கர்நாடகாவில் வரும் 12-ம் தேதி சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி சித்தராமையா சார்பில் அவரது வழக்கறிஞர் உக்ரப்பா, பா.ஜ.க. தேசிய தலைமை மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஸ்களை அனுப்பி வைத்துள்ளார்.
பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ்களின் நகலில் இருந்து:-
‘எனது கட்சிக்காரரான முதல் மந்திரி சித்தராமையா மீது தரக்குறைவான கருத்துக்களையும் பொய் கருத்துக்களையும் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறார். சித்தராமையா மீது சுமத்தப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை.
அவரது புகழை அழிக்கவே பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு உள்ள நன்மதிப்பை சீர்குலைக்க இவ்வாறு தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருவதால் எனது கட்சிக்காரர் சித்தராமையா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆதாரமில்லாமல் தரக்குறைவாக பேசி வரும், மோடி மற்றும் பா.ஜ.க.வினரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைமை பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையாவின் நன்மதிப்புக்கு ஏற்பட்ட மானநஷ்டத்துக்கு இழப்பீடாக 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’.