April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தனுஷுக்கு விசு செக் – விசுவின் வாயடைக்கும் கவிதாலயா
February 18, 2020

தனுஷுக்கு விசு செக் – விசுவின் வாயடைக்கும் கவிதாலயா

By 0 588 Views
சமீபமாக ஒரு பேட்டியில் ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தனுஷ் கூறியிருந்தார்.
 
இதனைக் கேள்விப்பட்ட விசு “அப்படி தனுஷ் நெற்றிக்கண்ணில் நடிப்பதாக இருந்தால் அதைத் தயாரித்த கவிதலயாவிடம் அனுமதி பெறுவதைவிட அந்தப் படத்தின் கதாசிரியரான தன்னிடம்தான் உரிமை கோர வேண்டும். இல்லாவிட்டால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்…” என்று கூறியிருந்தார்.
 
‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்தது கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’ நிறுவனம்தான் என்றிருக்க, அதற்கும் விளக்கம் கொடுத்த விசு மேற்படி படத்தில் கதாசிரியரான தனக்கு தர வேண்டிய ஊதியத்தைத் தராததால் தன்னிடம்தான் காப்புரிமை குறித்துப் பேச வண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் இது குறித்த பத்திரிகை செய்திகளைப் பார்த்த கவிதாலயா சுதாரித்து ஒரு பத்திரிகைச் செய்தி அனுப்பியுள்ளது. அதன் விரங்கள் விசுவின் வாயை மூடுவதாக இருக்கிறது. அதன் பிரதி கீழே…  
 
“கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை
கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில்
திரைப்படத்தயாரிப்புத்துறையில்  வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம்.
 
தமிழ் திரையுலக ஜாம்பவான் கே பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக்
காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால்,
ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா
எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த
மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.
 
இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய
தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம்.அது குறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை
வெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர்
என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை
அணுகவும் இல்லை.
 
நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் திரு. விசு, கதாசிரியர்
என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு
குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை
மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது.
 
மேலும், திரு. விசு அவர்கள் கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’
திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும்,
முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன்
நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும்
துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன்
மூலம் தெளிவுபடுத்துகிறோம்.நன்றி..!”
 
இருந்தாலும் விசு அத்தனை சீக்கிரம் வாயை மூடுகிற ஆசாமி இல்லை. பார்ப்போம்… என்ன சொல்கிறார் என்று.
 
ஆனால் ஒன்று… ஆளில்லாத கடையில் எதற்கு இத்தனை பேர் டீ ஆற்றுகிறார்கள் என்பதுதான் நம் கேள்வி..!