October 10, 2024
  • October 10, 2024
Breaking News
May 9, 2018

மோடி பொய் சொல்லிக்கொண்டே போகிறார் – பிரகாஷ்ராஜ் தாக்கு

By 0 1742 Views

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்த பேட்டியின் பகுதி ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதன் சாரம் –

“இந்திய சரித்திரத்தில் இப்படி பொய் சொல்கிற பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. அவருக்கு எதுவுமே தெரியாது. பொய் சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். அந்த பொய்களுக்கு நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் நான் ஒரு குடிமகன்.

நான் எந்த கட்சியையும் சாரதவன். நான் ஒரு கலைஞன். கட்சியில் இருந்து வளர்ந்தவன் கிடையாது _ சமுதாயத்தில் இருந்து வளர்ந்தவன். எங்கேயோ ஒரு இடத்தில் நமது நாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற துரோகம், பொய் பிரசாரம் போன்றவை பற்றி நாம் கேள்வி கேட்க வேண்டும்.

‘நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள். உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று. நீங்க கொடுத்த வாக்கு என்ன ஆயிற்று? அதை நிறைவேற்றினீர்களா… இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டால் “உங்கள் அம்மாவின் ஜாதி என்ன? நீ எதற்கு நடிகனாக பேசுகிறாய்…” என்கிறார்கள். எதிர்க்கேள்விதான் கேட்கிறார்களே தவிர பதில் இல்லை. கேள்வி கேட்டால் எல்லோருடைய வாயையும் ஏன் மூடுகிறீர்கள்.

நான் இந்து மதத்துக்கு எதிராக இருக்கிறேன் என்று ஏன் பிரசாரம் செய்கிறீர்கள்? “நீ இந்த நாட்டின் துரோகி. இந்த நாட்டை விட்டு பாகிஸ்தானுக்குப் போ..!” என்று ஏன் சொல்கிறீர்கள். இது தப்பாக இருக்கிறது. இதை நாட்டு மக்களிடம் சொல்ல வேண்டி இருக்கிறது.

கர்நாடக தேர்தலில் பா.ஜனதா பொய் பிரசாரம் செய்து வருகிறது. இன்னும் எத்தனை நாள்தான் பொய் சொல்லிக் கொண்டே ஒரு நாட்டின் நிலைமையை அசிங்கமாக்கிக் கொண்டிருப்பீர்கள். அதனால் தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன்..!”

இதற்கு முன்னதான ஒரு பேட்டியில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.