November 21, 2024
  • November 21, 2024
Breaking News
October 31, 2023

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

By 0 11099 Views

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். 

நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன்.

ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும், இது இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிப்பது சிறந்த விமர்சகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதைவிடச் சிறந்த திறன், படத்தின் டீசரையோ ட்ரைலரையோ பார்த்து அந்தப் படம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று கணிப்பது.

ஆனால், என்னளவில் ஒரு படத்தின் முதல் பார்வையே அந்தப் படத்தின் அடி நாதத்தைக் கட்டவிழ்த்து விடும் என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன்.

அதற்காக என்னை நானே ஞானஸ்தன் பட்டம் கட்டிக்கொண்டு சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது அல்ல, இந்தப் பதிவின் நோக்கம். 

இதுவரை கற்ற அறிவை உள்ளங்கையில் வைத்து, பெற்ற அனுபவங்களைத் தோய்த்து அவ்வப்போது சோழி உருட்டி என்னை நானே சோதித்துக் கொள்கிற ஆரூட விளையாட்டு இது.

அந்த அளவில் இந்த தங்கலான் படம் மிகப்பெரிய விளைவை இந்திய சினிமாவில் ஏற்படுத்தும் என்று நான் கணிக்கிறேன்.

அதில் ஆஸ்கர் சாத்தியமும் அடங்கி இருக்கிறது என்பது இப்போதைக்கு அதிகபட்சமான புகழ்ச்சியாக இருக்கக்கூடும். ஆனாலும் அதற்கான சாமுத்திரிகா லட்சணங்கள் தங்கலானுக்கு இருப்பதாகவே உணர்கிறேன்.

உயரங்கள் ஒரு உண்மைக் கலைஞனை ஒரு சிறிதும் பாதிப்படைய வைப்பதில்லை. இதற்கு உதாரணமான இருவர் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

முதலாமவர் இந்தப் பட நாயகன் விக்ரம். இந்தத் தலைமுறையில் நாம் கொண்டாடத்தக்க மாபெரும் கலைஞன் இந்த சீயான்.

“இன்னும்… இது போதாது..!” என்று நடிப்புத் தீனி கேட்கிற யானைத்தீ பசிக்காரன் இவன். அட்சய பாத்திரத்தில் அள்ளித் தின்றாலும் அடங்காத பசி அவனுடையது. தங்கலானாக 

முதல் பார்வையில் அவன் நம்மைப் பார்க்கும் முதல் பார்வையே ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி உயிரை ஏதோ செய்கிறது. 

கமலுக்கு அடுத்து தன் ஊனை… உயிரை உருக்கிப் பாத்திரத்தில் வார்க்கிற மாய வித்தைக்காரன் இந்தப் படத்துக்காக உருக்குலைந்து நிற்பதைக் கண்கள் பனிக்கப் பார்க்க நேர்கிறது. 

விக்ரமின் நடிப்பில் இந்தப் பாத்திரம் ஒரு விண்மீன் பாய்ச்சலாக இருக்கப் போகிறது என்பது இந்த ஒரு பார்வையிலேயே எனக்குப் புரிகிறது.

அடுத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். வெற்றிகளை ருசித்தோமா, வீடு கட்டினோமா, வெளிநாடுகள் சுற்றினோமா என்றெல்லாம் இல்லாமல் திரைப்பட இயக்கத்தை ஒடுக்கப் பட்டோருக்கான ஒரு பேரியக்கமாகவே நடத்தும் கலகக்காரன். வெற்றிக்கான கர்வம் சிறிதும் இல்லாமல் மாற்று சினிமாவுக்கான மாற்றத்தை மேற்கொள்ளும் இந்த மாயக்காரனின் 

படங்களில் ‘கபாலி’யும், ‘காலா’வும்தான் மலிவான உத்திப்படங்கள் என்பேன்.

அதுவும் ‘காலா’ குறித்து நான் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். இருப்பினும் அடுத்து வந்த அவரது ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பட முயற்சிகள் சமகால இயக்கத்தில் வேறு எவரும் முயற்சித்திராத முன்னெடுப்புகள். 

