விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்த்து எவ்வளவு நாளாகிறதென்ற எதிர்பார்ப்புகளுக்கு வடிகாலாக அமைந்த படம். அவருக்கென்றே எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.
சிறுவயதில் நாம் படித்திருக்கும் அரக்கன் கோலியாத்தை எதிர்கொண்டு வென்ற சிறுவன் டேவிட்டின் கதையை ஒற்றிய லைன். இங்கே அடங்க மறுக்கிற தாதாவாக இருக்கும் விஜய் சேதுபதியை எளிய சிறுவன் சாய் பிருத்விராஜ் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.
தன் பெயரை கேட்டாலே அலரும் ஏரியாவை கலங்கடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை ஒரு கட்டத்தில் பார்த்து பயம் கொள்ளும் சிறுவன் சாய் பிருத்விராஜ் எதிர்பாராமல் அவர் பள்ளியின் கழிவறைக்குள் போயிருந்த சமயம் வெளியே தாழ்ப்பாள் போட்டுப் பூட்டி விடுகிறான்.
பள்ளி விடுமுறையானதால் பல நாட்கள் பள்ளியைத் திறக்காத நிலையில் உள்ளேயே சிக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதிக்கு தினமும் சாப்பிட வெறும் பொறையை உள்ளே அனுப்பி அவர் வெறுப்பை சேகரித்துக் கொள்கிறான்.
தன்னைப் பூட்டியது யார் என்று தெரியாமல் வெறி ஏறிக்கிடக்கும் விஜய் சேதுபதியை ஒருநாள் திறந்து விட நினைத்து பார்க்கும் போது அவர் இறந்து போனதாக தோன்ற, பயந்துபோன சாய் அவர் அங்கு இருப்பதை வெளியில் சொல்ல, பாம்பு கடித்து மயங்கி கிடந்த அவர் சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப் படுகிறார்.
அவரை அடைத்துவைத்த சிறுவனே இப்போது அவரைக் காப்பாற்றிய கடவுளாகி அவர் மனதில் இடம் பிடிக்கிறான். ஆனால், விஜய் சேதுபதியும், அவரது கையாள்களும் கொலை வெறியுடன் அவரைப் பூட்டி வைத்தவர்களைத் தேடிக் கொண்டிருக்க அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
தான் ஏற்கப்போகும் கேரக்டரை அப்படியே மனதில் ஏற்றி வெளிக்காட்டி விடும் விஜய் சேதுபதி இதிலும் தன் அர்ப்பணிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். சென்னைத் தமிழில் பேசிக்கொண்டு, தெனாவட்டாகத் திரிந்தாலும் மரணத்தை தொட்டு வந்த மாற்றத்திற்கு பின் மனைவி மற்றும் மகள் மீது அன்பைக் காட்டுவதில் ரசிக்க வைக்கிறார்.
அவருக்கு ஈடான நடிப்பை சாய் பிரித்விராஜிடம் பார்க்கிறோம். அப்படி வேலை வாங்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரனுக்கும் பாராட்டுகளை அள்ளித் தெளிக்க வேண்டும்.
கிளைமாக்ஸ் முன்பு விஜய் சேதுபதியிடம் அமர்ந்து அவன் பேசும் இடம் இளகிய மனதுடையோர் கண்களை குளமாக்கிவிடும். இந்த இயல்பான நடிப்புக்காகவே அவனுக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
விஜய் சேதுபதியின் மனைவியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பு பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. பாம்பு கடி சம்பவத்துக்கு பிறகு அவரிடம் தெரியும் நல்ல மாற்றத்தை ரசிப்பவர் விஜய் சேதுபதியின் மாற்றத்தை குறை சொல்லும் கையாளிடம் பொங்குவது அபாரம்.
சாய் பிரித்வி ராஜின் பெற்றோராக வரும் ஹரிகிருஷ்ணன் – சாண்டி பாலச்சந்தர் ஜோடியும் ரசிக்க வைக்கிறார்கள்.
இவர்களுடன் சகஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களை இயல்பாக நடித்து கவனம் பதிக்கிறார்கள்.
செல்வகுமார் எஸ்.கே -வின் கண்கவர் ஒளிப்பதிவு 80 களின் காலகட்டத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அதில் கலை இயக்குனர் கண்ணன் எஸ் – இன் திறமையும் அடக்கம்.
அந்தக் காலகட்டத்துக்கான இசையை மிகச் சரியாக இசையமைப்பாளர் சாய் அபயங்கரால் கொடுக்க முடியவில்லை என்றாலும் இப்போதுள்ள ரசனைக்கான இசையை தந்து தன் இருப்பை உறுதி செய்கிறார்.
கதையை எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி தரணிதரன், ரசித்து ரசித்து ஒவ்வொரு காட்சியையும் எழுதி இருப்பது புரிகிறது. மேற்பார்வைக்கு கரடு முரடான கதை போல் தெரிந்தாலும் அதன் உள்ளூர இருக்கும் மனித மனங்களின் பதிவு நம் ரசனைக்கு தோதாக அமைகிறது.
ஒரு முரட்டுத்தனமான கிளைமாக்ஸ் உடன் முடியும் படம் போல் தோன்றினாலும், கண்டிப்பாக இத்தனை எளிதாகவும் நகைச்சுவையாகவும் இந்தப் படம் முடியும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
பத்தா – இந்த வார படங்களில் வலம் வரும் கெத்தா..!
– வேணுஜி