முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே இந்தப்படம் ஆரம்பிக்கிறது.
முதல் பாகத்தில் சொந்த மகனையே கொன்ற ரஜினி தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மற்றும் பேரனுடன் வேறு இடத்துக்கு குடி போகிறார். ஆனால், அங்கும் அவரது அமைதிக்கு சிலரால் பங்கம் ஏற்படுகிறது. அதே சமயம் முதல் பகுதியில் விநாயகனைக் கொன்றதற்கு பழி வாங்க அந்த சதிகாரக் கும்பல் இப்போது சுராஜ் வெஞ்சரமூடுவின் தலைமையில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது இரண்டும் இணையும் புள்ளிதான் இந்த இரண்டாம் பகுதிக்கான கதைக்களம்.
மெதுவாக ஆரம்பித்து வேகம் பிடிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் போல வேகமெடுக்கிறது முன் பாதித் திரைக்கதை.
ரஜினிக்கென்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அறிமுகம் கொடுத்திருந்தாலும் அதற்குப்பின் அவர் விஸ்வரூபம் எடுப்பதை அற்புதமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
பக்ஸ் பகவதி பெருமாளுடன் சாதாரண பிரச்சினையில் ஆரம்பித்து பழக்கடை நமோ நாராயணனுடன் தொடரும் சிக்கல் ரஜினியை சுராஜிடம் கொண்டுசென்று சேர்க்கும் எபிசோட் வரை சிரித்து ரசித்துக் கைதட்ட வைக்கிறது ட்ரீட்மென்ட்.
சமீப காலப் படங்களில் சோபிக்காத நமோ நாராயணன் மட்டுமல்ல, யோகிபாபுவும் இந்தப்படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியானவை.
சுராஜ் வெஞ்சரமூடு படங்களில் இதுதான் அவரை அதிகம் ரசிக்க வைத்த தமிழ்ப் படமாக இருக்கும். அவரும், நமோ நாராயணனும் சந்திக்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். அதிலும் அந்த ‘செஸ் விளையாட்டு’ வசனங்கள் தியேட்டரை அதிர வைப்பவை.
இப்படி முதல் பாதி முழுவதையும் சிரித்து சிரித்துக் கடந்தால் இரண்டாம் பாதியில் ‘சீரியஸ் மோடு’க்குப் போகிறது திரைக்கதை.
அதில் எஸ்.ஜே.சூர்யா, அவரது அக்கா வித்யா பாலன், அப்பா மிதுன் சக்ரவர்த்தி கொண்ட கொடூர குடும்பத்தின் விருந்தாளியாக அவமானப்படும் ரஜினி அடுத்து அவர்களைப் பழிதீர்க்கும் காட்சிகள் சுவாரசியமானவை.
இவர்கள் போதாதென்று முதல் பகுதியில் வந்த பிற மாநில சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராப் கதைக்கு உள்ளே வருவதும், இவர்களும் போதாதென்று ரித்திக் ரோஷனின் அதிரடி ஆக்சன் என்ட்ரியும் அசத்தல் ரகம்.
இத்தனை பேரையும் ஒருங்கிணைக்க முடிந்தது ரஜினி என்கிற மாபெரும் சக்தியால் மட்டுமே சாத்தியம்..! அதற்கான சக்தியைக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இன்னொரு காரணம்..!
கிளைமாக்ஸ் முந்தைய காட்சியில் மிரட்டி ரஜினியைப் பணிய வைக்க முடியாதென்று நினைத்த எஸ். ஜே.சூர்யா அவரை செண்டிமெண்டில் லாக் செய்வது நல்ல உத்தி.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளியமைப்பிலேயே ரஜினியின் ஆக்ரோஷ உணர்வுகளை அற்புதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். கேரள, கோவா எபிசோடுகள் வண்ணமயமானவை.
அனிருத் வழக்கம்போல் அதிரடி கிளப்பி இருக்கிறார். முதல்பகுதியில் இசைத்த அந்த ஜெயிலர் தீம் மியூசிக் இதில் அவருக்கு அற்புதமாகக் கைகொடுத்திருக்கிறது.
பூர்ணா மற்றும் நோரா பதேஹி போட்டிருக்கும் ஆட்டங்கள் ஆசம்..!
படத்தை எழுதி இயக்கியிருக்கும் நெல்சன் நகைச்சுவை ட்ரீட்மென்ட் மற்றும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலங்கள்.
ரஜினியைப் பார்த்து யோகி பாபு, “இவர் பண்ற வேலைகள் எல்லாம் இவரை ஒண்ணும் பண்ணாது. சுற்றி இருக்கிறவங்கதான் படாதபாடு படணும்..!” என்பதும் கடைசியில் ரஜினியே தன்னைப்பற்றி, “என்னை 50 வருஷமா கீழே தள்ள எவ்வளவோ பேர் முயற்சி பண்ணினார்கள். ஆனால், முடியலை..!” என்பதும் அல்டிமேட்..!
லாஜிக்குகளை புறந்தள்ளலாம். ரஜினியின் மேஜிக்குகளை ரசிக்கலாம்..!
ஜெயிலர் 2 – டைகர் அடுத்த வேட்டைக்கும் ரெடி ஆகலாம்..!
– வேணுஜி