June 16, 2026
  • June 16, 2026
Breaking News
June 16, 2026

வள்ளுவன் திரைப்பட விமர்சனம்

By 0 14 Views

சமூக விரோதிகளை வேட்டையாடும் அந்நியன் டைப் கதைதான். அந்நியனில் கருட புராணத்தைச் சொல்லி கயவர்களை பலி வாங்கியது போல் இதில் வள்ளுவர் சொன்ன குறளை வைத்து பழிவாங்குவதால் இந்தப் பட ஹீரோவும் வள்ளுவன் ஆகிறான்.

நாயகன் சேத்தன் சீனு அவர் பாட்டுக்கு குப்பத்தில் பாட்டு பாடுவதும், குத்து போடுவதும், உணவுகளை சப்ளை செய்பவருமாக வாழ்ந்து வருகிறார். 

இன்னொரு பக்கம் போலீசால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கொல்லப்படுகிறார்கள் அந்த கொலைகளில் எல்லாம் இருக்கும் ஒரு ஒற்றுமை அவர்கள் உடலில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. 

இதை துப்பறிவதற்காக பணியமர்த்தப்படும் துணை கமிஷனராக பிரேம் குமார் வருகிறார். அவர்தான் கொலை செய்யப்படுபவர்களின் உடலில் இருக்கும் எழுத்துக்கள் ஒரு திருக்குறள் என்று கண்டுபிடிக்கிறார். 

அதனடிப்படையில் துப்பு துலக்கப் போய் ஒரு கட்டத்தில் நாயகன் சேத்தன் சீனு மேல் அவருக்கு சந்தேகம் வர, அதற்குப்பின் என்ன நடக்கிறது என்பதெல்லாம் மீதிப் படத்தில்.

நாயகனாக நடித்திருக்கும் சேத்தன் சீனு, வடசென்னை வாழ் இளைஞராக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவரது பளபளப்பான முகம் அதற்கு ஒத்து வரவில்லை. 

ஆனால் பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் அவரது கதையில் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஆட்டம், பாட்டம் ஆக்ஷனிலும் குறையில்லை. 

நாயகியாக ஆஷ்னா ஜாவேரி, நடித்திருப்பது படத்துக்கு பிளஸ் பாயிண்ட்தான். அவரும் ஆரம்பத்தில் பிராமண பெண் போல் அறியப்பட்டு பின்னர் அதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் ஆதரவற்றோருக்காக இல்லம் நடத்தி வரும் சராசரிப் பெண்ணாக வருகிறார்.

கிளைமாக்ஸ் ஆஷ்னாவின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது.

போலீஸ் துணை கமிஷனராக நடித்திருக்கும் பிரேம்குமார் எந்த பரபரப்பும் இல்லாமல் தன்னுடைய பாணியிலேயே அமைதியாக துப்பறிகிறார்.

இவர்களுடன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்டவர்கள் தங்கள் பணியைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவும், இசையமைப்பாளர் அஸ்வத்தும் படத்தின் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். 

பாடல்கள் எல்லாம் மீண்டும் கேட்கக்கூடியவையாக இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் சங்கர் சாரதி, பழிவாங்கும் ஒரு படத்தை பெரிய முதலீட்டில் தான் எடுக்க முடியும் என்பதை மாற்றி இந்த சின்ன முதலீட்டிலும் இப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். 

கதையும் திரைக்கதையும் நாம் அறிந்தவையாக இருந்தாலும் வள்ளுவர் வாக்கின்படி சமூக குற்றவாளிகளை கொன்று தீர்ப்பது புதிய ஐட்டமாக இருக்கிறது. 

வள்ளுவன் – பட்ஜெட் அந்நியன் ..!

– வேணுஜி