“என் படங்கள் என் அரசியல் பேசும்…” என்கிற கொள்கையை அவர் முன் வைத்தாலும் அதை விரும்பாதவர்கள் அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தாலும் கூட பா.ரஞ்சித்தின் படைப்புகள் வேறு எவரும் தொடத் தயங்கும் வேள்விகளாகவே இருக்கின்றன.

இந்த இருவர் இணைவதால் மட்டும் இந்தப் படத்தைக் கொண்டாடி விட முடியாதுதான். அப்படியானால் இந்தப் பட அறிவிப்பு வந்த நாளிலேயே அதை செய்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் முதல் பார்வை மட்டுமே இதைச் சொல்ல வேண்டும் என்கிற என் எண்ணத்தைக் கிளர்ந்து எழ வைத்து விட்டது.

இதே கருத்தை நாளை டீசரைப் பார்த்து இன்னும் சிலர் சொல்லக்கூடும் – இதே கருத்து படத்தைப் பார்த்தபின் பலராலும் எதிர்வரும் காலத்தில் பகிரப்படும். 

என் கணிப்பு சரிதானா என்பதை நானும் படத்தைப் பார்த்து கண்டிப்பாகப் பதிவு செய்வேன். அப்போதும் இந்த எண்ணம் ஒரு சிறிதும் மாறாமல் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. 

(இப்படி உணர்வை ஊக்குவித்த சில படங்களைப் பற்றி நிறைய பேசி இருக்கிறேன். ஆனால் பதிவிட்டதில்லை. பேச்சு… மறந்தால் போச்சு. ஆனால், பதிவு ஒரு ஆவணம். இதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும்தானே..?)

இதற்கு முன் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் இதே போன்ற ஒரு முதல் பார்வையின் மூலம் அந்தப் படம் ஏற்படுத்தப் போகும் விளைவுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லி மாய்ந்தேன். படத்தைப் பார்த்ததும் என்னுடைய நம்பிக்கை பல மடங்கு பெருகி பலரிடம் சிலாகித்துக் கொண்டிருந்தேன்.

ஆனாலும், படம் வெளியாகி முதல் நான்கு நாட்கள் தியேட்டர் காலியாக இருந்ததைக் கண்ட நண்பர்கள் சிலரும் ஜாடை மாடையாக என் விமர்சனத்திற்கு எதிர் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு நான் சொன்ன மேஜிக் நடந்தேறியது. 

அதே மேஜிக் தங்கலான் படத்திலும் நடக்கும் என்பதுதான் என் லாஜிக்.

முதல் பார்வையிலேயே ‘இது மொக்கை..!’ என்று தெரிந்த படங்களும் உண்டு. இதே சீயானின் ‘மஜா’ மற்றும் ‘அருள்’ படங்கள் அந்த வேலையைக் கச்சிதமாக செய்தன. அதைப்பற்றி அப்போது சீயானிடமே சொல்லி அவரது வருத்தத்துக்கு ஆளான கதைகளும் அப்போது நடந்தன.

தங்கலான் மூலம் சீயானுக்கு இன்னொரு தேசிய விருதும், அதைத் தாண்டிய உச்ச பட்ச விருதுகளும் கிடைக்கும் என்பது திண்ணம். 

ஆனாலும், விருதுகளைத் தாண்டியும் ஆரோக்கியமான படங்களை ருசிக்கும் ரசிகர்களுக்கு பசித்த நேரத்தில் கிடைத்த படையலாக இந்தப் படம் இருக்கும். (வெறி பிடித்துக் காட்டுக் கத்தல் போடும் விசிலடிச்சான் குஞ்சுகள் இந்த ரசிகர் லிஸ்ட்டில் வர மாட்டார்கள்…)

இதில் மாற்றுக் கருத்து கொண்டோரிடம் நான் மல்லுக்கட்டப் போவதோ, சொல்லுக் கட்டப் போவதோ இல்லை. ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல படத்தைப் பார்க்கப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு அன்றி வேறு எந்த எதிர்பார்ப்பையும் இவர்களிடமிருந்து எதிர்பார்த்து இந்தப் பதிவை நான் இடவில்லை என்பதை என்னைப் பற்றி அறிந்தோர் அறிவர்.

500 கோடி, 1000 கோடி வசூல்ராஜாக்கள் அப்பாலே போங்க…

தங்கலான் – தங்க மெடலான்..!

– வேணுஜி