September 27, 2026
  • September 27, 2026
Breaking News
September 27, 2026

மீசைய முறுக்கு 2 திரைப்பட விமர்சனம்

By 0 10 Views

மூன்று தலைமுறைக் கதை. மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தில் ஹிப் ஹாப் ஆதியே இடம் பெறுகிறார். 

கானா பாடல்கள் கவனம் பெறாத காலக்கட்டத்தில் தொடங்குகிற கதை. அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த பாரம்பரிய இசைக்குப் போட்டியாக கானாவையும் கொண்டு வர முயற்சித்த முதல் தலைமுறை ஆதி தோற்றுப் போக, அடுத்த தலைமுறையில் அவர் மகனின் முயற்சியும் பலனற்றுப் போக, இந்தத் தலைமுறையில் அது முடிந்ததா என்பதுதான் கதை.

மூன்று தலைமுறைகளிலும் இளைய பருவத்தை கையில் எடுத்துக் கொண்டதால்  ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அடி தடி என்று ஆர்ப்பாட்டமாக வருகிறார் ஆதி.

என்ன ஒன்று… காலத்துக்குதத் தகுந்தாற்போல் ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றிக் கொண்டிருப்பது அவருக்கு வசதியாக போய்விட்டது. 

ஆனால், படத்தில் நடிப்பது மட்டுமன்றி, ஸ்கிரிப்டை எழுதி, இசையமைத்து, இயக்கத்தை ஏற்று என்று பெரிய பொறுப்புகளைச் சுமந்திருக்கும் அவர் திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும். அத்துடன் இன்றைய ஜென் z தலைமுறைக்குப் பிடிக்கும் விதத்தில் அதனைச் செய்திருப்பதால் வெற்றி பெற்றிருக்கிறார் அவர்.

ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான் திரையில் வரும்போதே தியேட்டரில் கலகலப்பு கூடி விடுகிறது.

படத்தின் பெரிய பலம் மூன்று நாயகியர். சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என்று ஒரு காலத்துக்கு ஒரு நாயகி என்று நம்மை ரசனை குறையாமல் கட்டிப்போட்டு வைக்கிறார்கள்.

இவர்களுடன் கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்டவர்கள் படத்தைக் கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இளமை குறையாத படம் என்பதால் எனர்ஜியுடன் படம் பிடித்து மூன்று காலக் கட்டத்தையும் நெருடாமல் வித்தியாசப் படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம். 

இசையைத் தன் வசம் வைத்திருக்கும் ஆதி, ஒரு இசைக் கொண்டாட்டமாக பாடல்களைத் தந்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள் ஹிட் அடித்திருப்பது பலமாகி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஆதியின் உழைப்பு அசர வைத்திருக்கிறது. காலங்கள் தாண்டியும் நிற்பது இசை மட்டும்தான். அதில் கானா கலைஞர்களுக்கான அங்கீகாரத்தை இதில் அவர் முன்னிலைப்படுத்தி இருப்பதற்குப் பாராட்டுகள்.

மீசைய முறுக்கு 2 – மிடுக்கு..!

– வேணுஜி