சென்னை, 15 ஜூன் 2026: நவீன உயர்தர சிகிச்சைகள் வழங்குவதில் தமிழ்நாட்டில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை-சென்னை, உலகிலேயே மிகவும் மேம்பட்ட இரண்டு இதயத்துடிப்பு புலநீக்க (PFA) சிகிச்சை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.
இத்திட்ட அறிமுகத்தின் வழியாக, உலகின் மிக அதிநவீன பி.எஃப்.ஏ (PFA) தொழில்நுட்பங்களான ‘மெட்டிரானிக் பல்ஸ்செலக்ட்’™ ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலும், ‘பயோசென்ஸ் வெப்ஸ்டர் வேரிபல்ஸ்’™ வடபழனி காவேரி மருத்துவமனையிலும் செயல்படுத்தப்படுகின்றன. இதில் வடபழனியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாதனமானது, மேம்பட்ட முப்பரிமாண (3D) இதய வரைபட தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘பல்ஸ்செலக்ட்’ மற்றும் ‘வேரிபல்ஸ்’ ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களும், 3D வரைபட வசதியுடன் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த மைல்கல் சாதனை, இதய மின்உடலியல் மற்றும் மேம்பட்ட இதயத் துடிப்பு சிகிச்சையில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் முன்னோடித்துவ திறனையும், முதன்மை நிலையையும் மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த முன்னணி சர்வதேச இதய சிகிச்சை நிபுணர்கள், காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழுவுடன் இணைந்து இந்த PFA திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன், இத்தொழில்நுட்பத்தின் கீழ் முதல் சிகிச்சை செயல்முறைகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கினர்.
இதயத்துடிப்பு புலநீக்க சிகிச்சை (PFA) என்றால் என்ன?
இதயத் துடிப்பு கோளாறுகளில், குறிப்பாக மிகவும் பொதுவான ‘ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்’ (AF) எனப்படும் சீரற்ற இதயத் துடிப்புப் பிரச்சினைக்கு இதயத்துடிப்பு புலநீக்க சிகிச்சை என்பது அடுத்த தலைமுறை தொழில்நுட்ப அடிப்படையிலான அதிநவீன சிகிச்சையாகும். வெப்பம் அல்லது அதிகப்படியான குளிர்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கமான பழைய சிகிச்சை முறைகளைப் போலல்லாமல், பி.எஃப்.ஏ தொழில்நுட்பமானது துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட்ட மின் அலைகளைப் பயன்படுத்துகிறது. இது இதயத் துடிப்பு கோளாறுகளுக்குக் காரணமான செல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அழிக்கிறது.
மின்னாற்றல் மூலம் சவ்வுகளில் துளை உருவாக்கல் (எலக்ட்ரோபொரேஷன்) என்று அழைக்கப்படும் இந்த புதிய முறை, பாதிக்கப்பட்ட இதயத் திசுக்களை மட்டும் குறிவைத்து குணமாக்குகிறது. அதே நேரத்தில், அருகில் உள்ள உணவுக்குழாய், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வெப்பம் அல்லது குளிர்ச்சியைப் பயன்படுத்தாத தொழில்நுட்பம் என்பதால், இது நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதாகவும், மருத்துவர்களுக்கு சிகிச்சை செயல்முறையை எளிதாக்கும் உத்தியாகவும் இருக்கிறது.
உலகளவில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதயத் துடிப்பு கோளாறுகளைக் குணப்படுத்துவதில் மிக முக்கியமான அண்மைக்கால கண்டுபிடிப்பாக பி.எஃப்.ஏ (PFA) அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
‘இதயத் துடிப்பு பரிசோதனைத் திட்டம்’ அறிமுகம்
இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட இதய நோய் சிகிச்சையில் முதுநிலை நிபுணர் டாக்டர் N.S. சிவகடாட்சம், மிகப்பெரிய மாற்றத்தை சாத்தியமாக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை வரவேற்றார். இதயத் துடிப்பு கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிறப்பான விளைவுகளை மேம்படுத்தும் திறன் கொண்டதாக இது இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
காவேரி மருத்துவமனையின் புதிய “ஹார்ட் ரிதம் பேக்கேஜ்” என்ற சிறப்பு பரிசோதனைத் திட்டத்தையும் இவ்விழாவின்போது டாக்டர் N.S. சிவகடாட்சம் தொடங்கி வைத்தார். நெஞ்சுப் படபடப்பு, மூச்சுத் திணறல், மயக்கம், விவரிக்க முடியாத சோர்வு அல்லது திடீரென இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகள், குறைந்த செலவில் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு, நிபுணர்களின் சிகிச்சையைப் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நீண்ட கால ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும்.
டாக்டர் தீப் சந்த் ராஜா (இயக்குநர், இதய மின்உடலியல் பிரிவு): “எங்கள் இரண்டு மையங்களிலும் மூன்று நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான நெஞ்சுப் படபடப்பால் அவதிப்பட்டு வந்த 69 வயதுப் பெண்மணி ஆவார். மருந்துகளால் குணமாகாத அவருக்கு, வலது தொடைப் பகுதி நரம்பு வழியாக வெறும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த PFA சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாளே மிகக் குறைந்த மருந்துகளுடன் அவர் வீடு திரும்பினார். பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் அதிவேகம் ஆகியவையே PFA தொழில்நுட்பத்தின் தனிச்சிறப்புகள்.”
காவேரி மருத்துவமனையின் இதய மின்உடலியல் துறை, PFA சிகிச்சை மட்டுமன்றி ECG, ஹோல்டர் மானிட்டரிங், எலக்ட்ரோபிசியாலஜி ஆய்வுகள் மற்றும் பேஸ்மேக்கர், டிஃபிபிரிலேட்டர்கள் போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தும் சிகிச்சைகளையும் முழுமையான 3D வரைபட வசதிகளுடன் வழங்கி வருகிறது.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்: சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் நோயாளிகளுக்கு உலகத்தரத்தில் சிகிச்சை வழங்குவதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். சிகிச்சைகளை எளிதாக்கும், பாதுகாப்பை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களே எங்களின் முதன்மைத் தேர்வாகும். இந்த PFA அறிமுகம் அதற்குச் சிறந்த சான்றாகும்.”
‘பல்ஸ்செலக்ட்’ மற்றும் ‘வேரிபல்ஸ்’ ஆகிய இரண்டு மேம்பட்ட வசதிகள் மூலம் தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த இதய சிகிச்சை இனி சென்னையிலேயே கிடைக்கும் வண்ணம் காவேரி மருத்துவமனை தன் முன்னிலையை நிலைநிறுத்தியுள்ளது.