June 14, 2026
  • June 14, 2026
Breaking News
April 15, 2026

ரூம் பாய் திரைப்பட விமர்சனம்

By 0 241 Views

தன் தந்தையைக் காணாமல் இளம்பெண் ஒருத்தி போலீசில் புகார் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் ஏலகிரியில் நடந்து வரும் தங்கும் விடுதி ஒன்றில் பணியாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். தப்பிக்க முயற்சிப்பவர்கள் மீது விடுதி நிர்வாகம் வன்முறையை ஏவி விடுகிறது.

மூன்றாவது கதையாக சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நாயகன் நிகில் வெளியே வந்து ஹோட்டல் வேலையில் சேர்கிறார். அங்கே பயிற்சி எடுத்ததும் மேற்படி ஏலகிரியில் நடந்து வரும் விடுதியில் வலியச் சென்று வேலைக்குச் சேர்கிறார்.

அங்கே பணியாளர்களை கொடுமைப்படுத்தும் மேலாளரை அடித்துக் கொல்வதுடன் அங்கே இருக்கும் சில வீடியோ ஆதாரங்களை கைப்பற்றுகிறார். 

அவரது நோக்கம் என்ன..? காணாமல் போன இளம் பெண்ணின் தந்தை கிடைத்தாரா? ஏலகிரி விடுதி நிர்வாகத்தினரின் பின்னணி என்ன..? இவற்றுக்கிடையே தொடர்புகள் உள்ளனவா..? என்பதெல்லாம் பின் பாதியில் சொல்லப்படுகிறது.

நாயகன் நிகில் அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். ஆக்சன் காட்சிகளுக்கு தோதான உடல்வாகும் அதற்கான பயிற்சியும் எடுத்திருப்பது தெரிகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் கோலிவுட் எப்போதும் வரவேற்கும். 

நாயகி ஹர்ஷா, கேரளா பெஹமின் அந்தந்த பாத்திரங்களில் பொருந்துகிறார்கள். சிறுமி பெஹமின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவளுக்கு நேரும் கொடுமையை கேள்விப்படுபவர்கள் எவரும் பொறுமையாக இருக்க மாட்டார்கள். 

வில்லத்தனத்துக்கு ஏற்றவராக இருக்கிறார் அருண் ராஜா. 

இமான் அண்ணாச்சியும், காத்து கருப்பு கலையும் அங்கங்க நகைச்சுவையைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். 

இவர்களுடன் பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, பிரபாகர் உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிரப்புகிறார்கள்.

மும்பை மாடல் அழகி நிதி மரோலியின் நடனம் சூடான பின்பாதிப் படத்தில் குளுமை சேர்க்கிறது.

சி பாரதிராஜன் ஒளிப்பதிவு ஓகே.

வேலன் சகாதேவனின் இசை கவனிக்க வைக்கிறது. பாடல்களுக்கான இசையில் நிறைய உழைத்திருப்பது புரிகிறது.

சம்பந்தம் இல்லாத மூன்று லைன்களை பிடித்து நம்மை நிறைய கேள்விகள் கேட்க வைத்து இரண்டாவது பாதியில் அவற்றை இணைத்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ஜெகன் ராயன்.

ஆனால் பின் பாதி ஃப்ளாஷ்வாக்கில் அவர் சொல்லும் கதை, எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருந்தாலும், குடும்ப உறவுகளை ரொம்பவும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. 

ஆனால் இளவயது கதாநாயகன் கதைக்கொள் இருந்தும் வேறு எந்த கெட்ட பழக்கங்களையும் வைக்காமல் அண்ணன் தங்கைக்கான நெகிழ்ச்சியான சகோதரத்துவம் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

ரூம் பாய் – தங்கைக்கோர் கோபம்..!

– வேணுஜி