October 22, 2026
  • October 22, 2026
Breaking News
October 22, 2026

சட்டமும் நீதியும் 2 வெப் தொடர் விமர்சனம்

By 0 12 Views

பெரிய திரையிலம் சரி சின்ன திரையிலும் சரி கோர்ட் டிராமாக்கள் சரியான முறையில் சொல்லப்பட்டால் மிகுந்த சுவாரசியத்தை தரும்.

அதிலும் Zee 5 இரண்டாவது முறையாக இறங்கி அடித்திருக்கும் இந்த இணைய தொடர் முதல் தொடரின் மீதான நம்பிக்கையை முற்றிலும் காப்பாற்றி இருக்கிறது.

சட்டமும் நீதியும் முதல் சீசன் எப்படி பரபரப்பாக இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் உருவாகியிருக்கிறது இந்த இரண்டாவது சீசன் தொடரும். சமுதாயத்தால் வஞ்சிக்கப்படும் சாமானியர்களுக்காக களம் இறங்கும் வழக்கறிஞர் பாத்திரத்தில் சரவணன் இதிலும் வருவது சிறப்பு.

ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கிறார். முன்விரோதம் காரணமாக காவல்துறையில் இருக்கும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட நால்வர் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. 

அவர்களுக்கு எப்படியும் தண்டனை வாங்கித் தந்து விட வேண்டும் என்கிற நோக்கில் வழக்காடுகிறார் இறந்து போன பிரேமின் மனைவியான வழக்கறிஞர் வரலட்சுமி சரத்குமார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் பிரேம் தற்கொலைதான் செய்து கொண்டார் என்பதற்கான சாட்சியங்கள் சிலவும் இருக்க, அதை வைத்து குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்று கடுமையாக தன் வாதத்தை முன் வைக்கிறார் வரலட்சுமி. 

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் குடும்பமும் வகை தொகை இல்லாமல் பிரச்சனைக்கு உள்ளாகிறது. தங்கள் குடும்பத் தலைவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று நம்பும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாக வாதாட எந்த வழக்கறிஞரும் முன் வரவில்லை காரணம் வரலட்சுமி சரத்குமாரின் செல்வாக்கு.

இந்த நிலையில் நால்வரின் குடும்பத்தினரும் சரவணனை வந்து சந்திக்கிறார்கள். அவர்களுக்காக வாதாட முன் வரும் சரவணன் பற்றி அவர் பெயர் வாங்காத சாதாரண வக்கீல் என்பதால் ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆனால் தனது வாதத் திறமைக்கு டஃப் கொடுத்து சரவணன் வாதாட வாதாட, ஒரு கட்டத்தில் திக்கு முக்காடிப் போகும் வரலட்சுமி சரவணன் பற்றி குறைவாக எடை போட்டது நினைத்து வருந்துகிறார். ஆனாலும் தன்னுடைய வாதத்திறமை மூலம் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் உறுதியாக இருக்கிறார். 

இதில் யார் வென்றார்கள் என்று சொல்வது தன் இந்த இரண்டாவது சீசன்.

அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருப்பது சரவணனுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அவரது இயல்பான நடவடிக்கைகளே அவர் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்ய மாட்டார் என்கிற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது. 

ஒரு கட்டத்தில் வரலட்சுமியின் கை ஓங்கி அடுத்த ஓரிரு தினங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை கிடைத்துவிடும் என்று நம்பும் நிலையிலும் அவர்களின் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆறுதலைத் தரும் அவரது மனிதாபிமானமும் பாராட்ட வைக்கிறது. 

கடைசியில் தான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பிழைக்காக வருந்தும்பொழுது மாமனிதனாகத் தெரிகிறார்.

பிரேமின் மனைவியாக இருப்பதால் ஒரு கட்டத்தில் வரலட்சுமியையே நீதிமன்ற கூண்டில் சரவணன் ஏற்றுவது எதிர்பாராத திருப்பம்.  

எவ்வளவு பெரிய வழக்கறிஞராக இருந்தாலும் நீதிமன்ற தண்டனை என்பது சந்தர்ப்பங்களின் அடிப்படையிலும் சாட்சிகளின் அடிப்படையிலும்தான் என்பதை புரிந்து வைத்திருக்கும் வரலட்சுமி தனக்கு எதிராக வழக்கு முடிக்கப்படும் போது வருத்தத்துடன் அந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் நடிப்பு பாராட்ட வைக்கிறது. 

வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார் நல்லவரா கெட்டவரா என்றே தெரியாத நிலையில் கடைசியில் சில வில்லத்தனங்கள் செய்து கெட்டவராகிறார்.

குற்றவாளிகளாக நம்பப்படும் காவலர்கள்  கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்ட நால்வரின் நடிப்பும் பாராட்ட வைக்கிறது. அதிலும் கவிதா பாரதிக்கும் பிரேமுக்கும் வாய் சண்டை முற்றி கைச்சண்டை ஏற்படுவது அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.

சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, சரவணனின் நல்லுள்ளத்திற்கு துணை நிற்பது நன்று.

எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு நம் கண் முன் நடக்கும் கதையை திரை மொழிக்கான எந்தப் பாசாங்கும் இன்றி அத்தனை இயல்பாக வழங்கி இருக்கிறது.

இசையை விட நிசப்தத்தையே பெரிதும் நம்பி இருக்கும் விபின் பாஸ்கரின் பின்னணி இசை காட்சிகளை நாம் உண்மை என்று நம்ப வழி வகுத்திருக்கிறது.

ஆதிஸ்வரன்.ஆரின் படத்தொகுப்புக்கும் இந்த தொடரின் வெற்றியில் பங்கு உண்டு.

தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், வழக்கமான ஒரு லைனை எடுத்துக் கொண்டிருந்தாலும் பிரதீப் மரியானுடன் இணைந்து எழுதி இருக்கும் திரைக்கதை இந்தத் தொடருக்கு மாபெரும் பலத்தை தந்திருக்கிறது.

டிரீட்மெண்ட்டில் அடுத்து என்ன என்று நம் ஆர்வத்தை தூண்டும் அளவில் காட்சிகளை அடுக்கி இருப்பதில் எல்லா எபிசோடுகளும் தளர்வின்றி பயணிக்கின்றன.

அதிலும் அந்தக் கடைசி எபிசோடில் இயக்குனர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்க முடியாது. 

சட்டமும் நீதியும் 2 – தவிர்க்கக் கூடாத தொடர்..!

– வேணுஜி