அவர், “பிழைப்புக்காக அதைச் செய்தால் பரவாயில்லை. ஆனால், பிறப்புக்காக செய்யக்கூடாது..!” என்று வசனம் பேசும் இடத்தில் கைதட்ட வைக்கிறார். 

தொடக்கத்தில் அவரைப் பார்த்தால் இன்றைய இளைஞர்களின் ஜெராக்ஸ் ஆக வந்து அங்கங்கே நமது கோபத்தையும் கூட சம்பாதிக்கிறார். ஆனால் அடுத்த பருவத்தில் மிகுந்த மெச்சூரிட்டியுடன் அவர் நடந்து கொள்வது நடிப்பிலும் முதிர்ச்சியைக் காட்டுகிறது. 

“ஒரு ஆணை வேண்டாம் என்று ஒரு பெண் முடிவெடுத்து விட்டால் காலில் விழுந்தால் கூட அதிலிருந்து மாற மாட்டாள்..!” என்று தன் சொந்த அனுபவத்திலிருந்து அவர் சொல்வது இளைஞர்களைப் பெரிதும் கவரும்.

அவரது முதல் காதலியாக வரும் ஸ்ரீதேவி அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார். வசனம் பேசும்போது மட்டும் கொஞ்சம் தடுமாறுபவர், முடிவுகளை கவனமாக எடுப்பதில் தடுமாறாமல் இருப்பது பாராட்ட வைக்கிறது. 

இரண்டாவது காதலியாக வரும் ஃபெமினா ஜார்ஜ்க்கு நடிப்பில் நிறைய ஸ்கோப் இருக்கிறது. ஆரம்பத்தில் அப்பாவிப் பெண்ணாக வருபவர் ஏகன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சி அடைந்து ஏகனையே எதிர்க் கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் போது ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஏகனின் நண்பனாக வரும் அதிர்ச்சி அருண் காமெடியில் கவனிக்க வைக்கிறார். ஏகனைப் பற்றிய ஏடாகூட படத்தை கல்லூரி குரூப்பில் பதிந்து விட்டு அதை நீக்கத் தெரியாமல் ‘ராங்லி சென்ட்…’ என்று செய்தி அனுப்புவது வெடித்துச் சிரிக்க வைக்கிறது.

கல்லூரி முழுக்க வரும் களையான மாணவிகள் படம் முழுவதும் கலகலக்க வைக்கிறார்கள்.

இளமை ததும்பும் களம் கையில் கிடைத்து விட்டதால் கலர்ஃபுல்லாக கலக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி.

சிந்து குமாரின் இசை பற்றியும் புதிதாக சொல்லத் தேவையில்லை. பாடல்களில் காதலும் பின்னணியில் உணர்ச்சிகளும் தடும்ப படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார் அவர்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் யுவராஜ் சின்னச்சாமி சிறப்பான களத்தைக் கையில் எடுத்திருப்பதுடன், ‘முதல் காதலின் தாக்கங்களை இரண்டாவது காதலில் கை கழுவி விட வேண்டும்…’ என்கிற கருத்தை இளைஞர்களுக்குச் சொல்லியிருக்கிறார். 

முதல் பாதி அற்புதமாக கடந்து விடுகிறது. இரண்டாவது பாதியில் கொஞ்சம் நீளமாக செல்லும் திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. 

தலைப்புக்குப் பொருத்தமாக நச்சென்று சொல்ல வந்ததை சொல்லி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். 

ஹைக்கூ – ஹேண்டில் வித் கேர்..!

– வேணுஜி