October 4, 2026
  • October 4, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • ஏழுகடல் ஏழுமலை திரைப்பட விமர்சனம்

ஏழுகடல் ஏழுமலை திரைப்பட விமர்சனம்

By on October 4, 2026 0 5 Views

இயக்குனர் ராமின் படைப்புலகம் அலாதியானது. பேரன்புக்குள் நம்மை ஆட்படுத்துவது. இதே விஷயங்கள்தான் பிரதானமாக இருக்கின்றன கடந்த வியாழனன்று வெளியான அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும்.

தலைப்பே சொல்லி விடுகிறது இது கதை சொல்லி வாயிலாகக் கடத்தப்படும் கதை  என்பதை. ‘ஒரு மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழுமலை தாண்டி வாழும் ஒரு கூண்டுக்கிளிக்குள் இருக்க அதை கொன்றால்தான் மந்திரவாதி இறப்பான்..!’ என்பதான கதைகளை நாம் கர்ண பரம்பரையாக கேட்டிருக்கிறோம்.

அப்படியான ஒரு கதைப்போக்கை, அதிலிருந்து எதிர்பட்டு இப்போது நாம் அருகிலே இருக்கும் எல்லா உயிர்களையும் ஒன்று போல நினைக்க வைப்பதுதான் ராமின் இந்த முயற்சி – இதன் உள்ளே உயிர்களின் உயரிய தேவையான காதலின் தேடலும் இருக்கிறது. 

 பெரும்பாலும் காலம் காலமாக கடந்து வந்த மனிதனின் தேடல் நிலைகளை… அவன் ஆற்றாமைகளை… அவன் ஆற்ற நினைப்பதை ஒரு பாத்திரத்துக்குள் வடிவமைத்து விடுவது ராமின் வழக்கம். அப்படித்தான் அமைந்திருக்கிறது இந்தப் படத்தின் பாத்திரங்களும். 

மேற்படி உணர்வுத் வீரியத்தைப் பிரித்து எடுத்தால் அது நாயகன் நிவின் பாலி. அதன் வடிகட்டிய எஞ்சிய பகுதிகள் இரண்டாவது நாயகன் சூரி. 

நிவின் பாலியின் பாத்திரம் கைவிட்டு போன காலங்களின் எச்சம் என்றால்… சூரியின் பாத்திரம் நிகழ்கால இயலாமை நிலையின் மிச்சம்..!

இவை தவிர ஆதிக்க உலகம் கசக்கிப் பிழிந்து தூக்கி எறிந்த கருணையின் சொச்சமாக ஒரு சிறுவனும், காலங்கள் தோறும் மிதிபட்டுச் சாகும் நிலையற்ற அச்ச உயிரின் அடையாளமாக ஒரு எலியும், அதன் குட்டிகளும்…

ஒரு மழைக்கால பயணத்தின் ஊடே ஒரு யுகப் பயணத்தை… ஒரு வாழ்க்கைப் பயணத்தை… ஒரு நிலையற்ற பயணத்தை… ஒரு நிச்சயமற்ற பயணத்தைப் பரிமாறி வைப்பதுதான் இந்தக் கதை.

8000 ஆண்டுகள் வயதுடைய (தாக சொல்லிக் கொள்ளும்) நிவின்பாலியும், 40 நிறையாத நவயுக இளைஞன் சூரியும் சந்தித்துக் கொண்டால் புரிந்துகொள்ளல் எப்படி நிகழும்..?

அப்படித்தான் போகிறது முதல் பாதிப் படம் முழுவதும். நிவின் பாலி சொல்லும் அனைத்து உயிர்களின் சமத்துவம் எப்படி சூரிக்குப் புரியவில்லையோ, அப்படியே சூரியின் நிலை பற்றியும் பாலிக்கு அவசியமின்றிப் போகிறது. 

கதைப்படி நினைத்திருந்தால் சூரியை ஒரு நிமிடத்தில் நிவின் பாலி கொன்று போட்டு இருப்பார். ஆனால் கொல்வது அவர் நோக்கமல்ல – புரிந்து கொள்ள வைப்பது என்பது நமக்குப் புரியும்போது பாதிப் படம் தாண்டி விடுகிறது. 

