November 25, 2026
  • November 25, 2026
Breaking News
November 25, 2026

ஜெடூசி திரைப்பட விமர்சனம்

By 0 20 Views

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் மட்டுமல்ல… அதற்குக் காரணமானவர்களின் குரல்வளையை நெறித்திருக்கும் படம்.

போலீசுக்குத் தலைவலியாக சில தொடர் கொலைகள் நடைபெறுகின்றன. அவை எல்லாமே மலையகப் பெண்கள் தலைமுடியும் ஜெடூசி என்ற கொண்டை ஊசியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றன.

அதை தங்களுக்கு ஈடாகத் துப்பறியும் மீடியாவை சேர்ந்த இரண்டாவது நாயகி சினி யுதன் உதவியுடன் போலீஸ் கொலை நடந்த இடங்களில் கிடைத்த ரத்த மாதிரியை சேகரித்து நாயகன் ஶ்ரீதரைப் பொறி வைத்துக் கைது செய்கிறது.

கோர்ட்டில்தான் உண்மையைச் சொல்வேன் என்ற ஸ்ரீதர் அங்கே என்ன சொல்கிறார் என்பது பிளாஷ்பேக்கில் ஜவ்வாது மலையடிவாரத்தில் விரிகிறது. 

அதன்படி ஶ்ரீதரின் மாமன் மகள் ஸ்வேதாவுக்கு அவள் படிக்கச் சென்ற கல்லூரியில் அமைச்சர் ஏ.வெங்கடேஷினால் ஏற்பட்ட கொடுமை வெளிவருகிறது. சக்திமிக்க மனிதரான ஏ.வெங்கடேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிந்ததா, அதுவரை ஶ்ரீதர் செய்த கொலைகள் அவருக்கு என்ன விளைவுகளைத் தந்தன என்பதுதான் மீதிக் கதை.

நாயகன் ஶ்ரீதர் பழங்குடி இளைஞர் வேடத்துக்கும், அதே நேரத்தில் அநீதி கண்டு வெகுண்டெழும் வேடத்திலும் இயல்பாகப் பொருந்தி இருக்கிறார். இறுதியில் நீதிமன்றத்தில் நீளமான வசனம் பேசுவதில் தடுமாறாமல் இருப்பது சிறப்பு.

கட்டழகான நாயகி ஸ்வேதாவுக்கும் பொருத்தமான.வேடம். பழங்குடி உடைக்கும், நாகரிக உடைக்கும் பொருந்தி வருபவர் அதிகம் நடிக்காமல் இருப்பதே அழகாக இருக்கிறது.

வில்லன் வேடத்துக்கு ஏ.வெங்கடேஷ் பல படங்களில் பொருந்தி வருவதைப் போலவே இதிலும் பக்காவாக இருக்கிறது. ஆனால், அவர் முன்னாள் மாணவியாக இருந்தபோது கைவைத்த இந்நாள் நீதிபதியிடம் கோர்ட் வாசலில் வைத்து பேசுவதெல்லாம் ரொம்ப.ஓவர்.

இவர்களுடன் சினி யுதன் , பிளாக் பாண்டி,  பவா செல்லதுரை, ஜெயந்திமாலா, அருவி மதன், அசோக் பாண்டியன் போன்றோர் தங்கள் வேடங்களில் உலா வருகிறார்கள். 

ஒளிப்பதிவாளர் நாகஅர்ஜுன் V.S காட்டிலும், நாட்டிலும் அலைந்து திரிந்து பயணப்பட்டிருக்கும் உழைப்பு தெரிகிறது.

விக்னேஸ்வரன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை இந்த படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது ஆனால் அதில் அவர் மேலும் முன்னேற வேண்டும்.

படத்தைத் தயாரித்து இருப்பதுடன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் நட்ராஜ் ஏகாம்பரம் சமுதாயத்தில் பெண்கள் மீதான குற்றங்களை முன்வைத்துப் படத்தை இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் ஒரு அமைச்சர் என்றால் அவர் சர்வ அதிகாரம் படைத்தவர் என்பது போல காட்டி இரப்பதெல்லாம் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சாத்தியமே இல்லை. அதேபோல் நீதிபதியின் மாண்பு பற்றி சிந்தித்து திரைக்கதை எழுத வேண்டும். ஸ்வேதாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு அவருடன் படிக்கும் மாணவிகளும் உடந்தையாக இருந்தார்கள் என்பது ஏற்புடையது அல்ல. 

ஆனாலும் சமுதாய நோக்கோடு வெகுஜன ரசனையில் படத்தை இயக்கி தயாரித்துமிருக்கும் அவருக்கு பாராட்டுக்கள்.

ஜெடூசி – சிறிய ஆனால் சீரிய முயற்சி..!

– வேணுஜி