October 26, 2020
  • October 26, 2020
Breaking News
February 23, 2019

எல்கேஜி திரைப்பட விமர்சனம்

By 0 740 Views

லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம்.

அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான் இந்தப்படம்.

அப்படி அவர் உயர்கிற வழிகள் எப்படி குறுக்கும், நெடுக்குமாக அவரைப் பணிய குனிய வைக்கின்றன அவர் எப்படி வளைந்து நெளிந்து அந்த இடத்துப் போகிறார் என்பதை தற்கால அரசியல் நிகழ்வுகள் மூலமாகவே சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.பிரபு.

ஆர்ஜே பாலாஜிக்கு அறிமுகப்படம் இதைவிடக் கிடைக்காது எனலாம். நடிக்கத் தேவையே இல்லாத பாத்திரம் என்பதால அவர் அவராகவே வந்தாலே போதுமானதாக இருக்கிறது. ஒரு வார்டு கவுன்சிலராக இருந்து கொண்டு அதை வைத்து நீதிபதியே பரிந்துரை செய்தும் சீட் வாங்க முடியாத ‘பெரிய’ பள்ளியில் ஐந்து சீட்டுகள் வாங்குவது ‘பலே’.

உடல்நலம் குன்றிக்கிடக்கும் முதல்வரை வைத்து கவிதை ஒன்று பாடி பாலாஜி மக்கள் செல்வாக்கு அடைவது ஒரு கவிஞரை நினைத்து நகைக்க வைக்கிறது. இடைக்கால முதல்வராக இருக்கும் சிவாஜி ராம்குமாரை வளைத்து வளைத்து புகழ்பாடி தொட்டுப் பார்த்து பரவசித்து எம் எல் ஏ சீட்டு வாங்கிவிடுவதும் செம ‘லந்து.’

படத்தின் நாயகியாக வரும் ப்ரியா ஆனந்த், பாலாஜிக்கு நாயகியாக ஆகாமல் இருப்பது கோலிவுட்டில் ஆச்சரிய முயற்சி. கடைசி கடைசியாக ப்ரியா ஆனந்த் எதிர்க்கட்சிக்கு உதவி செய்வதாகப் போவது அதிர்ச்சி அளித்தாலும் முடிவு சுபமாக அமைவது மகிழ்ச்சி.

பாலாஜியின் தந்தயாக உண்மையான அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்தே வருவதும் நன்றாக இருக்கிறது. அவரது ஊரறிந்த மாடுலேஷனே ரசிக்க வைத்து விடுகிறது. அவரை ஒரு சீனில் ஓடவிட்டிருப்பது ஓவர்.

படத்தின் வில்லனாக வரும் அரசியல் தலைவராக உண்மையான அரசியல்வாதி ஜே.கே.ரித்தீஷே வருவதும் பொருத்தமாக இருக்கிறது. ராமராஜ பாண்டியன் கேரக்டரில் வரும் அவர், ராமராஜன் போன்றே பாட்டுப்பாடி காளையை அடக்குவதிலிருந்து ஒரே குத்தில் பதினைந்து பேரை வரிசைக்கட்டி தாக்குவது வரை ராமராஜனையே அலற வைக்கிறார். (அந்த வேடத்தில் ராமராஜனையே நடிக்க வைத்திருக்கலாமோ..?)

இத்தனை அனாயசமாக நடிக்கும் நடிகர் திலகத்தின் மூத்த மகன் ராம்குமார் கொஞ்சம் முன்னாலேயே சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்.

கார்ப்பரேட் அரசியல், டிரேன்டிங், மீம்ஸ் கிரியேட்டர்கள், மிக்ஸர், ஜல்லிக்கட்டு, பாலியல் புரோக்கர் பேராசிரியை, அரசியல்வாதியின் உடற்பயிற்சி, பசுமாட்டைக் காப்பதின் அவசியம் என்று பட்டியல் எடுத்து அதை நாசூக்காக அங்கங்கே செருகி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். அதிலும், ஒரு தெருவோர பேட்டியின்போது கேமராவைக் கண்டதும் தெருவில் போய்க்கொண்டிருக்கும் ஒருவர் வந்து “தல… மாஸ்…” என்று கத்திவிட்டுப் போவது ‘செம கலாய்..!’

திரைக்கதையாக படம் நகராமல் எடிட் செய்யப்பட்ட காட்சிகளாக நகர்வது மட்டும் ஒரு குறையாக இருக்கிறது. அதையும் தாண்டி ரசிப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் படத்தில் இருப்பதால் அந்தக் குறை தவிர்க்கப்படுகிறது.

கிளைமாக்ஸில் பாலாஜி ஆரோக்கியமான அரசியல் வசனம் பேசுவது படத்தை முழுமையடைய வைத்தும், அதை மாற்றி அவர் சமயோசிதமாக அப்படிப் பேசி ஏமாற்றுகிறார் என்று முடிப்பது ஏன் என்று புரியவில்லை.

அறுபது வருடங்கள் கழிந்தும் “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” பாடல் ரசிக்க வைப்பதும், அது இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதும் ஆச்சரியம். அதனை ரீமிக்ஸ் செய்தும் ரசிக்க வைத்த இசையமைப்பாளருக்குப் பாராட்டுகள்.

எல்கேஜி – கொடுக்கலாம் டபுள் புரமோஷன்..!

– வேணுஜி