April 25, 2024
  • April 25, 2024
Breaking News
April 8, 2019

8 வழி சாலை அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

By 0 697 Views

மத்திய, மாநில அரசுகள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் மேற்கொள்ள திட்டமிட்டன. இதற்காக காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதனை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டங்கள் நடந்தன. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர். அத்துடன் 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

8 வழிச் சாலை குறித்து 8 மாதங்கள் விசாரணைநடைபெற்று இன்று 8-ம்தேதி தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தகுந்தது.