பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஸ்டார் வேல்யூவே முக்கிய விற்பனைக்கான காரணமாகி விடுகிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை வித்தியாசமான கான்செப்ட்டும், அதை எந்த ஜேனரில் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதும்தான்.
அந்த வகையில் இயக்குனர் ஆர். ராகவ் மிர்தாத் பட்ஜெட்டுக்கு தக்கவாறு ஒரு அற்புதமான கான்செப்டை பிடித்திருப்பதோடு, அதனை குடும்பத்தினர் எல்லோரும் ரசிக்கும் அளவில் லவ், ஹாரர் காமெடி ஜேனரில் கொடுத்திருக்கிறார்.
கதை இதுதான்.
கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் டிராவிட் செல்வம், ஆர்.ஜே.தீபக், அஞ்சலி நாயர் மூவரும் இடை நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்குத் தெரியாமல் இருக்க ஒரு அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தில் தங்குகிறார்கள். அங்கிருந்து வெளியேற வழி இல்லாமல் ஒரு ட்ரோனை பறக்க விட்டு வெளியில் என்ன நடக்கிறது என்று கவனிக்கப் போய் அழகி சித்தி இத்னானியை பார்க்கிறார்கள். அவரது அழகில் மயங்கி டிராவிட்செல்வம் அவரைக் காதலிக்க ஆரம்பிக்க, அது சித்தியின் சூனியக்கார பாட்டிக்கு தெரிந்து இவர்கள் அனைவரும் சிறைப்படுகின்றனர்.
இந்நிலையில் காணாமல் போன இவர்களைத் தேடி வருபவர்களில் காவல் அதிகாரி சினிமாவாலா சதீஷும் ஒருவராக இருக்க, காலகாலத்தில் கல்யாணம் ஆகாத அவரும் சித்தியின் அழகில் மயங்கி தானும் ஒரு பக்கம் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்தக் காதல்கள் என்ன ஆயின, சிறைப் பட்டவர்கள் மீண்டார்களா என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் படமாக மட்டும் அல்லாமல் நிற அரசியல் குறித்து ஒரு விழிப்புணர்வுப் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகர்கள் என்று மூன்று பேரை சொல்லலாம் என்றாலும் கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானிதான் படத்தில் பிரதானமான வேடம் ஏற்று கதையைத் தன் பின்னால் இழுத்துச் செல்கிறார்.
அவரது அழகைக் கண்டால் யார்தான் காதலிக்க மாட்டார்கள்..? ஆனால் அந்த அழகுக்கு பின்னால் அப்படி ஒரு அதிர்ச்சி இருக்கும் என்பதை யார்தான் எதிர்பார்க்க முடியும்?
இன்னொரு நாயகியாக வரும் அஞ்சலி நாயர் நடிப்பு குறித்து நம் எல்லோருக்குமே தெரியும். இந்தப் படத்திலும் நிற அரசியல் பார்ப்பவர்களை வெளுத்து வாங்குகிறார் அஞ்சலி நாயர்.
பெரிய படங்களிலேயே ஒப்புக்கு கதாநாயகிகள் வந்து போக இந்த படத்தில் நாயகியராகி இருக்கும் சித்தி, அஞ்சலி இருவருமே கதையம்சத்துடன் நடிப்பிலும் பொருந்திப் போய் கவனம் பதிக்கிறார்கள்.
நாயகர்களில் முதன்மையாக வரும் டிராவிட் செல்வம், நகைச்சுவை கதாபாத்திரத்தை எளிதாக ஏற்று செய்திருக்கிறார். ஆர் ஜே தீபக்கும் வரும் காட்சிகள் எல்லாம் நம்மை குபீர் சிரிப்பில் ஆழ்த்துகிறார்.
சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினியைப் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அந்த பாத்திரத்தை அவரை விட்டால் இன்றைய தமிழ் சினிமாவில் இவ்வளவு சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது.
காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், காதல்வாலாவாக மாறி கச்சிதமாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
இவர்களுடன் குரேஷி மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை குறை இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
கதையின் பலத்தை தனது காமிராவினால் காட்சிகளாக்கி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். ஒரே லொகேஷன் என்றாலும் தானும் சலிப்படையாமல் நம்மையும் சலிப்படைய வைக்காமல் பார்த்துக் கொள்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆரின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.
இதுபோன்ற படத்துக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள் படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் உள்ளிட்டோர்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஆர்.ராகவ் மிர்தாத், பாட்டி சொன்ன கதைகளிலிருந்து பறக்கும் தட்டு வரை பார்வையாளர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவை எல்லாவற்றையும் வைத்து ஒரு கதையை நகைச்சுவையாக சொல்லி இருப்பதுடன், காதலில் கவனிக்க தகுந்த ஒரு முக்கியமான அரசியலையும் தொட்டு படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.
கதையை தெளிவுபட சொல்வதற்காக முதல் பாதியில் திரைக்கதை மிதவேகம் காட்டினாலும் பின் பாதியில் அசுரவேகம் எடுத்து படம் முடியும்போது நம் ரசனைக்கு ஒரு திருப்தியைத் தந்து விடுகிறது.
அந்த இடைவேளை திருப்புமுனை நாம் யாரும் சற்றும் எதிர்பாராது.
அதேபோல் சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகும்போது கெத்தாக அவருடன் பந்தயத்தில் இணைந்த தில்லையும் பாராட்டலாம்.
அந்த ‘தில்லுக்கு துட்டா’க அமைந்திருக்கிறது இந்த ட்ரோன்ஸ்..!
– வேணுஜி