சினிமாவைப் பொருத்தமட்டில் எல்லாத் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் வாரிசுகளும் ஹீரோவாக புகழ் பெறவே விரும்புகிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜயின் மகன் அப்படி எளிதாக கிடைக்கக்கூடிய சொர்க்க வாசலை விட்டுவிட்டு ஒரு இயக்குனராக வேண்டும் என்கிற வேட்கையுடன் களம் இறங்கி இருப்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தை விமர்சிக்க தொடங்கலாம்.
அப்பா பட்ட கடனுக்காக பொறுப்பேற்று தானும் கடனாளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் கிஷன் பிழைப்புக்காகவும் அம்மாவின் நினைவுக்காகவும் ஒரு லைப்ரரியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் லைப்ரரிக்கு வருபவர்கள் அருகிவர, அவரால் பணம் சம்பாதிக்க முடியாத சூழலில் அங்கிருக்கும் புத்தகங்களை யுடியூபில் வெளியிட்டு பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார். அதற்கு குரல் கொடுப்பது தொடர்பாக நாயகி ஃபரியா அப்துல்லாவின் நட்பு கிடைக்க அது ஒரு பக்கம் காதல் ஆகிக்கொண்டிருக்கிறது. அவரிடமும் பணம் பெற்று அதை சூதாட்டத்தில் விட்டு விட்டு நன்மதிப்பை இழக்கிறார்.
இந்நிலையில் அவரையும் அறியாமல் அவருக்கு கிடைக்கும் ஒரு பொருள் பல கோடி டாலர் மதிப்புள்ள பெட்டகத்தின் சாவியாக இருக்க, அதை கைப்பற்ற ஒரு பெரும் சதிகார கும்பல் ஒன்று அவரை துரத்துகிறது.
துரத்தி வரும் ஆபத்துகளில் இருந்து அவர் மீண்டாரா, ஃபரியாவின் காதல் என்ன ஆனது, நினைத்தபடி அவரால் தன் கடனை அடைக்க முடிந்ததா என்பதற்கெல்லாம் மீதிப் படம் விடை சொல்கிறது.
யாருக்கு ஆக்ஷனும் காமெடியும் நன்றாக வருகிறதோ அவர்கள் சட்டென்று முன்னணி ஹீரோவாகி விடலாம். அந்த வகையில் சந்தீப் கிஷன் இரண்டிலும் கலக்குகிறார். அத்துடன் இலகுவாக நடிக்கவும் செய்கிறார்.
நாயகியாகியிருக்கும் ஃபரியா அப்துல்லாவின் பாத்திரப் படைப்பும் அவருக்கான பங்களிப்பும் மிகச் சிறிய அளவிலேயே இருப்பதால் அவர் பற்றி அடுத்த படத்தில்தான் யோசிக்க முடியும்.
சந்தீப் கிஷன், ஃபரியா இருவரும் இவ்வளவு யூத் புல்லாக இருக்க அவர்களுக்கு இடையே நயமான ரொமான்ஸ் இல்லையே..?
வில்லனின் கையாளாக வரும் யோக் ஜேபிக் கும், வில்லன் குரூப் மகாலட்சுமி சுதர்சனனுக்கும் இடையில் இருக்கும் ரொமான்ஸ் கூட ஹீரோ ஹீரோயினுக்கு இல்லாதது பெரும் குறை.
லீலை படத்தின் நாயகன் ஷிவ் பண்டிட்டை நினைவிருக்கிறதா? அவர் இந்த படத்தில் ஒரு வில்லன். ஆனாலும், அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார். அசப்பில் சோனு சூட் போலிருப்பவர் ஹீரோவாக விட்டதை வில்லனாகப் பெறுவாரா என்று பார்க்கலாம்.
மெயின் வில்லனாக வரும் சம்பத்ராஜ் படத்தில் இரண்டு முறை சாகவிருந்து மூன்றாவது முறை சாகிறார். அதற்குள் பண்ணும் அத களம் வேறு ரகம்.
இவர்களுடன் அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார், கமலேஷ் ஜெகன், கிரன் கொண்டா, நாகசாய் உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறைவு செய்திருக்கிறார்கள்.
லைகா நிறுவனம் அள்ளித் தெளித்திருக்கும் பணத்திற்கான பிரம்மாண்டத்தை பிசிறு இல்லாமல் காட்சிகளில் படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்.
தமன்.எஸ் இசை படத்தின் பெரும்பலம். படத்துக்கு தேவையான உணர்ச்சியை இசையின் மூலமே கடத்தி இருக்கிறார். அதற்கு தோதான படத்தொகுப்பை தந்திருக்கிறார் பிரவீன்.கே.எல்.
தனது முதல் படத்திலேயே பிரமாண்ட இயக்குனராக முத்திரை பதித்திருக்கும் ஜேசன் சஞ்சய், புலிக்குப் பிறந்தது பூனை அல்ல என்று நிருபித்திருக்கிறார். தொடர்ந்து அவருக்கு இதைப்போன்ற படங்கள் கிடைக்கும் என்றாலும் தாத்தாவைப் போல் இயக்கத்திலேயே தொடர்வாரா அல்லது அப்பாவை போல் நடிப்புக்கு வருவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.
காதல் குறைவாக இருந்தாலும் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் இணைந்து பார்க்கும் வகையில் ஒரு கமர்சியல் படத்தை கொடுத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய்.
சிக்மா – சிக்கும் வெற்றி..!
– வேணுஜி