ஆன்மா என்பது உயிருள்ள உடல். ஆத்மா என்பது உயிரற்ற உடல். இவை இரண்டும் ஒரு சூழலில் இணையும் போது ஏற்படும் அனுபவங்கள்தான் இந்த படத்தின் கதை.
பணம் பணம் என்று அலையும் ஆன்மாவாக வரும் ஃபஹத் பாசில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார். அது ஏன் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்க வேண்டும் என்பதற்கு பின்னால் ஒரு காரணம் வருகிறது.
அப்படி ஏகப்பட்ட தகிடு தித்தம் செய்து உள்ளூர் தாதாவிடம் பிரச்சனை செய்து இரண்டு நாட்களில் 20 லட்சம் ரூபாயை திரட்ட வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார். இந்நிலையில் பணக்கார வீட்டு பெண் குழந்தையான சாரா பாலேகர் அவர் வசம் சிக்க, அவளைக் கடத்தி அவளது பெற்றோரிடம் பெரும் பணம் திரட்ட ஆசைப்படுகிறார்.
ஆனால் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில்தான் சிறுமி சாரா உயிருடன் இருக்கும் ஆன்மா அல்ல இறந்து போன ஆத்மா என்று தெரிய வருகிறது. அதுவுமில்லாமல் அவர் கண்ணுக்கு மட்டுமே சாரா தெரிகிறாள்.
அவர் தரவேண்டிய பணத்துக்கான நேரம் ஓடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அவர் குழந்தையைக் கடத்தி வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவரது வீட்டார் போலீசை அணுகி அவர்கள் ஒரு பக்கம் துரத்த, இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பினார் ஃபஹத் பாசில் என்பதுதான் கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஃபஹத் பாசில், இந்த முறை அவரது வழக்கத்தில் இருந்து மாறுபட்டு குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் கலகலப்பாக நடித்திருக்கிறார். சுயநலம் கொண்டவராக வரும் அவர் அவ்வப்போது அதற்கான பாவங்களை முகத்தில் காட்டும்போது அசந்து விடுகிறோம்.
இறந்து போன சிறுமி பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி சாரா பாலேகரின் குழந்தைத்தனமான அப்பாவித் தனமான நடிப்பு அப்படியே கொள்ளை கொண்டு விடுகிறது.
தன்னை ஒரு பெரிய மந்திரவாதியாக நினைத்துக் கொண்டு தன்னுடைய பெற்றோரை மந்திர சக்தியின் மூலம் தொலைத்து விட்டதாக நம்பும் அவள் நிலையை கடைசியில் நாம் பார்க்கும் போது கண்களில் நீர் மல்கி விடுகிறது.
ஜாலிக்கு ஜாலி ஆனால் வாலாட்டினால் காலி என்கிற ஏரியா தாதா அஸ்லம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேஷ் மஞ்ச்ரேகர் பின்னி எடுக்கிறார்.
இப்படி ஒரு நண்பன் கிடைத்தால் எப்படியும் வாழலாம் என்கிற அளவில் ஃபஹத் பாசிலின் நண்பராக வரும் எஸ்.எஸ்.ஷஷாங்க் கவர்கிறார்.
இவர்களுடன் நடித்திருக்கும் செளரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, கிருஷ்ணா, திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் திரைக்கதை நகர திறமையாக உழைத்திருக்கிறார்கள்.
படம் முழுவதும் தகதகவென ஜொலிக்கும் வித்தை தெரிந்து பணியாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ்.
ஒரு நம்ப முடியாத கதையை நயமாகச் சொன்னால் அதிலும் நம்மை நெகிழ்த்தி விட முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி, அதன் மூலம் குழந்தைகளையும் அவர்கள் மூலம் குடும்பங்களையும் கவரும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்.
முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதிக்குள் கதை வந்ததும் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு நெகிழ வைத்து நம்மை மகிழ வைத்துவிடுகிறது படம்.
டோண்ட் டிரபிள் தி டிரபிள் – சில்ட்ரன்ஸ் டிலைட்..!
– வேணுஜி