October 3, 2026
  • October 3, 2026
Breaking News
October 2, 2026

அன்பில் அவன் திரைப்பட விமர்சனம்

By 0 24 Views

காதல் எத்தனை வலிமையானது… தன் காதலிக்காக ஒரு காதலன் எந்த அளவுக்கு அன்பு வைப்பான் என்று சொல்லும் கதை.

காதலின் காரணத்தால் தன் வசதியான குடும்பத்தை உதறிவிட்டு காதலன் அசோக் செல்வனை கைப்பிடித்து போதாமையில் வாழ்ந்து வருகிறார் பிரீத்தி முகுந்தன்.

அவரது ஆசை ஒன்றே ஒன்றுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் வீட்டை வாங்கி அதை ஹோம் ஸ்டேவுக்கு வாடகைக்கு விட்டு வசதியாக வாழ வேண்டும் என்பது. எனவே இந்த பற்றாக்குறை வாழ்க்கையை விட்டு அவரை அவரது கனவு வாழ்க்கைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார் அசோக் செல்வன்.

அதற்காக மூணார் அருகில் இடம் பார்த்து போராடி வீட்டை வாங்கி அதைத் தயார் செய்யும் நிலையில் எதிர்பாராத ஆதிக்க சக்தி படைத்த சதிகாரர்களால் பிரச்சினை உண்டாக எந்த உதவியும் இல்லாத அவர்களால் அதை எதிர்த்து வெல்ல முடிந்ததா என்பதுதான் கதை.

அசோக் செல்வனுக்கேற்ற வேடம். அன்புக்கு அன்பையும், அநீதிக்கு ஆக்ரோஷத்தையும் நன்கு வெளிக்காட்டி உள்ளார். அதிலும் பிரீத்தியைக் காதலிக்கும் எபிசோடில் படு ஸ்டைலிஷாக இருக்கிறார். 

அதேபோல்தான் பிரீத்தியும். தன் அழகுக்கு எப்போதும் இருக்கும் சவால்களை அவர் எதிர்கொள்ளும் விதம், அன்றாடம் நம் வாழ்வில் அழகான இளம் பெண்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள்தான். ஆனால், அதை அழகுற தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தின் பின் பாதியில் ஆற்றாமையால் இருவருக்குள்ளும் ஏற்படும் வாக்குவாதம் மிக இயல்பாகவும், நேர்த்தியாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் இருக்கிறது.

அந்த வில்லன்கள் – அடேங்கப்பா… டெரர் பார்ட்டிகள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் மஹா டெல்லி கணேஷ், ப்ரீத்திக்குக் கொடுக்கும் மெகா சிக்கல்கள் பதற வைக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் கடைசியில் பிரீத்தி கொடுக்கும் பதிலடி ‘செம..!’

எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் பாலுவும், வழக்கறிஞராக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசமத்தும் கூட பயங்கர வில்லன்கள்தான்.

ராணி பத்மினியாக சின்ன வேடத்தில் வந்தாலும் ரேவதியின் நடிப்பு சிறப்பு.

ஒரு வீட்டுக்குள் நடக்கும் போராட்டத்தை  பதைபதைப்போடு படமாக்கி இருப்பதில் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனின் உழைப்பு அசர வைக்கிறது.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அவரது சிக்னேச்சருக்குப் பொருத்தமாக இருக்கின்றன.

விக்னேஷ் ராஜா எழுதியிருக்கும் கதைக்கு, திரைக்கதை எழுதியிருக்கும் விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன் ட்ரையோ சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

ஆனால், கடைசியில் இத்தனை நீளமான ஆக்ஷன் காட்சிகள் தேவையா என்பதை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன். கவனித்திருக்க வேண்டும்.

அவ்வளவு பெரிய தீரம் மிக்கவராக அசோக் செல்வனின் பாத்திரம் படைக்கப்படவில்லை. இப்படி யாரையும் எதிர்த்து வீழ்த்தி விட முடியும் என்றால் அவர் யாருக்கும் எப்போதும் பயந்து போக வேண்டிய அவசியம் இல்லை.

அன்பில் அவன் – வம்பில் சிவன்..!

– வேணுஜி