மருத்துவ உலகின் குற்றப் பின்னணியில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் கதை. அதை ஒரே கதையாக சொல்லாமல் பல நிலைகளில் வெவ்வேறு கதைகளாகச் சொல்லி கடைசியில் அதை ஓரிடத்தில் கொண்டு வந்து முடித்து ரசிக்கும் அளவில் தந்திருக்கிறார் இயக்குனர் பலராம் கிருஷ்ணா.
படத்தொடக்கத்தில் மூன்று கிரைம் சம்பவங்கள் நடைபெறுகிறது. கட்டப்படும் நிலையில் இருக்கும் கட்டிடத்தின் தூணில் ஆணின் உயிரற்ற சதம் கிடைக்கிறது. இன்னொருபக்கம் தன்யா ஹோப் யாராலோ கடத்தப்படுகிறார். அடுத்து நாயகியும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான ப்ரீத்தி அஸ்ராணி காணாமல் போகிறார்.
இது தொடர்பான சந்தேகங்கள் நாயகன் முகேன் ராவ் மீது விழ, அவரோ காணாமல் போன தான் காதலி ப்ரீத்தி அசாமி கண்டுபிடிக்க கிளம்புகிறார்.
மேற்படி சம்பவங்களின் பின்னணியில் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் கிடைக்க, இதற்கெல்லாம் காரணம் யார், எதற்காக இதெல்லாம் நடைபெற்றது..? என்ற உண்மையை வெளிக்கொண்டு வருவதுதான் இந்தப் படத்தின் கதை.
நாயகன் முகேன் ராவ், இதில் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். காணாமல் போன ப்ரீத்தி அஸ்ராணியை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்கிற வேகத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் துணிச்சலாக எதிர்கொள்ளும் பாத்திரத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். காதலும் வீரமும் அவருக்கு எளிதாக வருகிறது.
வழக்கமாக நாயகர்கள்தான் தவறுகளை தட்டி கேட்பார்கள். ஆனால் இதில் நாயகியாக வரும் ப்ரீத்தி அஸ்ராணி, அப்படி ஒரு தைரியமான பாத்திரத்தில் வருகிறார். ப்ரீத்தி நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தின் பிளஸ் பாயிண்ட்களில் அவரது துருக்குத்தனமும் ஒன்று.
இன்னொரு நாயகியான தன்யா ஹோப்புக்கும் முக்கியத்துவம் கொண்ட காதாபாத்திரம்தான். அவரது திரை அனுபவம் அதைப் புரிந்து சரியான நடிப்பத்திறமையை வெளிக் கொணர்ந்திருக்கிறது.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் வில்லனாகியிருக்கிறார் நிதின் சத்யா. அவரது கழுகுக் கண்கள் அதற்கு பெருமளவு துணை புரிந்திருக்கிறது.
இவர்களுடன் சுரேகா வாணி, கஜராஜ், அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட நடிக நடிகையர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அழகான ப்ரீத்தி அசரானியும் தன்யா ஹோப்பம் ஒளிப்பதிவாளர் சான்டோனியோ டெர்சியோவின் கேமராவில் மேலும் அழகானவர்களாக தெரிகிறார்கள். அத்துடன் கிரைம் திரில்லர் படத்துக்கான உணர்வையும் ஒளிப்பதிவு கச்சிதமாகத் தந்திருக்கிறது.
இடையில் சற்று தளர்ந்திருந்த டி.இமான் இந்தப் படத்தில் மீண்டும் கவனிக்க வைக்கிறார். பாடல்களும் பின்னணி இசை மிரட்டலாக வந்திருக்கின்றது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் பலராம் கிருஷ்ணா, ஒரு க்ரைம் ட்ரில்லரை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கொடுக்க முயற்சித்து இருக்கிறார். தொய்வு இல்லாத வகையில் திரைக்கதை திறம்பட கையாண்டிரந்தாலும் காட்சிகளுக்கான சுவாரசியத்தைத் தருவதில் சற்றே சுணக்கம் காட்டி இருக்கிறார்.
விவேகம் குறைவாக இருந்தாலும் வேகத்தில் வென்று விடுகிறது படம்.
நிறம் – திறம்..!
– வேணுஜி