October 13, 2026
  • October 13, 2026
Breaking News
October 13, 2026

தி சோஷியல் ரெக்கனிங் (The Social Reckoning) திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

சோசியல் மீடியாவான ஃபேஸ்புக் (Facebook) பற்றி தெரியாதவர்கள் உலகில் மிகக் குறைவு எனலாம்.

கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்க கூடிய அத்தனை பேருக்கும் இது பற்றிய புரிதலும் அதன் மீதான மயக்கமும் இருக்கும்.

ஆனால், உலகையே திரும்பிப் பார்க்கும் முகமாக இந்த முகப்புத்தகத்தின் இன்னொரு முகத்தை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த படத்தின் நோக்கமாக இருக்கிறது.

ஏற்கனவே ஃபேஸ்புக்கின் தோற்றத்தைப் பற்றிய கதையைச் சொன்ன ‘தி சோஷியல் நெட்வொர்க்கிங்’ (The Social Networking) திரைப்படத்தின் எழுத்தாளரான ஆரோன் சோர்கின் (Aaron Sorkin) இந்தப் படத்தின் கதாசிரியரும், இயக்குனரும் ஆவார்.

ஜெர்மி ஸ்ட்ராங், ஜெர்மி ஆலன் வைட் மற்றும் மைக்கி மேடிசன் ஆகியோர் நடிப்பில் இந்த ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று வெளியாகியுள்ளது.

‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Wall Street Journal) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 2021-ல் வெளியான ‘தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்’ (The Facebook Files) எனும் அதிர்ச்சியூட்டும் புலனாய்வுத் தொடரை அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக் குறித்த ஆரோன் சோர்கின் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

மார்க் ஜுக்கர்பெர்கின் ஃபேஸ்புக் பற்றிய மிக ரகசியமான விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தியாளர் ஜெஃப் ஹார்விட்ஸ் (ஜெர்மி ஆலன் வைட்)-ன் உதவியை நாடும் இளம் ஃபேஸ்புக் பொறியாளர் பிரான்சிஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்) என்பவரின் உண்மைக்கதையை இந்த ‘தி சோஷியல் ரெக்கனிங்’ விவரிக்கிறது.

இப்படத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் பாத்திரத்தில் ஜெர்மி ஸ்ட்ராங் நடித்துள்ளார்.

ஜெர்மி ஆலன் வைட் மற்றும் மைக்கி மேடிசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் பில்லி மேக்னஸ்ஸன், வுன்மி மொசாகு மற்றும் பில் பர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியுள்ள ஆரோன் சோர்கின் இதன் இயல்பு தன்மையை உறுதிப்படுத்த வழக்கமான படமாக்க முறையில் இருந்து மாறுபட்டு இயல்பான கதை ஓட்டத்துடன் சொல்ல நினைத்திருக்கிறார். அதனால் படம் முழுவதும் எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

படம் பார்க்கும் அனுபவத்தை விட ஒரு புத்தகம் படிக்கும் அனுபவத்தையே இந்த படம் தருகிறது.

இதனை சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (Sony Pictures Releasing International) விநியோகம் செய்திருக்கிறது.

இந்தியாவில் திரையரங்குகளில் மட்டுமே இப்படத்தை காண முடியும் என்பதால் இதனை ஒரு முறை திரையரங்கில் பார்த்து விடுவது நல்லது.

– வேணுஜி