June 16, 2026
  • June 16, 2026
Breaking News
June 16, 2026

Disclosure Day ஆங்கிலப் பட விமர்சனம்

By 0 9 Views
ஹாலிவுட் படங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் அவர் இயக்கத்தில்  வெளியாகியுள்ள டிஸ்குளோசர் டே திரைப்படம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய அரசாங்க ரகசியங்களை வெளிக்கொணரும் போராட்டத்தை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதையாக அமைகிறது.
 
படத்தின் கதை இப்படி போகிறது.

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட வேற்று கிரகவாசிகள் பற்றிய அதிர்ச்சி உண்மையை உலகிற்கு வெளிப்படுத்த சைபர் பாதுகாப்பு நிபுணர் டேனியல் கெல்ல்னர் மற்றும் வானிலை அறிவிப்பாளர் மார்கரெட் ஃபேர்சைல்ட் ஆகியோர் முயல்கின்றனர். 

இவர்களின் பயணத்தில் தொடரும் அரசியல் சதிகளை எப்படி எதிர்கொண்டு அதை நிறைவேற்றுகிறார்கள் எ

ன்பதை ஆக்ஷன சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் சொல்லி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

 

வானிலை அறிவிப்பாளர் மார்கரெட் பேர் சைல்டாக நடித்திருக்கும் எமிலி பிளண்ட் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சிகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னையும் அறியாமல் அவர் இந்த பணிக்குள் இழுக்கப்படுவது அற்புதம். 

ஜோஷ் ஓ’கானரும் தனது பாத்திரத்தில் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். இருவரின் நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 

தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக உள்ளது. ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் அனைத்தும் ஹாலிவுட் தரம் குறையாமல் கவர்கின்றன.

குறிப்பாக சில துரத்தல் காட்சிகளும் உச்சக்கட்ட காட்சிகளும் அதற்கு உதாரணம். 

ஆனால், முதல் பாதியில் இதைத்தான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை அதைத் தர இயலாமல் போகிறது. 

கிளைமாக்ஸில் எமிலி ஏதோ ஒரு உண்மையை உலகிற்கு அறிவிக்க போகிறார் என்று பார்த்தால் மொட்டையாக படம் முடிகிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள அடுத்த பாகம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

இதனால் ஏதோ நடக்கப் போகிறது என்று காத்திருந்த நமக்கு அந்த எதிர்பார்ப்பு முழுமை அடையவில்லை.

ஏற்கனவே வேற்று கிரகவாசிகள் பற்றி நிறைய படங்கள் நாம் பார்த்திருக்கும் நிலையில் அதை தாண்டிய படமாக இது அமையவில்லை. அதேபோல் ஐ மேக்சில் வெளியாகி இருக்கும் இந்த படம் அதற்கான தேவையையும் பூர்த்தி செய்யவில்லை. 

டிஸ்குளோசர் டே – சொல்லாத ரகசியம்..!

– வேணுஜி