ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மூவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு நாள் போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடிவில் அமிலத்தை ஊற்றி எரித்து விடுகின்றனர்.
அதை பார்த்துவிடும் நாயகி ஜனனியை துரத்தி அவரையும் பலமாக தாக்கி விட்டுத் தப்பிச் செல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மூவரையும் ஒவ்வொருவராக கடத்தி ஜனனி தாக்க, விஷயம் தெரிந்த அவரது காதலரும், சப் இன்ஸ்பெக்டருமான விஷாகன் விஷயம் அறிந்து அவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க நினைக்கிறார்.
அதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
நாயகி ஜனனிக்கு சஸ்பென்சான பாத்திரம். அது என்ன என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்வது நல்லது. ஒரு பக்கம் தைரியமான பெண்ணாக கயவர்களை கடத்தி தண்டிக்க நினைத்தாலும் இன்னொரு பக்கம் பதட்டத்துடன் பெற்றோருக்கு அந்த விஷயம் தெரியாமல் பார்த்துக் கொள்வது இருமுகம் காட்டி நடித்திருக்கிறார் ஜனனி.
காவல்துறை அதிகாரி வேடத்துக்கு விசாகனின் மிடுக்கு நன்றாகவே பயன்பட்டிருக்கிறது.
நீண்ட நாள் கழித்து ரமேஷ் கண்ணா நாயகியின் அப்பாவாக வந்து அன்பைப் பொழிகிறார்.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், வில்லன்களை காப்பாற்றும் வில்லங்க வக்கீலாக இருந்தாலும் தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்கிறார் அபிஷேக்.
இவர்களுடன் கௌஷிக், ஹரி விஜய், திவ்யா கிருஷ்ணன், அபிஷேக் சங்கர், சபிதா ஆனந்த், கலைமாமணி சிவன் சீனிவாசன், திலிபன், பாய்ஸ் ராஜன்,யுவஸ்ரீ சண்முகம், தீபிகா, காவ்யா அமிரா, அறந்தாங்கி மஞ்சுளா, பத்மினி, எஸ்.கே.குரு, ஜி.விக்னேஷ், ஆரஞ்சு மிட்டாய் பிரபாகரன், ராஜகுமாரி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.அபுபக்கரின் பின்னணி இசை, படத்தின் உணர்ச்சியை நன்றாக பதிவு செய்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மோகன்குமார் படத்தின் பட்ஜெட்டையும் தன்மையையும் அறிந்து அதற்கேற்ற வகையில் நியாயமாக பயணித்திருக்கிறார்.
இயக்குநர் ஏ.கே.குமார் சஸ்பென்ஸாக ஒரு ஆக்சன் திரில்லரை கொடுக்க நினைத்திருக்கிறார். லாஜிக் விஷயங்களை இன்னும் கவனம் செலுத்தி இருந்தார் முழுமையாக படத்தை ரசித்திருக்க முடியும்.
கயவர்களை கடத்தி அப்போதே அவர்கள் கதையை முடித்து இருந்தாலும் யாருக்கும் எந்த சந்தேகமும் வர வாய்ப்பு இருந்திருக்காது. அதுவும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை கச்சிதமாக செய்து முடித்திருக்க முடியும்.
கடைசியில் சட்டமும் அவர்களை கைவிட்டது என்ற நிலையில் முடிவை நாமே யூகித்துக் கொள்ளும்படி விட்டிருப்பது தேவையற்ற விஷயம்..
நிழல் – பழி தீர்க்கும் தழல்..!
– வேணுஜி