June 15, 2026
  • June 15, 2026
Breaking News
June 15, 2026

டபுள் ஆக்குபன்சி திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்து இருக்கிறது என்பது போல் எத்தனையோ கதைகளை பார்த்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எப்படி ஒருவரால் யோசிக்க முடியும் என்று தெரியவில்லை. 

தெய்வ நம்பிக்கை அற்றவராக இருக்கும் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினிக்கு உணர்வற்ற நிலையில் ஒரு குழந்தை பிறக்க, போஸ் வெங்கட் துணுக்குற்று தெய்வத்திடம் முறையிடுகிறார். 

பழிவாங்கும் நோக்குடன் (!) தெய்வமோ, அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுப்பதுடன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் அது வாழும் என்று சபிக்கிறது. 

ஊருக்கு தெரியாமல் அப்படியே தன் பிள்ளை/பெண்ணை வெளியூரில் கொண்டு போய் வைத்து வாழும் போஸ் வெங்கட் வினோதினி தம்பதி அகாலமாக இறந்து போக, அந்த ஆண்/பெண் பிறவி எப்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறது என்பதுதான் கதை.

நாயகனாகியிருக்கும் சந்தோஷ், ஒரு அறிமுகம் என்பதை நம்பவே முடியவில்லை. உடற்கட்டு, நடிப்பு இரண்டும் அவரை அனுபவ நடிகர் போலவே காட்டுகிறது. தமிழுக்கு இன்னொரு முழுமையான ஹீரோ கிடைத்திருக்கிறார் என்று நம்பலாம்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகி  இருப்பது பளிச் பளிச்சென்று படத்தில் வரும் இரண்டு நாயகிகள்தான்.

சந்தோஷின் பகல் தோற்றமாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் அந்த பாத்திரமாகவே மாறி இருப்பது ரசிக்க வைக்கிறது. தன்னை காதலிக்கும் வினோத் கிஷனிடம் தன் நிலையை சொல்ல முடியாமல் தவிப்பது நமக்கு பாவமாக இருக்கிறது.

சந்தோஷின் காதலியாக நடித்திருக்கும் சக்யுக்தா விஸ்வநாதன், காதலிக்க தோதான கவர்ச்சியுடன் இருக்கிறார். குடிக்க மாட்டேன் என்று பப்புக்கு வரும்போது நல்ல பெண்ணாக தோன்றுபவர், சந்தோஷை கால்களாலேயே கிடுக்கிப் பிடி போட்டு சல்லாபத்துக்கு அழைக்கும் போது பலே கில்லாடியாக தெரிகிறார்.

ஆரம்பத்தில் வில்லனாகதான் இருப்பார் என்று நம்மை நினைக்க வைத்த வினோத் கிஷன், போகப் போக இரண்டாவது ஹீரோவாக வருவது நல்ல முன்னேற்றம்.

சந்தோஷ் பற்றிய உண்மையை முதல் முதலாக அறிந்து கொள்ளும் விடிவி கணேஷ் அதை வைத்து செய்கிற காமெடிகள் எல்லாம் ரசிக்க தக்கவை.

இவர்களுடன் பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோர் படத்துக்கு தங்கள் பங்கை நிறைவு செய்து இருக்கிறார்கள்.

படத்தின் பலமாக அமைந்திருக்கின்றன ஒளிப்பதிவும், இசையும்.

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தி வண்ணங்களை வாரி இறைத்திருக்கிறார் என்றால் சாம்.சி.எஸ் பாடல்களையும் பின்னணி இசையையும் பக்காவாக தந்திருக்கிறார்.

தெய்வ குற்றம் என்று எடுத்துக் கொண்டால் அந்த வழியிலேயே போயிருக்கலாம். அல்லது மரபணு கோளாறு என்று விஞ்ஞான ரீதியாக எடுத்துக் கொண்டால் இந்த வழியாகவும் போயிருக்க முடியும். 

கதை நாயகன்/ நாயகி இரண்டும் கெட்டானாக வருவதைப் போலவே அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் தெய்வத்தில் ஆரம்பித்து விஞ்ஞானத்தில் வந்து முடிகிறது கதை. 

சுவாரசியமாக ஒரு கதையை சொல்லி விட்டால் எதை வேண்டுமானாலும் ரசிகர்கள் ரசித்து விடுவார்கள் என்கிற பொதுவான ஒரு எண்ணத்தில் கதை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் கந்தசுவாமி, ஆனால், அதற்கு சுவாரசியமான திரைக் கதையையும் அமைத்திருக்க வேண்டாமா? 

ஒரே உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் உணர்வுகள் மட்டும் மாறிக் கொண்டிருந்தால் பரவாயில்லை. டாண் என்று ஆறு மணி ஆனதும் விரித்து போட்டிருக்கும் பெண்ணின் தலைமுடி, கிராப் வெட்டிக்கொண்டு ஆணாக மாறுவதெல்லாம் ரொம்பவே லாஜிக் மீறல். 

இப்படி ஒரு கதையை எஸ்.ஜே சூர்யா யோசித்து இருந்தால் எப்படி காட்சிகளை அமைத்து இருப்பார் என்று கற்பனை செய்து இருந்தாலே இதை விட நன்றாக திரைக்கதை எழுதி ரசிக்க வைத்திருக்க முடியும். 

ஆனாலும் அங்கங்கே ரசிக்க முடிவதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

டபுள் ஆக்குபன்சி – ஆன்மிக ஹைபிரிட் சிந்தனை..!

– வேணுஜி