November 29, 2026
  • November 29, 2026
Breaking News

ஆக்டோபஸ் (Zee5 Original) இணையத் தொடர் விமர்சனம்

By on November 27, 2026 0 19 Views

சமீபகலமாக திரைப்படங்களிலும் சரி இணைய தொடர்களிலும் சரி ‘கோர்ட் ரூம் டிராமா’க்கள் நிறைய வலம் வரத் தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் கிரைம் திரில்லர்தான் இந்தத் தொடர்.

அன்பு நகர் என்கிற குடியிருப்புதான் கதைக்களமாக அமைகிறது. அங்கு வசிக்கும் குடும்பங்கள் ஒரே குடும்பம் போல பாசத்துடன் பழகி வருகிறார்கள்.

இந்நிலையில் நாயகி அர்ச்சனா ரவிச்சந்திரன் குடியிருக்கும் எதிர் வீட்டில் புதிதாக திருமணமான ஜோடியாக அஸ்வின்குமார் – சித்து குமரேசன் குடி வருகின்றனர். ஆரம்பத்தில் அன்பாக இருப்பது போல் அவர்கள் தோற்றம் அளித்தாலும் ஏதோ பிரச்சனை அவர்களுக்குள் இருப்பது தெரிகிறது. குறிப்பாக அஸ்வின் குமார் சித்துவை கொடுமைப்படுத்துவதாக அர்ச்சனா உணர்கிறார். 

அதைத்தொடர்ந்து அஸ்வின் குமாருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கும் அர்ச்சனா அதை சித்துவிடம் சொல்லவும் செய்கிறார்.

இதற்குப் பின் ஒரு நாள் இரவில் அவர்கள் வீட்டில் சித்து அலறுவதை அந்த குடியிருப்புவாசிகள் கேட்க நேர்கிறது. அதிலிருந்து அவர் அந்த வீட்டில் இருந்த சித்து மாயமாகி விடுகிறார். 

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளும் நகர்வாசிகள் போலீசுக்கு போகிறார்கள். விசாரணையில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்று மறுக்கிறார் அஸ்வின் குமார். சந்தர்ப்பங்களும் அவருக்கு சாதகமாகவே இருக்கின்றன.

போலீசை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று புரிந்து கொள்ளும் அந்த நகர்வாசிகள் அவர்களே அதன் பின்னணியை துப்பறியத் தொடங்குகிறார்கள். அதில் கிடைக்கும் சாட்சியம் மூலம் நீதித்துறையை நாட, அதன் முடிவில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று வெளியே வருகிறது அது என்ன என்பதுதான் இந்தத் தொடரின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் குமார், அந்த பாத்திரத்துக்கு எனறே வடிவமைக்கப்பட்டவர் போல் இருக்கிறார். தன் தோற்றத்தையும் அந்த பாத்திரத்தையும் சரியாக பொருத்தி அற்புதமாக நடித்திருக்கிறார். அவரது செயல்களை வைத்து அவர் நல்லவராக கெட்டவரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவில் கச்சிதமாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன் பாத்திரமும் முக்கியமான ஒன்று. சொந்த வாழ்க்கை பாதிப்பின் காரணமாக பெண்களுக்கு எதிராக எங்கே பிரச்சனை நடந்தாலும் அதற்கு உதவ வேண்டும் என்ற துடிப்புடன் நடித்திருக்கிறார். 

பாத்திரம் அருமையாக அமைந்தால் எந்த கேரக்டரில மூலமும் ரசிகர்களை கவர்ந்து விட முடியும் என்று தன் திறமையை காட்டக்கூடிய வினோத் கிஷன் இதிலும் தன் நடிப்பின் மூலம் நெகிழ வைக்கிறார். 

அவரது காதலியாக நடித்திருக்கும் கலைவாணி பாஸ்கரும் பாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு.

நாம் கண்ணில் பார்க்கக்கூடிய இயல்பான நிகழ்வுகளாகவே காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கண்ணா.ஆர்.

இந்த துப்பறியும் தொடரில் மர்மம் நிறைந்த மனிதர்களின் பின்னணியையும் தன் பின்னணி இசை மூலம் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி.

ஜெயசந்திர ஹாஸ்மியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர் பிற கிரைம் திரில்லர் தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு பிரச்சனையை யாரோ ஒருவர் துப்பறிவதாகதான் வழக்கமான இது போன்ற கதைகள் அமையும். ஆனால் ஒரு குடியிருப்பின் அங்கத்தினர் அவர்களே அந்த வேலையை ஏற்றுச் செய்வது இதில் புதுமையாகக் கையாளப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட எபிசோடுகளின் மெதுவான நகர்த்தலை தவிர்த்து இருக்கலாம். அங்கங்கே தெரியும் சிறிய சுணக்கத்தையும் சரிப் படுத்தி இருக்கலாம்.

கோர்ட் ரூம் தவிர்த்து இந்த வகையான க்ரைம் திரில்லர் தொடர்களில் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கியிருக்கும் இந்த தொடர் ஒரு புது மாதிரியான முயற்சி.

ஆக்டோபஸ் – சுற்றி வளைத்த நீதி..!

– வேணுஜி