‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து தரக்குறைவாக ராதாரவி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக உருவெடுத்து ராதாரவியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரையும் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார். அதன் எதிரொலியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு நடிகர் ராதாரவி அளித்த விளக்கம் –
“நடிகை நயன்தாராவைப் பற்றி நான் பேசுவதற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஏன் பேச்சு அவருக்கும் அவர் காதலருக்கும் மனவருத்தத்தை தந்திருந்தால் – நயன்தாராவும் அவரை திருமணம் முடிக்க இருக்கிற விக்னேஷ் சிவனுக்கும் நான் என் மன வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
விருப்பப்பட்டால் என்னை அவர்கள் நேரில் சந்திக்கலாம்.இல்லை நான் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறேன்.
திமுகவில் இருந்து என்னை இடைநீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் தருகிறேன். அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன்..!”