August 10, 2026
  • August 10, 2026
Breaking News
August 7, 2026

போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

இந்த மண்ணுக்கு மரங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்வதுதான் படத்தின் மையக்கரு. ‘இந்த பூமியின் கடைசி மரமும் விழுந்து விட்டால் ஒரு உயிர் கூட இங்கே மிஞ்சாது…’ என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல வந்த இயக்குனர் அஷ்ரப், அதைத் தானே எழுதி நடித்து ‘விஷுவல் ட்ரீட்’டாக சொல்லி இருக்கிறார்.

அப்படி இருக்கும் மரங்களுக்கு எல்லாம் ஆதிமரமான தாய் மரம் ஒன்று இருப்பதாக தன் தாய் சொன்னதை நம்பும் மகனான நாயகன் அஷ்ரப், அந்த அரிய மரத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப்பகுதியில் பயணிக்கிறார்.

அங்கே வழிதவறி மதிகெட்டான் சோலை என்கிற உள்ளே போனால் வெளியே வர முடியாத ஆபத்தான பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். உண்ண உணவோ, குடிக்க நீரோ இல்லாத அந்த அபாயகரமான காட்டுப்பகுதிக்குள் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார் அஷ்ரப்.

அப்படியும் அவர் உயிர் வாழ முடிந்தது என்றால் அதற்கான சாத்தியங்கள் எப்படி நிகழ்ந்தன, அந்த வனப்பகுதிக்குள் அவரால் வேற்று மனிதர்களை சந்திக்க முடிந்ததா, அவர் படம் எடுக்க நினைத்த மரத்தை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்தாரா..? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தருவதுதான் மீதிப் படம்.

ஒரு தனி மனிதனின் பயணத்தை மட்டும் கொடுத்தால் அது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை தராது என்று நினைத்த அஷ்ரப், இடையிடையே அவருக்கும் பெற்றோருக்குமான உறவு, அதில் தனது அன்னையுடன் ஏற்படும் பிணைப்பு, வாழ்க்கை தனக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் எல்லாவற்றையும் அங்கங்கே சொல்லி தான் சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.

நடிகராகவும் முழுப் படத்திலும் வலம் வந்திருக்கும் அஷ்ரப்புக்கு அவரது உயரமும் உடல்வாகும் ஒத்துழைத்து இருக்கிறது. அத்துடன் பல்வேறு உணர்ச்சி நிலைகளையும் அவரது ஒற்றை முகத்தில் காட்ட வேண்டி இருப்பதால் சற்று மிகையாகத் தோன்றினாலும் அதை தனது முக குறிப்பில் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

திரைக்கதையும் அதற்கு தோதாக ஒத்துழைத்து இருக்கிறது.

வனத்தின் தனிமைக்குள் சிக்கி தவிக்கும் போது கண்ணில் தெரியும் இரண்டு மனிதர்களைப் பார்த்து அவர் பரவசப்படுவதும், அடுத்த நொடியே அந்த பரவசம் மறைவதும் அவர் மீது பரிதாபத்தை வரவழைத்து விடுகிறது.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அனனி சுவாமிநாதனை வேறு இளசுகள் இல்லாததால் நாயகியாக ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரும் கடைசி கடைசியாக நாயகனுக்கு உதவ ஓடோடி வருகிறார்.

அவ்வப்போது வந்து தனது குணச்சித்திர நடிப்பால் அடையாளம் காட்டிவிட்டுப் போகும் கருணாகரன், இதில் அஷ்ரபின் நண்பராக வந்து நட்புக்கு உதவுகிறார். 

அஷ்ரபின் இன்னொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவும் அடையாளம் தெரியும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

அஷ்ரபின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் இயல்பான நடிப்பில் கவர்கிறார் ஆனாலும் கதைப்படி அவரை விட அஷ்ரபின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், தன் மகனை உச்சி முகர்ந்து மெச்சி, வாழ்வின் உண்மையை புரிய வைப்பவராக வருவதால் அதிகம் கவர்கிறார்.

படத்தின் தலைப்பு போட்டோகிராபர் ஆனதால் ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத்துக்கு படத்தின் மீது பெரும் பொறுப்பு இருக்கிறது. அதில் வனப்பகுதியாக ஆகிப்போனதால் பச்சை பசேல் என்ற வனாந்திரத்தில் நம்மை அச்சம் கொள்ளும் அளவுக்கு ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார்.

காட்டுக்குள் கதை பயணிப்பதால் அங்கிருக்கும் ஒலிகளை வைத்து பின்னணி இசைத்து இருக்கும் ராஜ்குமார் சந்திரசேகரனின் இசை புதிதாக இருக்கிறது. அதிலும் அஷ்ரப் தனியாக பயணிப்பதை மட்டும் விசுவலாக வைத்துக் கொண்டு இன்ன பிற விஷயங்களை இசை மூலமாகவே நிரப்ப முயற்சித்திருக்கிறார்.

இரண்டாவது பாதியில் வேகம் தெரிய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ முதல் பாதியை சற்றே மெதுவாக நகர்த்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரணவ். அம்மாவுடன் ஆன அஷ்ரபின் சிறுவயது நெருக்கத்தை நான் லீனியராக சொல்லி இருப்பது நன்று.

வனங்களின் பெருமையை… குறிப்பாக மரங்களின் பெருமையை சொல்லி இருக்கும் அஷ்ரப், ஒரு பிள்ளை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதில்தான் இருக்கிறது என்பதை தாய் பாசம் கலந்தும் சொல்லியிருக்கிறார். 

அதை தனி மனித சாகசமாக… அதிலும் சஸ்பென்ஸ் திரில்லராக சொல்லியிருப்பதும் சிறப்பு.

போட்டோகிராபர் – காடும், காடு சார்ந்தும்..!

– வேணுஜி