மீதிப் படத்தில் தன் காதலை… அதன் ஆதாரப் புள்ளியான காதலியை யுகங்கள் தோறும் நிவின் பாலி தேடிச் செல்வதை சொல்கிறது. 

இயக்குனர் ராம் படங்களின் ஆதாரப்புள்ளி எப்போதுமே அஞ்சலியாக இருந்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவரேதான். பாலின நோக்கம் அன்றி பாலி விரட்டிச் செல்லும் அழகி அஞ்சலி காலங்கள் தோறும் கிளியோபாட்ராவாக, மேரி மகதாலீனாவாக… குறிஞ்சிப்பூவாக, நெய்தல் நிலவாக என்று பல முகங்களில் தோன்றுகிறார். 

அந்தந்தக் காலங்கள் திரையில் தோன்றும் போது நாம் இப்போதுள்ள உலகை மறக்கிறோம். அந்தக் காலத் தேடலுக்கு ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமமும், இசையமைப்பாளர் யுவனும் ராமின் விழிகளாகி, செவிகளாகி நம் விழிகளுக்குள்ளும் செவிகளுக்குள்ளும் அந்த தேடலைக் கடத்துகிறார்கள்.

அதிலும் யுவனின் பங்களிப்பு காலங்கள் தாண்டியும் நம் நினைவுகளில் நிலை கொள்ளும்.

படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு பாத்திரம் அஞ்சலியின் பருத்த மார்பகத்தை பார்த்து ஏங்கும் ஒரு பித்தனுடையது. அதை கவனித்த அஞ்சலி அவனிடம் “என்ன..?” என்று கேட்கிறார். அவன் “ஒன்றும் இல்லை..!” என்றபடி தலையைக் குனிந்து குறுகுகிறான். வெகுஜனப் பார்வைக்கு அந்த முலையின் மேல் அவன் மோகம் கொண்டதாகப் புரியும். ஆனால் குத்திட்டு நிற்கும் அந்த முலையைக் கொஞ்சம் கூட தளர்த்தாமல் அவனை அழைத்து மண்டியிடச் செய்து அவன் தலையை அதன் மேல் சாய்த்துக்கொள்ளும் அஞ்சலின் செயலில் அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகும் போதுதான் புரிகிறது தாய்மைக்கு ஏங்கிய பிள்ளையான அவனது ஆற்றாமையை.

படத்தின் இறுதியில் தன் காதலியைத் தேடி மீண்டும் நிவின் பாலி புறப்படும்போது அந்தப் பிள்ளை மனசுக்காரனும் தன் தாயைத் தேடி அவருடனான பயணத்தில் விரும்பி இணைவது காவியம்.

சூரிக்கு நிவின் பாலி விடை கொடுக்கும் போது “இப்படி மீண்டும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் நீ அந்த அபாய சங்கிலியை இழுத்தால் போதும்…” என்று சொல்வது பகடியாக தோன்றலாம். ஆனால் அதன் தத்துவம் பதற்றத்தில் தேடும்போது அருகில் இருக்கும் சாவி அகப்படாது என்பதுதான்.

இப்படி மனித இனம் வாழ்ந்த யுகப் பயணத்தில் காலங்கள் தோறும் அவர்களிடம் வெளிப்பட்ட ஆதிக்க மனப்பான்மை, அடிமைத்தனம், சூழ்ச்சி, காமம், வஞ்சகம், போலித்தனம், பரிதாபம், அச்சம், உணவின் தேவை இவற்றுடன் நம்முடன் உயிர் வாழ போராடும் சிறு உயிர்களின் பதற்றத்தையும் கூட ஒரு வாழ்க்கைப் பேரேடாக பதிவு செய்திருக்கிறார் ராம். 

ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு தத்துவம் தென்படும் வல்லமை கொண்ட ராமின் இந்த ‘ஏழு கடல் ஏழுமலை…’

புரியாதவர்களுக்கு புதிர் – புரிந்தவர்களுக்கு விடை..!

– வேணுஜி